Published:Updated:

மூக்கடைப்பு முதல் மூட்டுவலிவரை... குளிர்காலத்தில் மருந்தாகும் மஞ்சள்!

மஞ்சள்
மஞ்சள்

சித்த மருத்துவத்தில் தொடங்கி இறை வழிபாடுகள்வரை அனைத்திலும் பயன்படும் மஞ்சள், குளிர் காலத்துக்கு உகந்த மருந்துப் பொருளாகவும் இருக்கிறது.

விடிந்தும் அகலாத இருளும் பனியும், விழாக்கோலம் பூண்ட தெருக்களுமாக எல்லோருக்கும் பிடித்தது குளிர்காலம். கூடவே பல உடல் உபாதைகளையும் கூட்டிவரும்.

சளி, வறட்டு இருமல், தொண்டைவலி, வீக்கம், காய்ச்சல், வறண்ட சருமம் என அடுக்கடுக்காக நம்மை அட்டாக் செய்யத்துடிக்கும் இந்த `சில் ' சீசனிலிருந்து தப்பிக்க நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கிறது அற்புத தீர்வு. அதுதான் மஞ்சள்.

மஞ்சள்
மஞ்சள்

ஏழைகளின் குங்குமப்பூ என்றழைக்கப்படும் இந்த மஞ்சளின் பூர்வீகம் இந்தியாதான்.

உலகம் முழுதும் அன்றாடம் உணவுக்கும் மருத்துவத் தேவைக்கும் பயன்படும் மஞ்சள், குறிப்பாக நம் தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்தது. சித்த மருத்துவத்தில் தொடங்கி இறை வழிபாடுகள்வரை அனைத்திலும் பயன்படும் மஞ்சள், குளிர் காலத்துக்கு உகந்த மருந்துப் பொருளாகவும் இருக்கிறது.

சோயா பீன்ஸைவிட 20 மடங்கு அதிக புரதம், தாய்ப்பால் சுரப்பு - கடல்பாசிகளின் அற்புத பலன்கள்!

உணவின் நிறத்தை மாற்றி சுவையை ஏற்றி, நச்சுகளை நீக்கும் இந்த மஞ்சளின் மூலப்பொருள் ``குர்குமின்". இது இயற்கையாகவே பல்வேறு மருத்துவத் தன்மைகளைக் கொண்டது. மஞ்சளின் மகிமைக்கு மூலமே இந்த குர்குமின்தான்.

மஞ்சள்
மஞ்சள்

சரி, குளிருக்கும் குர்குமினுக்கும் என்ன தொடர்பு?

``குளிர்காலத்தில், நம் உடலின் வெப்ப அளவு மிகவும் குறைந்து விடுவதால் எளிதில் நோய்கள் நம்மைத் தாக்க வாய்ப்புள்ளது. மஞ்சள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சுவாசக் கோளாறுகள் முதல் மூட்டுவலி பிரச்னைகள்வரை தீர்க்கும். சளியை நீக்க வல்லது" என்கிறது சித்த மருத்துவம்.

இது பற்றி சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன் பேசியவை...

``மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. இந்தியாவில் புனிதப் பொருளாகவும் அருமருந்தாகவும் பயன்படும் மஞ்சளின் மகிமைக்குக் காரணம் அதில் அடங்கியிருக்கும் குர்குமின்.

இந்த குர்குமின் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது

சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்
சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்

மஞ்சளில் `கப்பு மஞ்சள், கரி மஞ்சள், மர மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என நான்கு முக்கிய வகைகள் உண்டு. தவிர இன்னும் சில வகைகளும் உண்டு. அவை தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தப்படுகின்றன.

உணவுக்கு ஒரு மஞ்சள், முகத்திற்கு ஒரு வகை மஞ்சள் என மஞ்சளின் பயன்பாடு மாறுபடும்.

தலைவலி, நீர் கோத்தல், மூக்கில் நீர்வடிதல், வீக்கம், சளி, இருமல், தொண்டைவலி மற்றும் வறண்ட சருமம் முதலியவை குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான பாதிப்புகள்.

கலப்படம், விலை குறைவு, ஆரோக்கியக் குறைபாடு... தரமான பேரீச்சம்பழத்தைக் கண்டறிவது எப்படி?

மஞ்சள், குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்புக்குச் சிறந்த மருந்து. விரலி மஞ்சளை, பெரியவர்களைப் பாதிக்கும் காசநோயினை விரட்டும் இன்ஹேலர் என்று சொல்லலாம். விரலி மஞ்சளை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு அந்தப் புகையை மூக்கின் வழியாக உள்ளே இழுக்க மூக்கடைப்பு மற்றும் இரைப்பு கட்டுப்படுத்தப்படும்.

அதே போல் குளிர் காலத்தில் ஏற்படும் கண் வலியிலிருந்து விடுபட, ஒரு டீஸ்பூன் நசுக்கிய மஞ்சளை சுத்தமான நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிய நீரில் துணியை நனைத்து, கண்களின் மேல் (இமை மூடி) போட்டுக் கொள்ளலாம்.

மஞ்சள்
மஞ்சள்

மஞ்சள் சிறந்த இயற்கை காஸ்மெட்டிக். கஸ்தூரி மஞ்சளை நன்கு குழைத்து நீர் விட்டுப் பூசி வர குளிர் காலத்தில் ஏற்படும் வறண்ட சருமப் பிரச்னைகள் நீங்கி சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

குளிர்காலத்தில் காரம் சற்று அதிகமாக உண்ண வேண்டும். மேலும் குளிர் காலத்தில் அஜீரணக் கோளாறுகள் அதிகமாக ஏற்படும். அவற்றிலிருந்து விடுபட உணவில் சற்றே அதிகமாக மஞ்சளைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

மட்டுமன்றி தொடர்ந்து மஞ்சள் சேர்த்துக்கொண்டால் குளிர் காலத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் மூட்டு இணைப்பு வலிகளும் குறையும்" என்றார் .

மஞ்சள்
மஞ்சள்

அருமருந்தாக விளங்கும் இந்த மஞ்சள்தூளை, கடைகளில் ரெடிமேடாக வாங்குவதை தவிர்த்து விட்டு, மஞ்சளை வாங்கி நாமே அரைத்துப் பயன்படுத்துவது சிறந்தது. மஞ்சளை சமையலில் சேர்த்துக் கொள்கிறோம். அதைத் தவிர்த்து எப்படி உட்கொள்வது எனக் கேட்பவர்கள் மஞ்சள்தூளை பசும்பாலில் கலந்து பருகலாம்; தேனில் மஞ்சள் சேர்த்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

இந்த `சில்' சீசனில் மஞ்சளைக் கொஞ்சம் கூடுதலாகப் பயன்படுத்துவது குளிரின் தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த கட்டுரைக்கு