Published:Updated:

தினந்தோறும் 42 கிராம் பாதாம்... இதய ஆரோக்கியத்திற்கு ஏன் நல்லது? #WorldHeartDay

பாதாம்
பாதாம் ( Photo by Remi Yuan on Unsplash )

தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

கோவிட்-19 தொற்றைக் கணக்கிடாமல், இந்தியாவில் நிகழும் உயிரிழப்புகளில் 28 சதவிகிதம் இதய ரத்தநாள நோய்களாலேயே ஏற்படுகின்றன. உயிரிழப்புகளின் காரணத்திலும் இதய நோய்கள்தான் முதலிடத்தைப் பிடிக்கின்றன. உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை, மாறிவிட்ட உணவுப்பழக்கம், பரம்பரையாக இதயநோய் பாதிப்புகள் தொடர்வது என இதய நோய்களுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

Healthy heart
Healthy heart

முக்கியமாக மரபணு மாற்றம் காரணமாகவும் இந்தியர்கள் இதயநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றன ஆய்வு முடிவுகள். இதய ஆரோக்கியத்தைப் பேணுவதில், இதயத்தைப் பாதிக்கும் காரணிகளைக் குறைப்பதும் முக்கியமாகிறது. இதய ஆரோக்கியத்தைக் காப்பதில் பாதாம் பருப்பு மிகப்பெரும் பங்களிப்பைச் செய்வதாக ஆராய்ச்சியாளர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

ஊட்டச்சத்து நிபுணர் ஷீலா கிருஷ்ணசாமி இதுபற்றிப் பேசும்போது, ``புதிய இயல்பு என்பதைப் பற்றி உலகமே பேசிக்கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் இதயத்துக்கு ஆரோக்கியத்தை வழங்கும் புதிய இயல்புக்கு மாற வேண்டியதும் அவசியமாகும். இதய ஆரோக்கியத்தை அடைவதற்கான முதல்படி ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுவது. பாதாம் போன்ற நட்ஸ் வகைளைக் குடும்பத்தில் அனைவரும் தங்கள் அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொள்ளத் தொடங்குவது நல்ல தொடக்கப்புள்ளியாகும்.

Dietitian Sheela Krishnaswamy
Dietitian Sheela Krishnaswamy

42 கிராம் பாதாம்!

நட்ஸ் வகைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆரோக்கியமான சிற்றுண்டியாகவும் அவை மாறும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஓர் ஆய்வில், தினமும் 42 கிராம் பாதாம் பருப்பைச் சாப்பிடுவது, இதயநோய்க்கான முக்கிய காரணிகளான இடுப்பு சுற்றளவு பெருப்பதையும் வயிற்றில் சேரும் கொழுப்புகளையும் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பாதாம் பருப்பில் காணப்படும் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து கொழுப்பு சேர்வதைத் தடுத்து, உடல் எடையை நிர்வகிக்க உதவுகின்றன. உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும். கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகான புதிய இயல்பு வாழ்க்கையில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மனஅழுத்தமும் இதயநோய்களுக்கான காரணியாக விளங்குகிறது.

Mixed Nuts
Mixed Nuts
குறட்டைவிட்டால் மாரடைப்பு வருமா? பதிலளிக்கும் இதய மருத்துவர் ஆர்.சிவக்குமார் #WorldHeartDay

இந்நிலையில் பாதாம் பருப்பு தொடர்பாக லண்டன் கிங்ஸ் கல்லூரியில் ஓர் ஆய்வு நடைபெற்றது. அதன் முடிவில் பாதாம் பருப்பை தொடர்ந்து உட்கொண்டவர்களுக்கு மனஅழுத்தத்தின்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும் நிலை தடுக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது" என்றார்.

ஏற்கெனவே நடைபெற்ற பல்வேறு ஆராய்ச்சிகளில் பாதாமில் காணப்படும் நார்ச்சத்து, வைட்டமின் இ, மக்னீசியம் உள்ளிட்ட நுண்ஊட்டச்சத்துகள் ரத்தக்குழாய்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மை கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனியை இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடுவதற்குப் பதில் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடுவது நல்லது.

பாதாம்
பாதாம்
Photo by CHUTTERSNAP on Unsplash

காரணம், நட்ஸ் வகைகளைச் சாப்பிடும்போது உப்பு, சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புள்ள ஆகியவற்றின் பயன்பாடு குறையும். நட்ஸ் வகைகளை வறுக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது.

பெண்களின் தோழன்!

2015-ம் நடைபெற்ற ஓர் ஆய்வில் முடிவில் பெண்களின் ஆரோக்கியத்தில் பாதாம் பருப்பு முக்கியப் பங்காற்றியது தெரியவந்தது. அதாவது, பாதாம் பருப்பு, நிலக்கடலை, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை அதிகம் சாப்பிட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்று தெரியவந்தது. மார்பகப் புற்றுநோயிலிருந்து காக்கும் பாதுகாப்பு அம்சமாக விளங்குகிறது என்று தெரிவித்துள்ளனர்.

பாதாம்
பாதாம்
அஞ்சறைப் பெட்டி: பாதாம்... வலிமைக்கான ஆதாரம்!

பாதாம் பருப்பில் காணப்படும் கால்சியம், மங்கனீசு, வைட்டமின் கே, துத்தநாகம் ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கும் எலும்பு வலுவிழத்தல், தேய்மானம் போன்றவற்றைத் தவிர்க்க பாதாம் பருப்பை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

உலக இதய தினமான இன்று ஆரோக்கிய உணவுப்பழக்கத்தின் தொடக்கமாக பாதாம் பருப்பை உணவில் சேர்த்துக்கொள்ளப் பழகுவோம்.

அடுத்த கட்டுரைக்கு