நம் உடலின் ஒவ்வோர் அணுவிலும் புரதச்சத்து (புரோட்டீன்) நிறைந்துள்ளது. தசை கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கும் பராமரிப்பிற்கும் புரதம் முக்கிய பங்கு அளிக்கிறது. எடைக்குறைவு , டைப் 2 நீரிழிவு போன்ற காரணங்களுக்காக, நாம் அதிக அளவில் புரதம் உட்கொள்கிறோம். ஆனால் புரோட்டீனின் தேவை நபருக்கு நபர் வேறுபடும். உடலின் எடையில், ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரதம் தேவை. 50 கிலோ எடை கொண்டவர் என்றால், 40 கிராம் தேவை. தினமும் ஏதாவதொரு வகையில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.
ஆனால், இதை அதிகளவில் சாப்பிட்டுவந்தால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தொடர்ந்து அதிகளவில் புரோட்டீன் உட்கொண்டால் தலைவலி, மலச்சிக்கல் மற்றும் இதய பிரச்னைகள் ஏற்படும். இது சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நம் உடலில் உள்ள கழிவுப்பொருள்களை வடிகட்டி வெளியேற்றும் பணியை சிறுநீரகம் செய்கிறது. ஆனால் அதிகளவில் புரோட்டீன் எடுத்துக் கொண்டால் சிறுநீரகத்தைச் சுற்றி உள்ள குளோமெருளி ஃபில்டர்ஸ் (Glomeruli filters ) பாதிக்கப்படும். இதனால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். எனவே மருத்துவரின் அறிவுரையின்றி அதிக அளவில் புரோட்டீன் எடுத்துக் கொள்ளக் கூடாது.
இது குறித்து சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் சங்கீதா ஜெயகுமாரிடம் கேட்டபோது, ``உணவில் புரதச்சத்து மிகவும் அவசியமானது. ஆனால் அதை தேவையான அளவுதான் உட்கொள்ள வேண்டும். அதிக அளவில் புரோட்டீன் எடுத்துக்கொண்டால் ஏடிமா (Edema ) எனப்படும் நீர்க்கட்டு, தலைவலி, சருமத்தில் அலர்ஜி, குடல் பாதிப்பு மற்றும் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.

புரதச்சத்திற்காக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் உண்டாகும். எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். அதிக புரோட்டீனை சாப்பிடுபவர்கள் உணவில் கார்போஹைட்ரேட்டுகளை சேர்த்துக் கொள்வதே இல்லை. சிவப்பு இறைச்சி(red meat ) சாப்பிடுபவர்கள் அதில் இருக்கும் கொழுப்புச்சத்தை கவனிப்பதே இல்லை. அதில் இருக்கும் கொழுப்புச்சத்தால் கொலஸ்ட்ரால் மற்றும் இதய பிரச்னைகள் ஏற்படும்" என்றார்.
நட்ஸ் வகைகள், பயறு வகைகள், கிட்னி பீன்ஸ் போன்ற தாவர அடிப்படையிலான சத்தான உணவுகள் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவிலிருந்து கிடைக்கும் புரோட்டீனை, நல்ல புரதம் (Good protein ) என்பார்கள். சிவப்பு இறைச்சி, புரோட்டீன் பவுடர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்தை கெட்ட புரதம் (Bad protein ) என்பார்கள்.

நல்ல புரத உணவு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. முக்கியமாக தாவர அடிப்படையிலான சத்தான உணவுகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியதிற்கும் சிறந்தவை. இவற்றை தனியாக எடுத்துக் கொள்ளாமல் உணவோடு அனைத்து ஊட்டச்சத்துகளுடன் சேர்த்து சமமான அளவில் எடுத்துக் கொள்வது பல நன்மைகளை அளிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
- தமிழரசி. ஜே