Election bannerElection banner
Published:Updated:

முதலாமாண்டு கல்லூரி மாணவர்களைப் பாதிக்கும் `ஃபிரெஷ்மேன் 15' - காரணங்கள், தீர்வுகள்! #Freshman15

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள் ( Pixabay )

இந்தப் பிரச்னையை மேற்கத்திய நாடுகளில் இருக்கும் இளைஞர்களிடம் அதிகமாகக் காண முடிகிறது. தற்போது நமது நாட்டிலும் இதைக் காண முடிகிறது.

பள்ளிப் பருவத்தை நிறைவுசெய்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைக்கும் இளைஞர்களிடம் பல மாற்றங்களை உணர முடியும். கூட்டுக்குள் அடைந்திருந்த பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்ததுபோன்ற உணர்வுடன் கல்லூரிக் காலத்தை அனுபவிப்பார்கள். உயர்கல்விக்காகத் தங்கள் சொந்த ஊரைவிட்டு, மாநிலத்தைவிட்டு ஏன் நாட்டை விட்டுக்கூட செல்லும் இளைஞர்கள் ஏராளம். அவ்வாறு ஒரு சூழலிலிருந்து வேறு சூழலுக்குச் செல்லும் மாணவர்களுக்கு 'ஃபிரெஷ்மேன் 15' (Freshman 15) என்ற தோற்றப்பாடு (Phenomenon) ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

உடல் பருமன்
உடல் பருமன்
Pixabay

பள்ளிக் காலத்தை நிறைவுசெய்துவிட்டு கல்லூரி முதலாண்டில் நுழையும் மாணவர்கள், திடீரென்று 15 பவுண்ட் (சுமார் 6.8 கிலோ) எடை அதிகரிப்பதைத்தான் 'ஃபிரெஷ்மேன் 15' என்கின்றனர். வாழ்க்கை முறையில் மாற்றம், புதிய கல்வி முறை, புதிய சூழலால் ஏற்படும் மனஅழுத்தம் என இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.

இந்த மாற்றம் பெண்களைவிட ஆண்களிடம் அதிகம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களிடம் இந்த மாற்றம் அதிகம் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

துரித உணவுகள்
துரித உணவுகள்
Pixabay

ஃபிரெஷ்மேன் 15' என்ற தோற்றப்பாடு பிரச்னையை அடையாளம் காண்பது எப்படி, அதைத் தடுக்க என்ன வழி? உணவியல் நிபுணர் ராஜேஸ்வரியிடம் கேட்டோம். " 'ஃபிரெஷ்மேன் 15' என்ற நிலையை நோய் என்றோ, குறைபாடு என்றோ வகைப்படுத்த முடியாது. அவர்களாகவே ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு தோற்ற மாறுபாடுதான் இது. இந்தப் பிரச்னையை மேற்கத்திய நாடுகளில் இருக்கும் இளைஞர்களிடம் அதிகமாகக் காண முடிகிறது. தற்போது நமது நாட்டிலும் இதைக் காண முடிகிறது.

பள்ளிப் பருவத்தில் வீட்டிலிருந்து உணவை எடுத்துச் செல்வார்கள். வீட்டில் பெற்றோர் எதைக் கொடுத்து அனுப்புகிறார்களோ அதைச் சாப்பிடுவார்கள். ஆனால், கல்லூரி செல்லும் பல மாணவர்கள் வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்வதை விரும்புவதில்லை. கல்லூரி கேன்டீன், சுற்றுப்புறங்களில் கிடைக்கும் ஆரோக்கியமில்லாத உணவைச் சாப்பிடுகின்றனர். சில கல்லூரிகளில் அங்கேயே மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனாலும், அவை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருப்பதில்லை.

உணவியல் நிபுணர் ராஜேஸ்வரி
உணவியல் நிபுணர் ராஜேஸ்வரி

நண்பர்களுடன் சேர்ந்து துரித உணவுகளைச் சாப்பிடுவது, சர்க்கரை அதிகம் சேர்த்து பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களைக் குடிப்பதான் 'டிரெண்ட்' என்று நினைத்து தவறான விஷயங்களைச் செய்வார்கள். சிலர் புகை மற்றும் மதுப்பழக்கங்களுக்கு ஆளாவார்கள். இதனால் உடலில் தேவையற்ற கலோரிகள் சேர்ந்து உடல்பருமன் ஏற்படும்.

உடல்பருமன் உண்டாவதால் பிற்காலத்தில் வரும் தொற்றாநோய்கள் பிரச்னை குறித்த புரிதல் இல்லாமலே உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வார்கள். குறிப்பாக, பெண்களைவிட ஆண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை, கல்லூரிக்குள் நுழையும் 2 சதவிகிதம் பேர்தான் உடல் எடை அதிகரிக்கின்றனர். தோற்றம் குறித்த அதிக அக்கறை எடுத்துக்கொள்வதால் மாணவிகள் மத்தியில் இந்தப் பிரச்னை குறைவாகக் காணப்படுகிறது.

கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு வரும் மாணவர்களுக்கு இந்தப் பிரச்னை சற்று அதிகமாகக் காணப்படுகிறது.
உணவியல் நிபுணர் ராஜேஸ்வரி

இதனால் பிற்காலத்தில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், உடல்பருமன், இதயநோய்கள், போன்ற தொற்றாநோய்கள் ஏற்படக்கூடும். இப்போது 30 வயதிலேயே மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வர இதுபோன்ற பழக்க வழக்கங்கள் முக்கிய காரணமாகின்றன" என்கிறார் ராஜேஸ்வரி. புதிய கல்வி முறை, புதிய சூழல் போன்ற தாக்கங்களால் உளவியல்ரீதியாகப் பாதிக்கப்பட்டு அதிக அளவில் உணவை உட்கொள்ளும் குறைபாடு (Eating disorder) ஏற்பட்டும் உடல்பருமன் அதிகரிக்கிறது.

கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு வரும் மாணவர்களுக்கு மட்டும்தான் இந்தப் பிரச்னை ஏற்படுமா?

"நகர்ப்புறங்களில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழையும் மாணவர்கள் மத்தியிலும் இந்தப் பிரச்னை ஏற்படும். ஆனால், கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு வரும் மாணவர்களுக்குச் சற்று அதிகமாகக் காணப்படுகிறது.

தவறான உணவுப்பழக்கம்
தவறான உணவுப்பழக்கம்
pixabay

சில நிறுவனங்களில் வேலைக்குச் சேரும்போது ஊழியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்படும்பட்சத்தில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். இதைக் கல்லூரிகளிலும் பின்பற்றலாம். கல்லூரிக்குள் நுழையும் மாணவர்களுக்கு உடல்நலம் சார்ந்த பரிசோதனைகள் செய்யப்பட்டு, உணவுமுறை குறித்த ஆலோசனைகளை மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் மூலம் வழங்கினால் இந்தப் பிரச்னையைக் குறைக்கலாம்..." என்கிறார் ராஜேஸ்வரி. இவை அனைத்துக்கும் மேலாக, வெளி உணவுகளைத் தவிர்த்து வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை எடுத்துச் செல்வது எப்போதுமே உடல்நலம் காக்க உதவும்..!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு