Published:Updated:

பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதில் கவனம் அவசியம்... சொல்கிறார்கள் மருத்துவர்கள்!

காய்கறிகள்
காய்கறிகள்

பச்சைக் காய்கறி சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நிலையில், அது மரணத்தைக்கூட ஏற்படுத்தலாம் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மூன்றாண்டுகளுக்கு முன் நேர்ந்த மலையாள நடிகர் கலாபவன் மணி, மரணம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதது. நண்பர்களுடன் மது அருந்தியபோது மயங்கி விழுந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்ததாகக் கூறப்படுகிறது. உடற்கூறாய்வில், காய்கறிகளுக்கான பூச்சிக்கொல்லி மருந்து அவர் உடலில் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. விஷம் தந்து அவரைக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதால் வழக்கு சி.பி.ஐ-க்கு மாறியது.

Vikatan

விசாரணை நடத்திய சி.பி.ஐ, கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், இறக்கும்போது அவர் உடலில் 4 மில்லிகிராம் அளவுக்கு எத்தனால், சிறிதளவு கஞ்சா கலந்திருந்தது என்று கூறிய சிபிஐ, எத்தனால் கலந்து மது அருந்தும் பழக்கம் அவருக்கு இருந்துள்ளதாகவும், கல்லீரல் பிரச்னைக்காக எடுத்துக்கொண்ட ஆயுர்வேத மருந்துகளில் கஞ்சா சேர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறியிருந்தது. மேலும், அவர் பச்சைக் காய்கறிகள் உண்ணும் பழக்கமுடையவர் என்பதால் அவர் உடலில் Chlorpyrifos பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது என்றும் சிபிஐ கூறியிருந்தது.

`கலாபவன் மணி மரணத்துக்கு என்ன காரணம்?’ - 35 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்த சி.பி.ஐ

ஆரோக்கியத்துக்குப் பச்சைக் காய்கறிகள் சாப்பிடுதல் அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நிலையில், அது மரணத்தைக்கூட ஏற்படுத்தலாம் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால், மருத்துவர்களிடையே பேசியபோது, இதில் முழுக்க உண்மையில்லை என்பது தெரிய வந்தது. காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவதில் உண்டாகும் நன்மைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து மருத்துவர்களிடம் பேசினோம்.

பச்சைக் காய்கறிகள் நீரிழிவு, கொழுப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும்.
டாஃப்னி, ஊட்டச்சத்து நிபுணர்
ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி
ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி

ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி, "பச்சையாகக் காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. வேக வைத்தோ சமைத்தோ சாப்பிடுவதைவிட பச்சையாகச் சாப்பிடும்போது சத்துகள் அதிகம் உடலில் சேரும். பச்சைக் காய்கறிகள் நீரிழிவு, கொழுப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும். காய்கறிகளில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. வைட்டமின்-சி, தாதுக்கள் பச்சைக் காய்கறிகளில் நிறைந்துள்ளன. சமைக்கும்போது வைட்டமின்-சி குறைந்துவிடும். ஆரஞ்சு, மஞ்சள், பச்சைநிறக் காய்கறிகளான கேரட், வெள்ளரி, புரொக்கோலி போன்றவற்றில் வைட்டமின்-ஏ நிறைந்திருக்கும்.

Vikatan
வயிற்று உபாதை உள்ளவர்கள், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்கள், எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள், மதுப்பழக்கம் உடையவர்கள், புற்றுநோயாளிகள் பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
டாஃப்னி, ஊட்டச்சத்து நிபுணர்

இவ்வாறு நன்மைகள் ஒரு பக்கம் கிடைக்கின்றன என்றாலும், இந்த பச்சைக் காய்கறிகளால் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இயல்பாகவே பச்சைக் காய்கறிகள் செரிமானத்துக்கு நீண்டநேரம் எடுத்துக்கொள்ளும். சத்துகள் தரும் என்றாலும் இவை ஜீரணமாவதற்கு உடலின் சத்துகளை நிறையவே உறிஞ்சிக்கொள்ளும். இதனால் உடல் தளர்வடையலாம். எனவே, சூழலைப் பொறுத்து நாம் பச்சைக் காய்கறிகளை உட்கொள்ளலாம். பச்சைக் காய்கறிகள் வயிற்றை நிரப்பும் என்றாலும் சாதாரணமாகச் செரிமானக் கோளாறுகள் ஏற்படுத்துவன. எனவே, வயிற்று உபாதை உள்ளவர்கள், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்கள், எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள், மதுப்பழக்கம் உடையவர்கள், புற்றுநோயாளிகள் பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

காய்கறிகள்
காய்கறிகள்
18 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்ததா பச்சைக் காய்கறிகள்?

ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்கள் சாப்பிடலாம். காய்கறிகளைச் சமைக்கும்போது புரதமும் கார்போஹைட்ரேட்டும் அப்படியே இருந்தாலும் ஊட்டச்சத்துகள் எல்லாமே போய்விடும். இன்றைய சூழலில் அதிகம் நடைபெறும் பூச்சிக்கொல்லி மருந்துச் சேர்க்கை பல நோய்களுக்குக் காரணமாக அமைகிறது. காய்கறிகளின் தோல்களில் ரசாயன மருந்துகள் இருக்கும் என்பதால் காய்கறிகளைத் தோலுரித்து சுத்தமாகக் கழுவிவிட்டுச் சாப்பிடுவதுதான் நல்லது. மாவுச்சத்து இருப்பதால் கலோரிகள் அதிகமாக உள்ள கிழங்குகளை டயட்டில் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்" என்றார்.

கதிகலங்கவைக்கும் கலப்படம்!

குடல் மற்றும் இரைப்பை மருத்துவர் மகாதேவன் பேசுகையில், "தூய்மை இல்லாத இடங்களில் வளரும் காய்கறிகள் ஆரோக்கியக் கேடு. குறிப்பாக கீரைகள், நிறைய வீட்டுப் பகுதிகளில் சுகாதாரமற்ற இடங்களில் வளர்க்கப்படும். அவற்றைச் சமைக்காமல் சாப்பிடுவது உடலுக்குக் கேடு. மாசுபடாத இயற்கைச் சூழலில் வளரும் காய்கறிகளையே சாப்பிட வேண்டும். அந்த வகையில் கேரட், வெள்ளரி போன்ற காய்கறிகள் சத்துகள் நிறைந்தவை.

எத்தகைய மாமிசங்களையும் செரித்திடும் அளவுக்குச் சுரப்பிகள் விலங்குகளிடம் உண்டு. மனிதர்களுக்கு அப்படியல்ல.
மகாதேவன், குடல் மற்றும் இரைப்பை மருத்துவர்
இரைப்பை, குடல் மருத்துவர் மகாதேவன்
இரைப்பை, குடல் மருத்துவர் மகாதேவன்

காய்கறிகள் சாப்பிடுவதில் உள்ள நன்மைகள் எனில், அவை உடல் பருமனைக் குறைக்கும். கொஞ்சமாகச் சாப்பிட்டாலே பசியும் ஓரளவு அடங்கிவிடும். ஆனால், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால் சிலருக்குச் செரிமானக் கோளாறு ஏற்படலாம். எத்தகைய மாமிசங்களையும் செரித்திடும் அளவுக்குச் சுரப்பிகள் விலங்குகளிடம் உண்டு. மனிதர்களுக்கு அப்படியல்ல. சிலருக்கு சில உணவுகளின் தன்மைகளும் சேர்மானங்களும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஒரு காலத்தில் பச்சைக் காய்கறிகள் சாப்பிட்டோம். பின்பு, வேக வைத்துச் சாப்பிட்டோம். இப்போது, மசாலா, உப்பு போன்றவற்றை சுவைக்காகக் கலந்து சாப்பிடுகிறோம், அவ்வளவுதான்.

Vikatan
உடல் உபாதை, தொற்றுநோய்ப் பிரச்னை என நினைத்து ஆன்ட்டிபயாட்டிக் உட்கொள்வார்கள். ஆனால், நார்ச்சத்து நிறைந்த கீரை போன்றவற்றை அதிகளவு சாப்பிட்டதால் தான் சிக்கல் உண்டாகியிருக்கும்.
மகாதேவன், குடல் மற்றும் இரைப்பை மருத்துவர்

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம்தான் எனினும், அவை வயிற்றுப்போக்கு, வாயுச் சிக்கல்கள் ஏற்படுத்தும். வயிறு நிறைந்திருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். வேறு ஏதோ தொற்றுநோய்ப் பிரச்னையால்தான் இந்த உடல் உபாதை வந்திருக்கிறது என நினைத்து ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் உட்கொள்வார்கள். ஆனால், நார்ச்சத்து நிறைந்த கீரை போன்றவற்றை அதிகளவில் சாப்பிட்டதால்தான் சிக்கல் உண்டாகியிருக்கும். உடனே அந்த வகை உணவுகளைத் தவிர்த்துவிட்டு தயிர் அல்லது மோர் சாப்பிட்டால் உபாதை சரியாகிவிடும்.

தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை... பல்வேறு  நோய்களைத்  தடுக்கும் கீரைகள் #VikatanPhotoCards
பழங்கள்
பழங்கள்
எந்த மாதிரிச் சாப்பிடுவதை நமது உடல் ஏற்கும் எனத் தெரிந்து சாப்பிட வேண்டும். முறையான விளைச்சலில் கிடைக்கிற காய்கறிகளே சிறந்தவை
மகாதேவன், குடல் மற்றும் இரைப்பை மருத்துவர்

பச்சைக் காய்கறிகள் சாப்பிடக் கூடாது என்று நினைக்கத் தேவையில்லை. ஆனால், எந்த மாதிரிச் சாப்பிடுவதை நமது உடல் ஏற்கும் என்பதைத் தெரிந்து சாப்பிட வேண்டும். சிலருக்குப் பீட்ரூட், வாழைத்தண்டு, வாழைப்பூ, கீரை ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். முறையான விளைச்சலில் கிடைக்கிற காய்கறிகளே சிறந்தவை" என்றார்.

இயற்கை மருத்துவர் தீபா பேசினார். "அசைவ உணவைத்தான் முறையாகக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும் என நினைக்கின்றனர். அப்படியல்ல. காய்கறிகளையும் முறையாகக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். தோலில் உள்ள கிருமிகள் காய்கறிகளுக்கு உள்ளே சென்றுவிடுகிற ஆபத்து உண்டு. பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக் கழுவுவதைவிட ஓடுகிற தண்ணீரில் கழுவுதல் நல்லது. முடியாவிட்டால், பிரஷ் மாதிரி எதையாவது கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

மண்ணுக்குள் விளையும் பொருள்களை சமைப்பதற்கு முன் கட்டாயமாகச் சுத்தம் செய்யப்பட வேண்டும். கழுவிவிட்டால் தோலுடனேயேகூட நறுக்கிச் சமைக்கலாம். கருணைக்கிழங்கைத் தோல் சீவிவிட்டுக் கழுவலாம். காலிஃபிளவர் என்றால், அவற்றை நறுக்கி உப்பு கலந்த நீரில் கழுவ வேண்டும். வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்துக் கொஞ்சம் வேக விட்டு எடுக்கலாம்.

இயற்கை மருத்துவர் தீபா
இயற்கை மருத்துவர் தீபா

திராட்சைகளை காம்பிலிருந்து பிரிப்பதற்கு முன்பே நீரில் போட்டு வைக்க வேண்டும். கத்திரிக்காய்களில் சின்னச் சின்ன ஓட்டைகள் இருக்கும். முதலில் காய்களைக் கழுவிவிட்டு, பின்னர் ஓட்டைப் பகுதிகளை நறுக்கிவிட்டு மீண்டும் காய்களைக் கழுவ வேண்டும். கருணைக்கிழங்குக்கும் அதே முறைதான். நறுக்கியதும் இன்னொரு முறை கழுவ வேண்டும்.

ஆப்பிளை லேசாகக் கீறினால் பேப்பர் மாதிரித் தோல் உரிகிறதெனில் பழத்தில் மெழுகைத் தடவியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
தீபா, இயற்கை மருத்துவர்

கீரைகள் அதிகம் ஃபுட் பாய்சன் ஏற்படுத்துவன. மோசமான இடங்களில் வளரும் அந்தச் செடிகளை சரியாகச் சுத்தம் செய்யாமல் சமைத்துச் சாப்பிடுவதே காரணம். கீரைகளை அலசிவிட்டு நன்றாக உதறிவிட வேண்டும். அவற்றில் ஒட்டியிருக்கும் மண்துகள்கள் உதிர்ந்துவிடும். பின்னர்தான் அவற்றைச் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆப்பிளை லேசாகக் கீறினால் பேப்பர் மாதிரித் தோல் உரிகிறதெனில் பழத்தில் மெழுகைத் தடவியிருக்கிறார்கள் என்று அர்த்தம். எனவே, அவற்றைக் கழுவி தோலுரித்துச் சாப்பிடுவது அவசியம். விதையில்லாத பழங்களைச் சாப்பிடக் கூடாது" என்றார்.

பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவதில் கவனம் இருந்தால் ஆபத்தில்லாத ஆரோக்கியம் பெறலாம்!

அடுத்த கட்டுரைக்கு