Published:Updated:

Covid Questions: நோய் எதிர்ப்பு உணவுகளால் புண்ணாகிப்போன உணவுக்குழாய்; என்ன செய்வது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி ( விகடன் )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றிற்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எண்ணத்தில் தினமும் உணவில் மிளகு, பூண்டு, கிராம்பு, கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் என ஏதேனும் ஒன்றை மாற்றி மாற்றி எடுத்துக்கொள்கிறோம். இதனால் குடும்பத்தில் எல்லோருக்கும் வயிற்றெரிச்சலும் தொண்டை எரிச்சலும் அதிகரித்திருக்கிறது. உணவுக்குழாயில் புண் இருப்பதை உணர முடிகிறது. நோய் பரவும் காலத்தில் இவற்றைத் தவிர்க்கவும் முடியவில்லை, அதேநேரம் வயிறு புண்ணாவதையும் தாங்க முடியவில்லை. என்னதான் தீர்வு?

- கே.சந்திரலேகா, சேலம்.

டயட்டீஷியன் அம்பிகா சேகர்
டயட்டீஷியன் அம்பிகா சேகர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

``இந்தப் பிரச்னை உங்களைப் போல நிறைய பேருக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்திக்காக எடுத்துக்கொள்ளும் பல உணவுகளும் உணவுக்குழாய் பாதையை பாதிக்கின்றன. எல்லோருக்கும் ஒருவித பயம்... நோயைத் தடுத்துவிடும் எண்ணத்தில் இப்படிப்பட்ட இயற்கை மருத்துவ முறைகளை அளவுக்குமீறிப் பின்பற்றுகிறார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைத்தான் இங்கே நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. மிளகும் கிராம்பும் கபசுரக்குடிநீரும் நிலவேம்புக் குடிநீரும் நல்லதுதான் என்பதற்காக அளவுக்குமீறியும் அவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது. எதையுமே அளவோடு சேர்த்துக்கொள்வது சிறந்தது. கபசுரக்குடிநீரையும் நிலவேம்புக் குடிநீரையும் தொடர்ந்து அருந்தக் கூடாது, அவ்வப்போது இடைவெளிவிட்டுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்களும் எச்சரிக்கிறார்கள். அதைத் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும்.

உணவுகளைப் பொறுத்தவரை இந்த நேரத்தில் அதிக காரம், மசாலா சேர்த்தவற்றைத் தவிர்த்துவிடுவதுதான் சிறந்தது. சமையலில் பச்சைமிளகாயைக் குறைவாக உபயோகிக்கவும். இட்லி, இடியாப்பம், பருப்பு சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்ற மைல்டான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். காய்கறிகள் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிடுவோர் அவற்றைத் தவிர்க்க வேண்டியதில்லை.

ஆனால், அவற்றையும் அதிக காரம், மசாலா, எண்ணெய் இல்லாதபடி பார்த்துக்கொள்ளவும். பழங்கள் அவசியம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். சிலருக்கு சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை ஏற்றுக்கொள்ளாது. அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழைப்பழம், ஆப்பிள் சாப்பிடலாம். புரோபயாடிக் தன்மை இருப்பதால் தினமும் 2 ஆப்பிள்கூட சாப்பிடலாம்.

வாழைப்பழம்
வாழைப்பழம்

இன்னொரு விஷயம், வெந்நீர் குடித்தால் வைரஸ் செத்துவிடும் என்ற எண்ணத்தில் ஆவிபறக்க குடிக்கப் பழகியிருக்கிறார்கள் பலரும். உண்மையில் அவ்வளவு சூடு தேவையில்லை. மிதமான சூட்டில் வெந்நீர் பருகுங்கள், போதும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கலாம். ஜூஸ் உள்ளிட்ட திரவ உணவுகள் அவசியம்.

அசைவ உணவுக்காரர்கள் முட்டையும், சைவ உணவுக்காரர்கள் தினமும் சுண்டலும் சாப்பிடுவதன் மூலம் புரோட்டீன் தேவையைப் பூர்த்தி செய்யலாம். அசிடிட்டியை அதிகப்படுத்தும் உணவுகளைச் சாப்பிட்டு, பிறகு அதைச் சரிசெய்ய மருந்துகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றிற்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினந்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு