Published:Updated:

``பள்ளிக்கு ஓர் உணவியல் நிபுணர்"- உணவுக் கட்டுப்பாட்டுத்துறை பரிந்துரைக்கும் ஒரு `வாவ்' யோசனை!

`ஈட் ரைட் இந்தியா' முன்மொழியும் குழந்தைகள் உணவுக்கான புதிய விதிமுறைகள், ஓர் அலசல்!

உணவியல் நிபுணர்
உணவியல் நிபுணர்

சில தினங்களுக்கு முன்பு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை பள்ளிகளில் குழந்தைகளுக்கு விற்கப்படும் நொறுக்குத் தீனிகளுக்குத் தடை விதிக்க உள்ளதாகக் கூறியிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் (7.11.19) தனது அதிகாரபூர்வமான இணையதளப் பக்கத்தில் பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி அவர்களின் பள்ளி உணவில் திருத்தம் செய்ய உறுதி செய்யப்பட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய வரைவு ஒன்றை முன்மொழிந்துள்ளது.

அந்த வரைவு, இதோ...

download

அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளும் முன்மொழியப்பட்டுள்ள விதிமுறைகளும் (தமிழில்):

1. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்திற்காக அமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் உணவு தயாரிக்கும் வணிக நிறுவனங்கள்(FBO) சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், வளாகத்தில் உணவு தயாரிக்கும் நிறுவனம் உரிமம் பெற்றதாகவும் இருக்க வேண்டும்.

2. அதிக உப்பு, கொழுப்பு, காரம் போன்றவை உள்ள உணவுகளைப் பள்ளி கேன்டீன்களிலும் பள்ளியைச் சுற்றி 50 மீட்டருக்குள் உள்ள வளாகத்திலும் விற்பனை செய்யக்கூடாது.

3. குழந்தைகளிடம் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவு பற்றிய விழிப்புணர்வைப் பள்ளிகள் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் ஒவ்வொரு பள்ளி வளாகமும் `ஈட் ரைட்' (Eat Right) ஆக மாற வேண்டும். அதாவது பள்ளி வளாகத்தினுள் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே அனைவரும் சாப்பிட வேண்டும்.

4. தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (INS) வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி ஆரோக்கியமான மற்றும் சீரான உணவுகளைப் பள்ளிகளில் உட்கொள்வதைப் பள்ளிகள் ஊக்கப்படுத்த வேண்டும்.

5. பள்ளி வளாகத்தினுள் உணவு வணிகங்களால் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் ஒழுங்குமுறையின் பொதுவான வழிகாட்டுதலின் அடிப்படையிலும் உணவு பாதுகாப்பு ஆணையர்களால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் அடிப்படையிலும் இருப்பதைப் பள்ளி நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும்.

6. குழந்தைகளுக்கான உணவுப்பட்டியல், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உணவியல் வல்லுநர்களின் பரிந்துரையின் பேரில் தயாரிக்கப்படலாம்.

7. ஜங்க் ஃபுட்ஸ் வகையறா உணவுகளைத் தயாரிக்கும் FBO-கள் அந்த உணவுகள் பற்றி பள்ளி வளாகத்திலும், பள்ளியைச் சுற்றியுள்ள 50 மீட்டருக்குள்ளும் விளம்பரப்படுத்தக் கூடாது.
உணவுக் கட்டுப்பாட்டுத் துறை
உணவுக் கட்டுப்பாட்டுத் துறை

8. பள்ளிகளில் ஆரோக்கியமான உணவுகளை ஆதரிப்பதற்காக FBO-க்கள் பள்ளி வளாகத்தில் சந்தைப் பொருள்களின் லோகோக்கள், சுவரொட்டிகள், பிராண்ட் பெயர்கள் போன்றவற்றை விளம்பரப்படுத்தக்கூடாது. மேலும் குழந்தைகளுக்குக் குறைந்த ஊட்டச்சத்துள்ள உணவை வழங்கக்கூடாது.

9. பள்ளிகளில் ஆரோக்கியமான, பாதுகாப்பான உணவுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

10. FSSAI-ன் இந்த விதிமுறைகள் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்படுவதை கண்காணிக்க மாநில ஆலோசனை குழுவால் துணைக் குழு அமைக்கப்பட்டு, அந்தக்குழு குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான உணவுகள் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்.

Vikatan
இது குறித்து மேலும் ஏதாவது விதிமுறைகளைப் பரிந்துரைக்க விரும்புவோர் FSSAI-ன் வலைதளத்திற்குச் சென்று, வரும் டிசம்பர்-30 குள் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த வரைவில் கூறப்பட்டுள்ளது.

FSSAI -ன் இந்த வரைவறிக்கை பற்றி தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.டி. அன்பழகனிடம் பேசினோம். அவர் இதுபற்றி கூறிய போது,

ஏ.டி. அன்பழகன்
ஏ.டி. அன்பழகன்

``சுகாதாரமான, பாதுகாக்கப்பட்ட உணவு என்பது ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமான ஒன்று. இதை அனைவரிடமும் எடுத்துச் செல்லும் விதத்தில் FSSAI பல திட்டங்களைக் கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பான உணவிற்கான இந்த வரைவு. சில உணவுப்பொருள் உடல்நலத்திற்குக் கேடு விளைவிப்பதாக இருந்தாலும் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் அவற்றின் விற்பனையைத் தடை செய்ய முடியாது. அதுபோன்ற உணவுகளைக் குழந்தைகள் வாங்கிச் சாப்பிடும் போது அவர்களின் உடல் நலத்துடன் சேர்ந்து மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். இதைத் தடுக்கும் விதமாகத்தான் HFSS (High in fat, salt and sugar) உணவுகள் பள்ளி வளாகத்தில் தடை செய்யப்பட உள்ளன.

குழந்தை
குழந்தை

மேலும் ``ஈட் ரைட் இந்தியாவை" உருவாக்க வேண்டும் என்பதன் ஒரு முயற்சிதான் பள்ளி வளாகங்களில் இதைக் கொண்டு வருவது. பள்ளி வளாகத்தில் நொறுக்குத் தீனிகள் கிடைக்காத நிலை உருவாகும்போது, குழந்தைகள் அதுகுறித்து ஓரளவு விழிப்புணர்வு அடைவார்கள். இருப்பினும் அவற்றை வெளியில் எங்காவது வாங்கிச் சாப்பிட வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கியமான உணவு பற்றிய விழிப்புணர்வை ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் சரியான பொருள்களை மட்டுமே தேர்வு செய்யும் பண்பை குழந்தைகள் பெறுவார்கள்.

Vikatan

FSSAI-ன் இந்த வரைவு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், தமிழக உணவு பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நாங்கள் எங்களின் முழு ஆதரவையும் தந்து தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்த விதிமுறைகளை முழுமையாகச் செயல்படுத்த துணைபுரிவோம்" என்றார்.

இந்த வரைவு அறிக்கை குறித்து ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் நம்மிடையே பேசும்போது, அறிக்கையின் ஆறாவது விதிமுறையைச் சுட்டிக்காட்டி பேசினார்.

மீனாட்சி பஜாஜ்
மீனாட்சி பஜாஜ்

அவர் கூறியதாவது, ``இன்றளவில் உலகில் 34.8 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனோடு இருக்கின்றார்கள். தெற்காசியாவில் மட்டும் 5.4 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய யுனிசெஃப் அமைப்பின் ஆய்வின்படி, இந்தியாவிலுள்ள 80 சதவிகித வளரிளம் பருவக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், பத்து சதவிகித குழந்தைகள் மட்டும்தான் தினமும் பழங்கள், முட்டை என ஆரோக்கியத்துக்கான அவசிய உணவுகளை உட்கொள்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தன யுனிசெஃப்-ன் ஆய்வு முடிவுகள். சிறுவயதிலேயே ஏற்படும் இப்படியான ஊட்டச்சத்து குறைபாடுகள், வளரிளம் பருவத்தின்போது சர்க்கரைநோய், இதயப் பிரச்னைகள், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடுகள் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கு வாயிலாக இருந்துவிடுகிறது.

இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியமற்ற ஓர் எதிர்கால சந்ததி நம் கண்முன் உருவாகிக்கொண்டிருக்கிறதென்றே இதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இதற்கான தீர்வாக நாங்கள் பார்ப்பதுதான் `ஒவ்வொரு பள்ளிக்கும் ஓர் ஊட்டச்சத்து நிபுணர் இருக்க வேண்டும்' என்ற விதிமுறை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஊட்டச்சத்து நிபுணர்களாகிய நாங்கள் பல வருடங்களாகப் பேசிவருகிறோம். இருப்பினும் இப்போதுதான் இது வரைவறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இனியாவது இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், அதைவிட வேறென்ன மகிழ்ச்சி இருந்து விடப்போகிறது எங்களுக்கு!" எனக்கூறி தங்கள் சார்பில் விதிமுறைகள் குறித்து மகிழ்ச்சி தெரித்தார் அவர்.

குழந்தைகளுக்கான உணவுகள்
குழந்தைகளுக்கான உணவுகள்

மேலும் பேசியவர், ``இன்றைய குழந்தைகள் பலரும் சுவைக்காகவும் நிறத்துக்காகவும் மட்டுமே ஜங்க் ஃபுட்ஸை சாப்பிடுகின்றனர். பள்ளிக்கோர் ஊட்டச்சத்து நிபுணர் எனும்போது வாரம் ஒரு பயிற்சி வகுப்பு மூலமாக நிறமிகளால் ஏற்படும் தீமைகளை அவர்களுக்கு விளக்கிச் சொல்லமுடியும். நியூட்ரிஷனல் லேபிள் குறித்து அவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் எடுக்கும்பட்சத்தில் கொழுப்புச்சத்து / உப்புச் சத்து / சர்க்கரைச்சத்து மிக்க உணவுகளை அவர்களாகவே கண்டறிய வைக்க முடியும்.

இதனால் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை எவ்வளவு ஜங்க் ஃபுட் உட்கொள்ளலாம், எதையெல்லாம் சாப்பிடவே கூடாது, எவையெல்லாம் நிஜமாகவே குப்பை உணவுகள் என்ற புரிந்துணர்வு அவர்களுக்குக் கிடைக்கும். சிறுவயதிலேயே உணவு குறித்த சரியான புரிந்துணர்வை குழந்தைக்குத் தரும்போது, தங்கள் உடலுக்குத் தீங்கு தரும் உணவுகள் குறித்து அவர்கள் எப்போதும் விழிப்புணர்வோடே இருப்பார்கள். உணவு விஷயத்தில் எப்போதும் சுயக்கட்டுப்பாட்டோடு செயல்படத் தொடங்குவார்கள்.

குழந்தைகளுக்கான உணவுகள்
குழந்தைகளுக்கான உணவுகள்

அனைத்துப் பள்ளிகளிலும் ஓர் ஊட்டச்சத்து நிபுணர் நியமிக்கப்பட்டால் குழந்தைகளை மட்டுமன்றி, பெற்றோரையும் அவர் நேரடியாக அணுகும் வாய்ப்பு இருக்குமென்பதால் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு உணவை எந்த விதத்தில் தரலாம், குழந்தையைக் கவரும் வகையில் அந்த உணவை எப்படித் தரலாம் எனப் பெற்றோருக்கும் சொல்லித் தரமுடியும். `இந்த நாள் இந்த உணவென' கலர்ஃபுல் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பட்டியல், ஹெல்த்தி மற்றும் ஈஸியான ஸ்நாக்ஸ்க்கான பட்டியல் போன்றவற்றை பெற்றோருக்குப் பரிந்துரைக்கலாம். குழந்தைகள், தாமாகவே செய்து அசத்தக்கூடிய வகையில் எளிமையான ஃப்ரூட் சாலட் வகை ரெசிப்பிகளைப் பரிந்துரைத்து ஆரோக்கிய உணவுகள் மீதான அவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தவும் செய்யலாம்.

காய்ச்சல் - சளி - இருமல் போன்ற தொற்றுப் பிரச்னைகள் ஏற்படும்போது என்னவெல்லாம் சாப்பிடலாம், பருவ காலத்தில் ஏற்படும் காய்ச்சலைத் தவிர்க்க உணவுக் கட்டுப்பாட்டை எப்படி ஏற்படுத்திக்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது என நோய்க்கால உணவுக்கான அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்கு அறிவுறுத்த முடியும்.

பழம் சாப்பிட மறுக்கிறார்களா உங்கள் குழந்தைகள்? இந்தப் பாயசம் ட்ரை பண்ணுங்க... #Video
இத்தனை நன்மைகள் இருப்பதனால்தான், எங்களைப் போன்ற ஊட்டச்சத்து நிபுணர்கள் இந்த வரைவறிக்கை முழுவதுமாக மனதார வரவேற்கிறோம்" என்கிறார் அவர்.