
க்ரீன் காபி, க்ரீன் டீ இரண்டிலும் உடலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான விஷயங்கள் அடங்கியுள்ளன.
ஆசிய உணவு அறிவியல் எனும் அறிவியல் இதழில் கிரேஸ் வேலன்டினா எனும் பிரபல ஊட்டச்சத்து நிபுணரின் ஆய்வு ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது. அதில் க்ரீன் காபியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்ற வார்த்தை அதிக கவனம் பெற்றிருப்பதை அறிவோம். பெரும்பாலான உணவுப் பொருள்களின் முன்பு அந்த வார்த்தை இடம்பெறுவதையும் பார்க்கிறோம். தற்போது க்ரீன் காபியும் அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது.

க்ரீன் காபியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளதா என்று ஊட்டச்சத்து ஆலோசகர் கவிதாவிடம் கேட்டோம்.
``மேற்கத்திய நாடுகளில் க்ரீன் காபி எடைக்குறைப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது. க்ரீன் டீயின் வரவைத் தொடர்ந்து க்ரீன் காபியும் அங்கிருந்து நமக்கு வந்துவிட்டது.
வறுக்காத பச்சை காபி கொட்டைகளிலிருந்து க்ரீன் காபி தயாரிக்கப்படுவதால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துகள் அப்படியே கிடைக்கும். அதனால்தான் இதன் நன்மைகள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. பிற காபிகளில் இருக்கும் கஃபைன் க்ரீன் காபியிலும் இருக்கிறது. ஆனால், அதிலிருக்கும் குளோரோஜெனிக் அமிலம் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இன்சுலின் அளவு அனைத்தையும் சீராக வைக்க உதவுகிறது. இதனால்தான் உடல் எடை குறைவதற்கும் பயன்படுகிறது.
உடல் எடையை சீராக வைக்க உதவுவதால் இதயநோய் போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள் வராமல் தடுப்பதற்கும் க்ரீன் காபி உதவுகிறது. இது தொடர்பாக சில ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. எடை அதிகமாக உள்ள எலிகளுக்கு க்ரீன் காபி கொடுத்து ஆய்வு செய்ததில் எடைக் குறைப்புக்கு அது உதவுவது கண்டறியப்பட்டுள்ளது.
இருந்தாலும் க்ரீன் காபியைத் தொடர்ந்து அருந்துவதால் சில பக்கவிளைவுகளும் ஏற்படும். இன்சோம்னியா என்ற உறக்கமில்லாத நிலை ஏற்படும். இதுதவிர பதற்றம், அமைதியற்ற நிலை போன்றவற்றையும் ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு எத்தனை முறை அல்லது எத்தனை கப் காபி குடிக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. க்ரீன் காபி என்றில்லாமல் எந்த காபியாக இருந்தாலும் ஒருநாளைக்கு 150 - 200 மில்லி குடிக்கலாம். இரண்டு வேளைகள் மட்டும் அருந்தினால் போதும்.

க்ரீன் டீ Vs க்ரீன் காபி
க்ரீன் காபி, க்ரீன் டீ இரண்டிலும் உடலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான விஷயங்கள் அடங்கியுள்ளன. ஆன்டி கார்சினோஜெனிக் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை க்ரீன் டீயில்தான் அதிகம் உள்ளது. க்ரீன் டீயில் பக்கவிளைவுகளும் குறைவு. அதனால் க்ரீன் காபியைவிட க்ரீன் டீ அருந்துவதே நல்லது" என்றார்.
டீ பேக்கில் ஆபத்து!
அலுவலகங்கள், ஹோட்டல்கள், சில வீடுகளில்கூட டீ பேக் பயன்படுத்தி டீ தயாரித்து அருந்துவது வழக்கமாகிவிட்டது. ஆனால், டீ பேக் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இது பற்றி கவிதாவிடம் கேட்டபோது, ``டீ அல்லது காபி பேக்குகளின் உள்ளிருக்கும் டீத்தூள் அல்லது காபித்தூள் தரமானவையாக இருக்கும். ஆனால், அந்த பேக் தயாரிக்கப்படும் பொருள்களில் பிளாஸ்டிக் சேர்க்கப்பட்டிருக்கும். டீ பேக்கின் ஆயுளை அதிகரிப்பதற்கான காலிக் அமிலம் (Gallic acid) என்ற ரசாயனமும் பாலிப்ரோபிலீன் என்ற பிளாஸ்டிக் (Polypropylene) என்ற பிளாஸ்டிக்கும் சேர்க்கப்படுகின்றன.
வெந்நீரில் டீ பேக்கை முக்கும்போது அந்த ரசாயனங்கள் இளகி, சூடான நீருடன் சேர்ந்து ரசாயனங்கள், பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுகள் டீயில் கலக்கும். தொடர்ந்து இதனை அருந்தும்போது உடலில் நச்சுத்தன்மை அதிகரித்து நாளமில்லா சுரப்பிகள் மண்டல பாதிப்பு, ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு தீய விளைவுகளை ஏற்படுத்தலாம்.

மாற்று என்ன?
அதனால் நேரடியாகவே டீ அல்லது காபியாகத் தயாரித்து ஃபிளாஸ்க்கில் எடுத்துச் செல்வது நல்லது. இல்லையென்றால் டிகாக்ஷனை மட்டும் தயாரித்து எடுத்துச் செல்லலாம். பால் பவுடர், சர்க்கரையை அலுவலகத்தில் இருப்பு வைத்துக்கொண்டால் போதும். வெந்நீர் மட்டும் பிடித்து உடனடியாக டீயோ காபியோ சூடாக அருந்திவிடலாம்" என்கிறார் கவிதா.