Published:Updated:

அஞ்சறைப் பெட்டி: முந்திரி... உணவுப்பொருள் ராஜ்ஜியத்தின் மந்திரி!

முந்திரி
பிரீமியம் ஸ்டோரி
முந்திரி

முன்னொரு காலத்தில் முந்திரிப்பழத்தை மட்டும் சுவைத்துவிட்டு, முந்திரிக்கொட்டைக்கு எந்தவிதமான பலனும் இல்லை என்ற தவறான நம்பிக்கையில் முந்திரிக்கொட்டையை மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்களாம்.

அஞ்சறைப் பெட்டி: முந்திரி... உணவுப்பொருள் ராஜ்ஜியத்தின் மந்திரி!

முன்னொரு காலத்தில் முந்திரிப்பழத்தை மட்டும் சுவைத்துவிட்டு, முந்திரிக்கொட்டைக்கு எந்தவிதமான பலனும் இல்லை என்ற தவறான நம்பிக்கையில் முந்திரிக்கொட்டையை மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்களாம்.

Published:Updated:
முந்திரி
பிரீமியம் ஸ்டோரி
முந்திரி

னிகளுக்கு உள்ளே விதைகள் இருப்பது இயற்கையின் நியதி. அந்த இயற்கையின் கோட்பாட்டை அடித்து நொறுக்கும் வகையில் கனிக்கு வெளியே முந்திக்கொண்டு காணப்படும் அழகான படைப்புதான் முந்திரி!

வளைந்து நெளிந்திருந்தாலும் ஆரோக்கியத்தின் அடிப்படையில் நம்மை நேராக நிமிர்ந்து நடக்கச் செய்யும் தனித்துவமானது முந்திரி. பல செயல்களை விவேகமாகச் செய்பவர்களை `முந்திரிக்கொட்டை’ என்று அழைப்பது நம்மிடையே நிலவும் வழக்குமொழி. அதை மெய்ப்பிக்கும்விதமாக இதுவும் மற்ற உணவுப்பொருள்களை முந்திக்கொண்டு நலப் பரிசுகளை அள்ளிக்கொடுக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
உப்பு சேர்க்காத, எண்ணெயில் பொரிக்காத முந்திரியை அளவோடு சாப்பிட்டால், அது இதயத்துக்கான தோழனே!

முன்னொரு காலத்தில் முந்திரிப்பழத்தை மட்டும் சுவைத்துவிட்டு, முந்திரிக்கொட்டைக்கு எந்தவிதமான பலனும் இல்லை என்ற தவறான நம்பிக்கையில் முந்திரிக்கொட்டையை மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்களாம். பிரேசிலிருந்து தான் இந்தியாவுக்குள் முந்திரி நுழைந்ததாகக் கருதப்படுகிறது. 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியாவில் முந்திரி விளைவிக்கப்பட்டது. இந்தியர்களுக்கு முந்திரியை அறிமுகப்படுத்திய பெருமை, போர்த்துக்கீசியர்களைச் சாரும். இங்கிருந்து ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு நாடுகளுக்கு முந்திரி பயணித்தது வரலாறு.

முந்திரி
முந்திரி

இது கோவாவிலிருந்து வந்ததால் ‘கோமாங்கா’ என்று கேரளப் பகுதியில் அழைக்கப்படுகிறது. சீனா, தாய்லாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானிய சமையலில் முந்திரி நீக்கமற இடம்பிடித்துள்ளது. பல்வேறு சுவைமிக்க இனிப்புகள் மற்றும் குழம்பு ரகங்களை உருவாக்க, பொடித்த முந்திரிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொல்லம்மா, கொட்டை முந்திரிமா போன்ற வேறு பெயர்களும் முந்திரிக்கு இருக்கின்றன. இனிப்புச்சுவையுடன் உடலுக்குக் குளிர்ச்சி அளித்து உரமளிக்கும். வன்மையும் காமத்தைத் தூண்டும் செய்கையும் முந்திரிக்கு இருக்கிறது. உணவுக்கு நல்ல வாசனையையும் கூடுதல் சுவையையும் ஒருங்கே ஏற்படுத்த முந்திரிப்பருப்புகள் உதவும். கிரேவி ரகங்களை மெருகேற்ற முந்திரிப்பொடியைப் பயன்படுத்தலாம்.

‘முந்திரிகை விரை மொழிந்த வாதுமை விரை…’ எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், முந்திரிப்பருப்பு மற்றும் வாதுமைப் பருப்பு விந்தணுக்களைப் பெருக்குவதாகவும் உடலுக்கு ஊட்டமளிப்பதாகவும் முக்கியக் குறிப்பைத் தெரிவிக்கிறது. ஆண்மைப் பெருக்கத்தை அளிக்கும் முந்திரி, லேசான மந்தத்தை உருவாக்கும். பசியைத்தூண்டும் உணவுப் பொருள்களுடன் முந்திரியைச் சேர்த்துச் சாப்பிட, அதன் நற்பலன்களை முழுமையாகப் பெறலாம்.

கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க முந்திரிப்பருப்புகள் உதவும். கொழுப்புச்சத்தை ஈரலில் சேர்த்து முறையாக அதை உடைக்கும் பண்பு முந்திரிக்கு இருப்பதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. உப்பு சேர்க்காத, எண்ணெயில் பொரிக்காத முந்திரியை அளவோடு சாப்பிட்டால், அது இதயத்துக்கான தோழனே. முந்திரியில் உள்ள நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள்கள், உடலின் முக்கிய உறுப்புகளுக்கு நோய் தடுக்கும் பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றன.

பல் ஈறுகளுக்கு பலம் கொடுப்பதுடன் எலும்புகளுக்கும் வலு கொடுக்கும். அளவு அதிகரிக்காமல் முந்திரியைச் சுவைக்க, செரிமானத்துக்கும் துணை நிற்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முந்திரியின் நலக்கூறுகள் உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உடல் செல்கள் விரைவாக முதிர்ச்சி அடைவதைத் தடுக்கும் செயல்பாடும் முந்திரிக்குச் சொந்தம்.

இதிலுள்ள தாமிரச்சத்து, உடலில் சேரும் உட்கழிவுகளை வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. கண்களுக்குப் பாதுகாப்பளிக்கும் `ஜியா-சாந்தின்’ நிறமியைப்பெற முந்திரியை அணுகலாம். முந்திரியில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், உடலின் வளர்சிதை நடவடிக்கைகளை முறைப்படுத்துவதாக உறுதிபடுத்துகிறது ஆய்வு.

முந்திரி
முந்திரி

வெண்பொங்கலுக்கும், சர்க்கரைப் பொங்கலுக்கும், ரவா கேசரிக்கும், பாயச வகைகளுக்கும் தனிச்சுவையும் மணமும் கொடுத்து, ஆசை ஆசையாக நாம் உண்ண காரணகர்த்தாவாகத் திகழ்வது முந்திரி என்றால் மிகையாகாது. முந்திரிப்பருப்புகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இனிப்பு ரகங்கள், பலரது ஃபேவரைட். செயற்கைச் சுவையூட்டிகள் சேர்க்காமல், முந்திரியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகள், நாவுக்கும் உள்ளத்துக்கும் களிப்பூட்டுபவை. எந்த வகையான கலவை சாதம் செய்தாலும் முந்திரி சேர்த்து சுவைகூட்டுவது தனி சூட்சுமம்.

முந்திரியில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், உடலின் வளர்சிதை நடவடிக்கைகளை முறைப்படுத்து கின்றன.

முந்திரியிலிருந்து எடுக்கப்படும் ஃபெனி எனப்படும் நொதித்த பானம், கோவா பகுதியில் மிகவும் பிரபலம். ஃபெனி யைப் பிரபலப்படுத்தியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். உப்பு தூவிய முந்திரிகள், `ககங் மேடே’ என்ற பெயரில் இந்தோனேஷிய மக்களின் விருப்ப நொறுவையாகத் திகழ்கின்றன. முந்திரிப்பருப்பை ஒன்றிரண்டாக உடைத்து தேனில் ஊற வைத்துச் சாப்பிட்டால் உடனடி ஆற்றல் கிடைக்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேன், முந்திரி, பாதாம் மற்றும் சில நட்ஸ் ரகங்கள் சேர்த்து தயாரிக்கப்படும் சிற்றுண்டி `டுர்ரோன்’ என்னும் பெயரில் பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது. முந்திரிப்பருப்பைப் பாலில் ஊறவைத்து அரைத்து உணவுகளில் சேர்க்க, அற்புதமான வாசனை மற்றும் சுவையைக் கொடுக்கும். முந்திரிப்பருப்பைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு இனிப்புகளின் மீதோ, பாலில் கலந்தோ சாப்பிடலாம்.

பச்சையான முந்திரிப்பருப்புகளைத் தண்ணீரில் நீண்ட நேரம் ஊறவைத்து தேங்காய்த் துருவல், கொத்தமல்லி விதைகள், கறிவேப்பிலை, மிளகாய் ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் வதக்கி உருவாக்கப்படும் கிரேவி ரக துணை உணவு, தென்னிந்திய கிராமங்களில் பிரபலம். எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க நினைப்பவர்களுக்குத் தரமான, நலமான நொறுக்குத்தீனி முந்திரி. அதேவேளையில் அதிக உப்பு, காரம் சேர்த்து செயற்கைச்சுவையூட்டிகளில் மூழ்கடித்து பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் முந்திரிப் பருப்புகளை தவிர்த்துவிடுங்கள். அதன் சுவையில் மயங்கி ஒரேவேளையில் ஏராளமாகச் சாப்பிட்டுவிடக் கூடாது!

முந்திரிப்பருப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயும் மருத்துவத்தில் பயன்படுகிறது. முந்திரி எண்ணெயில் உள்ள செலினியம் சருமத்துக்குப் பாதுகாப்பு அளிக்கும். முந்திரியிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய் உணவுத் துறையில் பயன்படுகிறது. கொட்டை வகைகள் சார்ந்த ஒவ்வாமை இருப்பவர்கள், முந்திரி சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். இதிலுள்ள புரதங்கள் சிலருக்கு ஒவ்வாமையைத் தூண்டலாம். காற்றுப் புகாத பெட்டியில் முறையாகச் சேமித்தால், நீண்ட நாள்கள் முந்திரியைப் பயன்படுத்த முடியும். முந்திரியை வாங்கும்போது அதில் பூச்சி அரித்திருக்கிறதா என்பதைக் கவனிக்கவேண்டியது முக்கியம். முகர்ந்துப் பார்க்கும்போது, கெட்ட நாற்றமும் வரக் கூடாது.

முந்திரி… உணவுப் பொருள் ராஜ்ஜியத்தின் மந்திரி!

போலோ பொலானா (Bolo polana): ஒரு கப் பொடி செய்த முந்திரி, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, எலுமிச்சை, ஆரஞ்சுச்சாறு, ஒரு டீஸ்பூன் வெண்ணெய், நான்கு முட்டை, அரிசி மாவு சேர்த்து தயாரிக்கப்படும் கேக் ரகத்துக்கு `போலோ பொலானா’ என்று பெயர். தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொஜாம்பிக் (Mozambique) பகுதியில் மிகவும் புகழ்பெற்ற சிற்றுண்டி ரகம் இது.

முந்திரி சாக்லேட்: உடைத்த முந்திரிகள் இதன் முதன்மை சேர்மானம். சர்க்கரை, முட்டை, சாக்லேட் மற்றும் பல வகையான பழங்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படும் முந்திரி சாக்லேட் சுவையில் மதிமயக்கும். அதிக கலோரி களைத் தரக்கூடியது என்பதால் அளவுடன் சாப்பிடுவது நல்லது.

முந்திரி சிக்கன்: வேகவைத்த கோழி இறைச்சியை நல்லெண்ணெயில் லேசாக வறுத்துக்கொள்ளவும். தேவை யான அளவு காலிஃப்ளவர், கேரட், பூண்டு, இஞ்சி உதவியுடன் கிரேவி போல தயாரித்து கோழி இறைச்சியில் கலந்துகொள்ளவும். கடைசியில் ஒரு கப் முந்திரிப்பொடியைச் சேர்த்து நன்றாகக் கலந்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். அசைவப் பிரியர்கள் இந்த முந்திரி சிக்கனுக்கு அடிமையாவார்கள்.

முந்திரி பெஸ்டோ (Cashew pesto): நான்கு பூண்டுப் பற்களை கொஞ்சம் உப்பு சேர்த்து அரைக்கவும். அதனுடன் 50 கிராம் கறிவேப்பிலையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து அரைக்கவும். அரைத்த இரண்டு டீஸ்பூன் முந்திரி மற்றும் இரண்டு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். கடைசியில் சிறிது நல்லெண்ணெய்விட்டு நிறைவான தொடுஉணவாகப் பயன்படுத்தலாம்.

15 நிமிடங்களில் தயாரிக்கப்படும் முந்திரி பெஸ்டோ இத்தாலி நாட்டிலிருந்து வந்து பரிணாமம் அடைந்த இந்திய உணவு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism