Published:Updated:

காலை உணவைச் சாப்பிடாமல் தவறவிடும் குழந்தைகள்! -எச்சரிக்கும் மருத்துவர்கள்

``பல குழந்தைகள் முதல் நாள் இரவு உணவுக்குப் பிறகு, மறுநாள் மதிய உணவுவரை, கிட்டத்தட்ட 14 மணி நேரம் பட்டினியாக இருக்கின்றனர்"

குழந்தைகள் - காலை உணவு
குழந்தைகள் - காலை உணவு

`குழந்தைகளுக்குப் படிப்பு மட்டுமே போதாது. பள்ளிகளில் அவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகள் முறையாக எடுக்கப்பட வேண்டும்; தினமும் சில மணி நேரமாவது அவர்கள் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும்' - பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் விஷயம் இது. இதில் புதிதாக இன்னொரு விஷயத்தையும் இணைக்கிறது, சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர்களின் குழு.

குழந்தைகள் காலை உணவு
குழந்தைகள் காலை உணவு

மருத்துவர்கள் முன்வைக்கும் கேள்வி இதுதான். ``பல குழந்தைகள் காலையில் பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் காலை உணவைத் தவறவிட்டு விடுகிறார்கள். அது போன்ற சூழல்களில், முதல் நாள் இரவு உணவுக்குப் பிறகு, மறுநாள் மதிய உணவுவரை, கிட்டத்தட்ட 14 மணி நேரம் அவர்கள் பட்டினியாக இருக்க நேர்கிறது. அந்தச் சோர்வில் இருக்கும் அவர்களால், பள்ளியில் காலை வேளை பரபரப்பு வகுப்புகளை எவ்வாறு கவனிக்க முடியும்? அதற்கு அவர்களுக்கு எப்படி எனர்ஜி கிடைக்கும்?

அலர்ட் பெற்றோர்களே... 10-ல் 8 குழந்தைகள் ஒருநாளில் ஒரு மணி நேரம்கூட விளையாடுவதில்லை! #WHOReport

எல்லாக் குழந்தைகளுக்கும் விளையாட்டும் உடலுழைப்பும் அவசியம்தான். ஆனால், அதைவிட முக்கியம், அவர்களின் காலை உணவு. சென்னையைப் பொறுத்தவரையில் ஐந்தில் ஒரு குழந்தை, நேரமின்மை காரணமாக காலையில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவதே இல்லை என்கின்றன புள்ளிவிவரங்கள். உடலுக்குச் சத்தும் எனர்ஜியும் கொடுக்கும் சாப்பாட்டைத் தவறவிடும் குழந்தைகளுக்கு, விளையாட்டு, உடலுழைப்புக்கான தெம்பு எங்கிருந்து கிடைக்கும்?'' என்று கேட்கும் மருத்துவர்கள்,

காலை உணவு
காலை உணவு

``இந்திய அரசின் தரவுகளின்படி, கால்வாசி குழந்தைகள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள். சென்னை போன்ற பெருநகரங்களில், ஏறத்தாழ 30% குழந்தைகள் உடல்பருமனோடு இருக்கிறார்கள்... நகரவாசிக் குழந்தைகள்தாம் பெரும்பாலும் காலை உணவாக ஸ்நாக்ஸை எடுத்துக்கொள்கின்றனர். அதனாலேயே இளம் வயதில் சர்க்கரைநோய், இதயநோய் போன்றவற்றால் அவர்கள் பாதிக்கப்பட நேர்கிறது'' என்று கூறி எச்சரிக்கின்றனர்.

சமூக நலத்துறை மற்றும் கல்வித்துறை காலை உணவுக்கான திட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும்.
`அட்டெண்டன்ஸ், எக்ஸாம், மார்க்!' ரேஸில் குழந்தைகள்... யோசியுங்கள் பெற்றோர்களே!

உணவுதான் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. அதிலும், குழந்தைகளுக்கு நிச்சயமாக நல்லுணவு கொடுக்கப்பட வேண்டும். ஒரு பக்கம் உணவு இல்லாமல் வாடுகிறார்கள், வறுமை நிலையில் உள்ள குடும்பத்துக் குழந்தைகள். இன்னொரு பக்கம், வசதியான வீட்டுக் குழந்தைகளும் நேரமின்மையால் உணவைச் சாப்பிடாமல் போகிறார்கள். பெற்றோர்கள் ஓடியாடிச் சம்பாதித்து, கம்ப்யூட்டர் முதல் கார்வரை வீட்டில் பொருள்கள் எல்லாம் வாங்கி நிறைத்தும், குழந்தைகளின் வயிறு நிறையாமல் பட்டினியாக இருப்பது எவ்வளவு பெரிய முரண்?

காலை உணவு
காலை உணவு
உடலுக்குச் சத்தும் எனர்ஜியும் கொடுக்கும் சாப்பாட்டைத் தவறவிடும் குழந்தைகளுக்கு, எங்கிருந்து விளையாட்டு, உடலுழைப்புக்கான தெம்பு கிடைக்கும்?
மருத்துவர்கள்

இந்த இரு தரப்புக் குழந்தைகளுமே, நல்ல உணவு உண்ண வேண்டும். ஓடி ஆடி விளையாடும் வயதிலுள்ள ஒரு குழந்தைக்கு, உணவு இல்லை என்பது மிகப்பெரிய வன்முறை. அதுபோலவே, உணவு சாப்பிட நேரமில்லாத ஓர் ஓட்டத்தில் குழந்தைகளைத் துரத்திக்கொண்டிருப்பதும் வன்முறையே. சமூக நலத்துறை மற்றும் கல்வித்துறை சார்பில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இலவச மதிய உணவுத் திட்டத்தைப்போல, காலை உணவுக்கான திட்டம் கொண்டு வரப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், மேற்கொண்டு அவை செயல்படுத்தப்படவில்லை. அரசு அந்தத் திட்டத்தை விரைந்து கையில் எடுக்க வேண்டும்.