Published:Updated:

முதியோர் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!

இன்று முதியோர் பலர் அவர்களது ஓய்வூதியத்தைக்கூடத் தன் பேரக்குழந்தைகளின் உவகைக்காகச் செலவிட்டு, அதன் மூலம் உள்ளம் மகிழும் மூத்தோர்களுக்காகவே இந்தக் கட்டுரை...

முதுமைக் காலம்... மனித வாழ்வில் தவிர்க்க முடியாதது. முதுமைக் காலத்தை எவ்வாறு, எங்கே செலவிட வேண்டும் என்ற திட்டமும் அதற்கான புரிதலும் இந்தக் கால தலைமுறையிடம் அதிகமாகவே உள்ளது. அதற்கான முதலீட்டையும் இப்போதே செய்யத் தொடங்கிவிட்டனர். அதற்கான சந்தையும் நம் ஊரில் பெருகிக்கொண்டே வருகிறது.

முதியோர்
முதியோர்

ஆனால், பாகவதர் காலத்தில் வீட்டில் பத்தில் ஒருவராகப் பிறந்து, சிறு வயதில் இருந்து தனக்குத் தெரிந்த வேலைகளைச் செய்து, வாய்ப்புகள் பெரிதும் இல்லாத காலகட்டத்திலும் படித்துப் பட்டம் பெற்றிருப்பார்கள். அதன்பிறகு பெரும் முயற்சியால் வேலைக்குச் சென்று, தன் பிள்ளைகளைப் படிக்க வைத்து அவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட தாய் தந்தையரே அதிகம். அவர்களுக்கு அந்தக் காலகட்டத்தில் முதுமைக்கான திட்டம் ஏதும் கிடையாது. அதற்கான யோசனைகள்கூட இருந்ததாகத் தெரியவில்லை.

இன்று முதியோர் பலர் அவர்களது ஓய்வூதியத்தைக்கூடத் தன் பேரக்குழந்தைகளின் உவகைக்காகச் செலவிட்டு, அதன் மூலம் உள்ளம் மகிழும் மூத்தோர்களுக்காகவே இந்தக் கட்டுரை. தற்காலத்திலும் சரி, முந்தைய காலத்திலும் சரி... முதுமைக்காலம் என்பது நோய்களின் கூடாரமாகவே இருக்கிறது. அக்காலத்தில் தள்ளாமையும் இயலாமையும் முதியோர்களை வாட்டும். அவர்களின் இளம் வயதில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்தவர்களுக்கு வயோதிகம் வியாதிகளின் யுகமாகவே இருக்கிறது.

முதியோர்கள்
முதியோர்கள்

பொதுவாக வயோதிகத்தில் சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், மலச்சிக்கல், பார்வை மற்றும் கேட்கும் திறன் குறைபாடு ஏற்படுவது வழக்கம். அந்தச் சமயத்தில் அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. அது அவர்களின் வயோதிகத்தை மகிழ்வுடன் கடக்க உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதுமைக் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். உணவுத் தேவைகளில் அவசியமான ஒன்றையே அளவுடன் உட்கொள்ள வேண்டிய காலகட்டம் அது. பொதுவாக உடலில் செல்களுக்கு இடையில் காணப்படும் 'ஃப்ரீ ரேடிக்கல்ஸ்' என்பதே உடலில் வயோதிக மாற்றத்தை ஏற்படுத்தும்.

பழங்கள்
பழங்கள்

முதுமையில் பலருக்கும் நீர்சத்து குறைந்துதான் இருக்கும். அதற்கு இளமையில் அதிகம் நீர் உட்கொள்ளாமல் இருந்ததுகூட காரணமாக இருக்கும். தினமும் தண்ணீரை சீரான இடைவெளிவிட்டு குடிக்க வேண்டும். இதயம், சிறுநீரகநோய் உள்ளவர்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனைபடி தண்ணீர் அருந்துவது நன்று.

அரிசி, கிழங்கு வகைகளையும் மற்றும் அதிகம் கொழுப்பு சேர்ந்த உணவுகளையும் குறைத்து உட்கொள்ள வேண்டும். வயது மூத்தோர் அசைவ உணவு வகைகளைக் குறைத்துவிடுவது நல்லது. வயிறு நிறைய சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பழங்களைப் பொறுத்தவரை உணவு வேளைகளில் சாப்பிடாமல் காலை 11 மணி, மாலை 4 மணிக்கும் உட்கொள்ளலாம்.

முதியோர்
முதியோர்

பழங்களைப் பொறுத்தவரை ஆப்பிள், கொய்யா, மாதுளை, பப்பாளி ஆகிய பழங்களை உட்கொள்ளலாம். மா, பலா, வாழை சப்போட்டா ஆகிய பழங்களை வீட்டில் உள்ள பேரக் குழந்தைகளுக்குப் பங்கு பிரித்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தப் பழங்கள் அனைத்தும் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். பொதுவாகவே முதுமையில் உடலில் புரதச் சத்தை சேமிக்கும் ஆற்றல் குறையும். ஊட்டச்சத்துகளும் குறையத் தொடங்கும்.

முதியோர்
முதியோர்

உணவின் சுவை அறிந்து உட்கொள்ளுதல் நல்லது. இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு சுவைகளை வயோதிகத்தில் குறைத்துக்கொள்ள வேண்டும். துவர்ப்பு, கசப்பு சுவையை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

'உணவில் எதை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்?' என்ற கேள்வி எழும். அரிசி உணவோடு நிறுத்திகொள்ளாமல் நன்கு வேக வைத்த சிறுதானிய உணவுகளையும் பருப்பு, காளான், முட்டையின் வெள்ளைக்கரு, கொள்ளு, நீர்த்த பால் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்து எடுப்பவர்கள் தவிர்த்து பிறர் கீரைகளைச் சாப்பிடலாம்.

கீரை
கீரை
Vikatan

வயோதிகத்தில் மனதைப் பாதிக்கும் பிரச்னைகளைத் தள்ளி வைத்துவிட்டு, மகிழ்ச்சியான வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும். மகிழ்ச்சியான வாழ்க்கை உடலுக்கு நல்லது. உள்ளத்தையும் உற்சாகமாக வைத்துக்கொள்ளும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு