Published:Updated:

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டு டயட் மெனு என்ன தெரியுமா? நம்பமாட்டீங்க!

நல்ல தூக்கம், அடிக்கடி கைகழுவுவது, தன் சுத்தம் முதலியன எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேபோல் உணவின் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் தீவிர அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

Representational Image
Representational Image

அவ்வாறு நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள், மற்றும் நோய் அறிகுறிகளுடன் பரிசோதனை முடிவுகளை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரத்யேக உணவு முறை பின்பற்றப்படுகிறது.

இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தியிடம் பேசினோம்.

''கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, ஊட்டச்சத்து நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட உணவுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகிறது.

டாக்டர் ஜெயந்தி
டாக்டர் ஜெயந்தி

இதில், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர சத்தான சரிவிகித உணவு வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் விருப்பம் அறிந்தும் உணவுகள் வழங்கப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவமனை சமையலறையில் 20 பணியாளர்களைக் கொண்ட குழு உணவு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஐந்து வேளை உணவு தயாரிக்கப்படுகிறது'' என்றார்.

foods
foods
Freepik

சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் உள்ளவர்களுக்கான ஃபுட் சார்ட் இதோ...

காலை உணவாக இட்லி, வெங்காய சட்னி, சம்பா கோதுமை உப்புமா, சாம்பார், முட்டையின் வெள்ளைக்கரு, பால்.

நண்பகலில் இஞ்சியும் எலுமிச்சையும் கலந்த வெதுவெதுப்பான நீர், மிளகு, உப்பு சேர்த்த வெள்ளரித் துண்டுகள்.

மதிய உணவாகச் சப்பாத்தி, புதினா சாதம், காய்கறிப் பொரியல், கீரை, ரசம், பொரிகடலை.

``கொரோனாவால் வீட்டில் தனிமை... உருவாகும் மனஅழுத்தம்!"- எதிர்கொள்வது எப்படி? #FightCovid19

மாலை வேளையில் கொண்டைக்கடலை சுண்டல், மிளகுத்தூள் சேர்த்த பருப்பு சூப்.

இரவு உணவாக இட்லி, சப்பாத்தி, காய்கறிக் குருமா, வெங்காய சட்னி.

கொரொனாவை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தி மிக அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இந்த உணவுப் பட்டியல் உணவியல் நிபுணர்களால் தயாரித்து வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெல்த்தி பிரேக்ஃபாஸ்ட்
ஹெல்த்தி பிரேக்ஃபாஸ்ட்

இப்போது லாக் டவுன் நாள்களில் இருக்கும் அனைவருக்கும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்ல உணவுகளைப் பரிந்துரைக்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் ராஜேஸ்வரி.

"நம் உடம்பில் எதிர்ப்பு சக்தியின் அளவு குறையும்போது, நாம் நோய்த் தொற்றால் தாக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

ஊட்டச்சத்து நிபுணர் ராஜேஸ்வரி
ஊட்டச்சத்து நிபுணர் ராஜேஸ்வரி

நல்ல தூக்கம், அடிக்கடி கைகழுவுவது, தன் சுத்தம் முதலியன எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேபோல் உணவின் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டியது அவசியம். சாதாரணமாகவே நம் உடம்பில் ஏதேனும் நோய்த்தொற்று என்றால் நம் உடம்பில் உள்ள செல்கள் அதை எதிர்த்துப் போராடும். அந்த செல்களை மேலும் வலுப்படுத்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் அவசியம்.

பழங்கள், காய்கறிகள், கீரைகள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இன்றியமையாதவை. தற்போதைய நிலையில் நமக்கு அனைத்து வகையான பழங்கள், காய்கறிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால், வீட்டில் உள்ள பல உணவுப் பொருள்கள் மூலமே எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம்.

Vegetable
Vegetable

முளைக்கட்டிய பயறு வகைகள், எலுமிச்சை, பாதாம், வால்நட் போன்ற நட்ஸ், இஞ்சி, மஞ்சள், பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு என நம் சமையலறையில் இருக்கும் இந்தப் பொருள்கள் நம் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் அருமருந்துகள்.

உடம்பில் நீர்ச்சத்தைப் பராமரிப்பதும் அவசியம். ஒரு நாளுக்கு 2.5 முதல் 3 லிட்டர்வரை தண்ணீர் அருந்த வேண்டும். இளநீர், பழச்சாறு, பால், மோர் எனவும் அருந்தலாம். தண்ணீரை வெதுவெதுப்பாக அருந்துவது மிக நல்லது. சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆறவிட்டுக் குடித்தால் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற அது உதவும்.

"கொரோனா அச்சம்; மருத்துவர்களின் ஆன்லைன் பரிந்துரைகள்!"- டெலிமெடிசின் சாதகமும் பாதகமும் #FightCovid19

பாலில் மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் குடிப்பது எதிர்ப்பு சக்தியைக் கூட்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப் பரிந்துரைக்கப்படும் உணவுகள்...

Fruits
Fruits
pixabay

பழங்கள்

ஆரஞ்சு

எலுமிச்சை

அன்னாசி

பெர்ரி பழங்கள்

பப்பாளி

கிவி

கொய்யா

தக்காளி

காய்கறிகள்

கேரட்

பீட்ரூட்

கீரை வகைகள்

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், புரொக்கோலி

கத்தரிக்காய்

குடைமிளகாய்

vegetable
vegetable
pixabay

ஊறவைத்த பாதாம், வால்நட், கிரீன் டீ, எலுமிச்சை, பூண்டு, இஞ்சி, மஞ்சள் ஆகியன.

நம் அன்றாட உணவில் மேற்கூறிய உணவுகளை வழக்கமாகச் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம்'' என்கிறார் ராஜேஸ்வரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு