Published:Updated:

சோயா பீன்ஸைவிட 20 மடங்கு அதிக புரதம், தாய்ப்பால் சுரப்பு - கடல்பாசிகளின் அற்புத பலன்கள்!

மற்ற உணவுப் பொருள்களுடன் ஒப்பிடும்போது இவற்றில் உள்ள புரதம் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. இதைச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாம் தினமும் நுண்ணுயிரிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா. பதற்றம் வேண்டாம். இவையெல்லாம் உடலுக்கு ஊட்டமளிக்கக்கூடிய, நோய்களை ஏற்படுத்தாத நுண்ணுயிரிகளே!

இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடக்கூடியவை கேக், சாக்லேட், ஐஸ்க்ரீம், கூல்டிரிங்ஸ் போன்ற தின்பண்டங்கள். இவற்றில்தான் உண்ணத்தகுந்த நுண்ணுயிரிகளான கடல்பாசிகள் சேர்க்கப்படுகின்றன. இந்தப் பாசிகளில் புரதச்சத்து அதிகம் இருப்பதே காரணம்.

கப்பாபைகஸ் ஆல்வெர்சி(கடல்பாசி)
கப்பாபைகஸ் ஆல்வெர்சி(கடல்பாசி)

நுண்ணுயிரிகளில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, பாசிகள் எனப் பல வகை உள்ளன. இவற்றில், பூஞ்சை வகையைச் சேர்ந்த உண்ணத் தகுந்த காளான்களை நாம் உணவாக எடுத்துக் கொண்டு வருகிறோம். இவற்றில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இதுபோல பாசிகளிலும் அதிக அளவில் உடலுக்குத் தேவையான சத்துப் பொருள்கள் காணப்படுவதால் இவையும் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இது குறித்து நுண்ணுயிரியல்துறை பேராசிரியரான அருண் பிரசாத்திடம் பேசினோம்.

``பாசிகளில் குறிப்பிட்ட இரண்டு வகை உள்ளன. அவை நன்னீர் பாசி மற்றும் கடல்நீர் பாசி. இன்று நாம் சாப்பிடும் குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், ஜெல்லி போன்றவற்றில் பாசிகள் அதிகம் சேர்க்கப்படுகின்றன. இதற்குக் காரணம் பாசிகளில் உள்ள `ஜெலட்டின்' என்னும் பொருளும், அதில் அடங்கியுள்ள அதீத புரதச்சத்தும்தான்.

கடல்பாசியுடன் பேராசிரியர் அருண் பிரசாத்
கடல்பாசியுடன் பேராசிரியர் அருண் பிரசாத்

மேலும் நுண்ணுயிரி வகையைச் சேர்ந்த பாசிகள் உணவில் சேர்க்கப்படுவதற்கான முக்கியக் காரணம், இவற்றில் எல்லா வகையான சத்துகளும் உள்ளன. இவற்றைச் சாப்பிடுவதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. மேலும் இவை எந்தவொரு நோய்த்தொற்றையும் ஏற்படுத்தாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாசிகள் நுண்ணுயிரிகளாக இருந்தாலும் இவற்றின் உடலில் பச்சையம் போன்ற பொருள்கள் இருப்பதால் இவை தாவரங்களைப் போன்றே ஒளிச்சேர்க்கையின் மூலம் தங்களுக்குத் தேவையான உணவை தாங்களே தயாரித்துக்கொள்கின்றன. இந்தப் பாசிகள் பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு எனப் பல நிறங்களில் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் அவற்றில் உள்ள வெவ்வேறு வகையான நிறமிகளே. இவற்றில் புரதச்சத்துகள் தவிர வைட்டமின்கள், தாது உப்புகள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன.

கடல்பாசி வளர்ப்பு
கடல்பாசி வளர்ப்பு

கப்பாபைகஸ் ஆல்வெர்சி, குளோரெல்லா, உல்வா, ஸ்பைருலினா, லாமினேரியா போன்றவை உணவாகப் பயன்படும் பாசிகளில் குறிப்பிடத்தகுந்தவை. இவற்றில் நீலப்பச்சைப்பாசி வகுப்பைச் சேர்ந்த ஸ்பைருலினாவில் இருக்கும் அதீத புரதச்சத்து காரணமாக இது புரதச்சத்து மாத்திரைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முறையான பயிற்சியும் ஆர்வமும் இருப்பவர்கள், இந்தப் பாசிகளைப் பயிரிட்டு வளர்த்து விற்பனை செய்யலாம். கடலோரப் பகுதியில் உள்ள மக்களுக்கு இது பற்றிய பயிற்சிகளும் தரப்பட்டு வருகின்றன" என்றார் அருண் பிரசாத்.

``பேசிக்கொண்டே சாப்பிட்டால் தொண்டையில் உணவு சிக்குவது ஏன்?’’ - சிக்கல்களும், தீர்வுகளும்

உண்ணத் தகுந்த சில பாசிகளும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களும்!

குளோரெல்லா:

குளோரெல்லா என்பது பாசிகளில் குறிப்பிடத்தகுந்த வகை. இதில் புரதம் (45%), கொழுப்பு (20%), கார்போஹைட்ரேட் (20%), நார்ச்சத்து (5%) மற்றும் தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் (10%) உள்ளன. இது, அனைத்து உணவுகளிலும் மிக உயர்ந்த அளவிலான நியூக்ளிக் அமிலங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பைருலினா மாத்திரை
ஸ்பைருலினா மாத்திரை

ஸ்பைருலினா:

பைருலினா என்பது நீலப் பச்சைப்பாசி வகையைச் சேர்ந்தது. பூமியில் முதன்முதலாகத் தோன்றிய உயிரினங்களில் ஒன்றான இது, எல்லா இடங்களிலும் வளரக்கூடிய ஒரு தாவரம். இதிலிருந்து மாட்டு இறைச்சியைவிட 300 மடங்கு அதிக அளவிலும், சோயா பீன்ஸைவிட 20 மடங்கு அதிக அளவிலும் புரதச்சத்து கிடைக்கிறது. வைட்டமின் பி-12 இதில் ஏராளமாக உள்ளது. மற்ற உணவுப் பொருள்களைவிட ஸ்பைருலினாவில் 15 மடங்கு இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது ரத்தச்சோகை நோய் வராமல் தடுக்கிறது. இந்தக் காரணங்களாலேயே ஸ்பைருலினா மாத்திரை வடிவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லாமினேரியா:

லாமினேரியா என்பது பழுப்புப் பாசி குடும்பத்தைச் சேர்ந்தது. லாமினேரியன் இனங்களில் புரதம் (10%), கொழுப்பு (2%) மற்றும் குறிப்பிட்ட சதவிகிதம் தாதுகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. மேலும் இவற்றில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவையும் உள்ளன.

லாமினேரியா
லாமினேரியா

போர்பிரா:

போர்பிரா என்பது குளிர்ந்த, ஆழமற்ற கடல் நீரில் வளரும் சிவப்பு கடற்பாசி. இதில் புரதம் (30% - 35%), கார்போஹைட்ரேட் (40% - 45%) மற்றும் வைட்டமின்களின் மிக உயர்ந்த சதவிகிதத்தில் உள்ளன.

இது போன்ற உண்ணத்தகுந்த பாசி வகைகள் அலைகள் அதிகம் எழாத கடலோரப் பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

உடல் பருமன் குழந்தைகளின் படிப்பையும் பாதிக்கலாம்... எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவரின் தீர்வுகளும்!

கடல் பாசிகளின் ஊட்டச்சத்து பயன்கள் பற்றி டயட்டீஷியன் அம்பிகா சேகருடன் பேசினோம்.

`பொதுவாக பதினான்கு வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் உண்ணத் தகுந்த பாசிகளை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளலாம். இதில் அதிகப் புரதச்சத்து உள்ளதால் தசைகளை வலுப்படுத்தவும், உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது.

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

இந்தப் பாசிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் இவை உடலின் ஆரோக்கியத்திற்கும், முக்கியமாகப் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. மேலும் இதனை மூட்டுவலி உள்ளவர்கள் உணவாக எடுத்துக்கொள்ளும்போது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் குறையவும் வாய்ப்புள்ளது. ஆனால் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதற்கு முன்பாக சிறுநீரகப் பிரச்னைகள் போன்ற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது" என்றார் டயட்டீஷியன் அம்பிகா சேகர்.

எங்கு கிடைக்கும்?!

உண்ணத்தகுந்த பாசிகள் நுண்ணுயிரியல் ஆய்வகங்களிலும், கடல்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (CMFRI), ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம், மற்றும் கடலோர பாசிகள் வளர்ப்பு மையங்களிலும் கிடைக்கும். நீரில் வளர்க்கப்படும் இந்தப் பாசிகள் முழுமையாக வளர்ந்த பிறகு அறுவடை செய்யப்பட்டு, வெயிலில் உலர்த்தப்பட்டு, பவுடராகவோ அல்லது மாத்திரைகளாகவோ மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில நிறுவனங்கள் இவற்றை நூடுல்ஸ் போன்ற வடிவிலும் விற்பனை செய்து வருகின்றன.

கடல் பாசிகளுடன்...
கடல் பாசிகளுடன்...

பலன்கள் பல!

மனிதர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து சப்ளிமென்ட் தயாரிப்பில் முக்கியமாக இந்தப் பாசிகள் பயன்படுகின்றன.

அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கவும், மீன்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் உணவாகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

மற்ற உணவுப் பொருள்களுடன் ஒப்பிடும்போது இவற்றில் உள்ள புரதம் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது.

இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் உணவாக எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் அனைத்து வகையான தாதுக்களும் அடங்கியுள்ளன.

உடலைச் சீராக இயக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் பாசிகள் உதவுகின்றன.

ஸ்பைருலினாவில் தாய்ப்பால் சுரப்பதற்குத் தேவையான தாது உப்புகளாகிய மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் இருப்பதால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்க உதவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு