Published:Updated:

நாவுக்கு சுவை, வயிற்றுக்கு குளிர்ச்சி, மனதுக்கு மகிழ்ச்சி... ஐஸ்கிரீம்கள் உருவான வரலாறு தெரியுமா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஐஸ்கிரீம் - செல்ஃபி எடுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!
ஐஸ்கிரீம் - செல்ஃபி எடுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

ஒவ்வொரு வருடமும் ஜூலை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை (ஜூலை 18, 2021) 'தேசிய ஐஸ்கிரீம் தினமாக' கடைபிடிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"டாக்டருக்கு என்னாச்சு... குழந்தைக்கு காய்ச்சல் அடிக்குதுன்னு சொன்னா, ஐஸ்கிரீம் கொடுக்கச் சொல்றாங்களே?!"

- அந்த ட்ரெய்னி நர்ஸுக்கு கேட்கவே பகீரென இருந்தது.

அவசர அவசரமாக டாக்டர் ரூமுக்குள் ஓடி, "டாக்டர்... பாப்பாக்கு காய்ச்சல் கொதிக்குது. யூரின் போகவே இல்ல. எதுவுமே சாப்பிட மாட்டேங்கறா… விடாம அழுதுட்டே இருக்கா. எப்படி சமாதானம் பண்ணி மருந்து தந்தாலும் துப்பிடறா... என்ன பண்றதுன்னே தெரியல!" என்று படபடப்பாக நர்ஸ் சொன்னதும், ஏதோ ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் தலைநிமிர்ந்து பார்த்து, "குழந்தைக்கு ஒரு கப் வெனிலா ஐஸ்கிரீம்ல கொஞ்சம் ஆரஞ்சு இல்லே ஆப்பிள் சேர்த்துக் குடும்மா. சரியாயிடும்" என்றார்.

குழப்பத்துடன் டாக்டரைப் பார்த்தவாறே, "டாக்டர்... காய்ச்சல் இருக்கும்போது ஐஸ்கிரீமா... பாப்பாக்கு இன்னும் காய்ச்சல் அதிகமாகிடாதா?"

என்று நர்ஸ் கேட்க, "நீ முதல்ல சாப்பிடக் குடுத்துட்டு அப்பறமா வந்து சொல்லும்மா" என்கிறார்.

ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம்

சில மணி நேரம் கழித்து அந்த நர்ஸ் சொன்னாள், "டாக்டர்... நிஜம்மாவே பாப்பாக்கு காய்ச்சல் குறைஞ்சிருக்கு. விளையாட ஆரம்பிச்சுட்டா. ஆனா எப்படி?" என்று கேட்க, டாக்டர் சிரித்தபடி சொன்னார்.

"சிம்பிள்மா… காய்ச்சல், சளி இருக்கும்போது குழந்தைங்க சாப்பிடாது. வெறும் தண்ணி இல்ல கஞ்சி எதையும் முழுங்காது. இதனால உடம்பில நீர்த்தன்மை குறையறதால, யூரினும் போகாம இருக்கும். இந்த Dehydration காய்ச்சலை இன்னும் அதிகம்தான் பண்ணும். அதனால தொடர்ந்து அழுதுட்டு இருக்கும்... ஒரு ஸ்டேஜ்ல, எனர்ஜி எல்லாம் குறைஞ்சு, குழந்தை சோர்ந்து துவண்டு போக ஆரம்பிச்சுடும். இந்த சமயத்தில, வெனிலா மாதிரி ரொம்ப மைல்டா ஒரு ஐஸ்கிரீம் தந்தா தொண்டையில் எரிச்சல் இருக்காது. அதோட அதுல இருக்கற கலோரிகள் குழந்தைக்கு எனர்ஜியைத் தரும். நீர்த்தன்மை அதிகமானதும் யூரின் போய், குழந்தை பழையபடி விளையாடவும் ஆரம்பிச்சுடும். அதுக்கப்புறம் நாம ஈஸியா வைத்தியம் ஆரம்பிச்சிடலாம். ஆனா கவனம்… தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தா ஐஸ்கிரீம் மாதிரி பால் சேர்ந்த ஆகாரங்களை கொடுக்கக்கூடாது. ஓகே!" என்று விரல்களை உயர்த்திக் காட்ட, "இப்பப் புரிஞ்சது டாக்டர்.. தேங்க்யூ.!" என்றுகூறி, ஐஸ்கிரீம் மேஜிக் என்ற புதிய பாடத்தைக் கற்ற திருப்தியோடு புன்னகையுடன் நகர்ந்தாள் அந்த நர்ஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐஸ்கிரீம்!

கேட்டவுடன் உள்ளம் குளிர்ந்து நாவில் தித்திக்கும் இந்த வார்த்தை 'ஐஸ்டு கிரீம்' என்னும் வார்த்தைகளிலிருந்து 1776-ம் ஆண்டு உருவானதாக கூறப்படுகிறது.

உலகிலேயே அதிக ஐஸ்கிரீம் பிரியர்கள் இருப்பதாகவும், ஐஸ்கிரீம் விற்பனையில் மட்டுமே வருடத்திற்கு 90 மில்லியன் டாலருக்கும் மேலாக வருமானத்தை ஈட்டுவதாகவும் கூறும் அமெரிக்கர்கள் ஒவ்வொரு வருடமும் ஜூலை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை (ஜூலை 18,2021) 'தேசிய ஐஸ்கிரீம் தினமாக' கடைபிடிக்கின்றனர். ஆனால், ஐஸ்கிரீம் வரலாற்றை, அமெரிக்க வரலாற்றில் இவர்கள் சேர்த்தது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம்!

ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம்

கிமு 400-களில் ஒரு பெர்சிய மன்னருக்கு பனிக்கட்டியை ஒரு கிண்ணத்தில் வைத்து அதில் திராட்சை ரசம் ஊற்றிப் பரிமாற, அது அவருக்குப் பிடித்துப்போக, அதைத் தொடர்ந்து மலைஉச்சிகளில் இருந்து பனிக்கட்டியை கொண்டுவந்து, பாதாள அறைகளில் சேமித்து வைத்து, பருகியதாகக் கூறுகின்றனர். பின்னர் பெர்சியர்கள் சேமியாவுடன் குளிர்ந்த ரோஸ் வாட்டர், பழங்கள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து, ‘ஷெர்பட்டீ’ என குளிர்பானத்தை தயாரித்துப் பரிமாறியிருக்கிறார்கள். அதேசமயம், வேக வைத்த அரிசி மாவுடன் பால் மற்றும் பச்சைக் கற்பூரம் சேர்த்து, குளிரவைத்து சீனர்களும் ஐஸ்கிரீம் எனும் சுவைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளனர் என்கிறது உணவு வரலாறு.

குளிர்ந்த பழரசங்களை மன்னர் சாலமன் விரும்பிப் பருகுவார் என்று விவிலியத்தில் கூறப்பட்டிருக்க, பேரரசர் அலெக்சாண்டர் பனிக்கட்டிகளை தேன் சேர்த்துப் பருகினார் என்றும், ரோமானிய மன்னனான நீரோ தனது வீரர்களில் சிறந்த ஓட்டக்காரர்களை மலைகளுக்கு விரட்டி, பெரிய பனிக்கட்டிகளை சேகரித்துக் கொண்டு வருமாறு உத்தரவிட்டு, அவர்கள் ஓடியே கொண்டுவந்து சேர்த்த பனிக்கட்டிகள் உருகும் முன் அவற்றுடன் பழங்களை சேர்த்து உட்கொண்டான் என்றும் குறிப்புகள் கூறுகின்றன.

பெர்சியாவின் ‘ஷெர்பட்டீ’ நமது நாட்டில் முகலாயர்களின் காலத்தில் சர்பத் ஆகி, அவர்களே சிறிய பானைகளில் மலாய், பிஸ்தா, ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ சேர்த்த குல்ஃபியையும் உருவாக்கினார்களாம்.

ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம்

அதேபோல கிரேக்க, லத்தீன் நாடுகளில் பண்டைய காலத்திலேயே பழத்துண்டுகளுடன் ஐஸ் கட்டியைச் சேர்த்து உணவு தயாரித்த குறிப்புகள் இருந்தாலும், சீனர்களிடம் இருந்து இத்தாலிய மாலுமியான மார்க்கோபோலோ, ஐஸ்கிரீம் தயாரிப்பை கற்று ஐரோப்பியாவுக்கு கொண்டுபோனதையே, இன்றைய ஐஸ்கிரீம் அடைந்துள்ள உலகப் பயணத்தின் முதல் அடி என்றும் கூறப்படுகிறது.

இப்படி சீனா, பெர்சியா, இத்தாலி, ரோம் என பல நாடுகளும், அதேபோல முதலாம் சார்லஸ், இரண்டாம் ஹென்றி, ஜார்ஜ் வாஷிங்டன் என பல நாடுகளின் தலைவர்களும், ஐஸ்கிரீம் உருவானதற்கு ஒவ்வொரு கதையைச் சொல்வதால், இந்த ஐஸ்கிரீமின் உண்மையான பிறப்பைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. என்றாலும் 1843-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 'நான்ஸி ஜான்சன்' என்ற கண்டுபிடிப்பாளர், கையால் சுழற்றி இயக்கும் இயந்திரத்தின் மூலமாக உருவாக்கிய ஐஸ்கிரீமையே முதல் ஐஸ்கிரீம் கண்டுபிடிப்பாக அங்கீகரித்திருக்கிறார்கள்.

ஒரு பெரிய உருளையில் உள்ளே சுழலும் சிறிய உருளைக்குள் பால், சர்க்கரை, வாசனைப் பொருட்களைச் சேர்த்து தயிர் மத்து போன்ற வடிவத்தால் கலக்கி, பெரிய உருளையில் இருக்கும் பனிக்கட்டியுடன் இவற்றைக் கலக்கும்போது மென்மையான ஐஸ்கிரீம் கிடைக்கிறது என்ற நான்சியின் கண்டுபிடிப்பு தான் அங்கீகரிக்கப்பட்ட ஐஸ்கீரீம் என்கிறது உணவு வரலாறு. ஆனால், தனது கண்டுபிடிப்பின் மகத்துவம் தெரியாமல் நான்சி அந்த இயந்திரத்தை 'வில்லியம் யங்' என்பவருக்கு வெறும் 200 டாலருக்கு விற்றுவிட்டிருக்கிறார்.

இதற்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 1904-ம் ஆண்டு லூயிஸ் என்ற அமெரிக்கர், உணவுக் கோன்களை தற்செயலாகக் கண்டுபிடிக்க, ஐஸ்கிரீம் கோன்கள் பயன்பாட்டுக்கு வந்தது என்று கூறப்படுகிறது. அதேபோல அமெரிக்காவின் அருகாமைத் தீவுகளில் விளைந்த செடிகளின் நெற்றை, குளிர்ந்த பாலுடன் கலந்தபோது புதியதொரு சுவையும், மணமும் கிடைத்திட, 'வெனிலா ஐஸ்கிரீம்' உருவானதாம்.

ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம்

நான்சி, லூயிஸ் மட்டுமல்லாமல் அமெரிக்க வெள்ளை மாளிகை சமையல் கலை வல்லுநர் அகஸ்டஸ் ஜான்சன், ஜனாதிபதி ஜெஃபர்சன் என அமெரிக்காவும், ஐஸ்கிரீமும் வருடங்களாக ஒன்றாகப் பயணித்துள்ளதாலேயே ஐஸ்கிரீம் அமெரிக்காவின் பொதுவுடைமை ஆகிவிட்டது எனலாம்.

ஆனால், உண்மையில் ரெஃப்ரிஜிரேட்டர் என்ற குளிர்சாதனப் பெட்டியும், ஐஸ் கட்டிகளைக் கடையும் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான், இன்றைய ஐஸ்கிரீம்களும், பல்வேறு ஃப்ளேவர்களும், இவற்றைத் தயாரிக்கும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களும் பிறந்தன.

சரி...

என்னதான் உள்ளது இந்த ஐஸ்கிரீமில் என்றால்… பால் புரதம், பால் கொழுப்பு, சர்க்கரை, தண்ணீர் மற்றுர் ஐஸ் ஆகியவற்றின் கூழ்மம் (emulsion) தான் ஐஸ்கிரீம் என்கிறது அறிவியல். இந்தக் கூழ்மத்தில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான கொழுப்பு, 6-10% புரதம், 12-16% இனிப்பு மற்றும் 55-65% நீர், 0.2% சுவையூட்டிகள் என்ற ஃபார்முலா மட்டுமே இவற்றிற்கு சரியான சுவையைத் தருகின்றன என்கிறது அமெரிக்க ஹேகன் தாஸ் மற்றும் பாஸ்கின் ராபின்ஸ் நிறுவனங்கள்.

நாவுக்கு சுவை, வயிற்றுக்கு குளிர்ச்சி, மனதிற்கு மகிழ்ச்சி என அனைத்தையும் கலவையாகத் தரும் இந்த ஐஸ்கிரீம்கள் விளைவிக்கும் பாதகங்களை நமக்கு நினைவுப்படுத்தும் எஃப்டிஏ, உண்மையில் இவற்றின் அதிக கலோரிகளால் உடற்பருமன், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் ஆகியவற்றை அதிகரிக்கலாம் என்றும், செயற்கை சுவையூட்டிகளால் வயிற்று அழற்சி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை இவை ஏற்படுத்தலாம் என்றும், குளிர்ச்சியான குணத்தால் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் என்பதாலும் ஐஸ்கிரீமை உண்ணும் அளவில் எச்சரிக்கையுடன் இருக்க நம்மை அறிவுறுத்துகிறது.

எது எப்படியோ, நாடு இனம் மொழி எல்லாவற்றையும் தாண்டி ஐஸ்கிரீம் பிடிக்காது என்று கூறுபவர்களே இருக்கமாட்டார்கள் என்பதால், உலக மக்களின் பொது உணவு ஐஸ்கிரீம்தான் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.

யோசித்துப் பார்த்தால் நமது வாழ்க்கையும் ஐஸ்கிரீம் போன்றதுதான். உருகுவதற்குள் அதைச் சுவைத்து விடுவோம் வாருங்கள்!

#IcecreamMagic

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு