Published:Updated:

``பரிந்துரையில்லாமல் மூலிகைக்கிழங்கு சாப்பிட்டால்..." - எச்சரிக்கும் சித்த மருத்துவர் விக்ரம்குமார்

செங்காந்தள் மலர்

``உணவுப் பொருளை மருந்தாக எடுத்துக் கொள்வது என்பது வேறு; மருந்துப்பொருளை உணவாக எடுத்துக் கொள்வது என்பது வேறு. நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கிற மிளகு, சீரகத்தை மருந்துப்பொருளாக சாப்பிட்டால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது.’’

``பரிந்துரையில்லாமல் மூலிகைக்கிழங்கு சாப்பிட்டால்..." - எச்சரிக்கும் சித்த மருத்துவர் விக்ரம்குமார்

``உணவுப் பொருளை மருந்தாக எடுத்துக் கொள்வது என்பது வேறு; மருந்துப்பொருளை உணவாக எடுத்துக் கொள்வது என்பது வேறு. நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கிற மிளகு, சீரகத்தை மருந்துப்பொருளாக சாப்பிட்டால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது.’’

Published:Updated:
செங்காந்தள் மலர்

கடந்த சில தினங்களாக செங்காந்தள் பற்றியும், அதன் கிழங்கை சாப்பிட்டு உயிரிழந்த ஓர் இளைஞர் பற்றியுமான செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தில், மருத்துவரீதியாக என்ன நடந்திருக்கலாம், செங்காந்தள் கிழங்கின் விஷத்தன்மை எப்படிப்பட்டது? இது பற்றி தெரிந்து கொள்ள, சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம் பேசினோம்...

``அந்த வருத்தமான செய்தியை நானும் படித்தேன். செங்காந்தள் சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும் என்கிற யூடியூப் வீடியோவை பார்த்து நம்பி இரண்டு பேர் இந்தக் கிழங்கை சாப்பிட்டதாகத் தெரிந்துகொண்டேன். அதில் ஒருவர் இறந்துவிட்டார் என்று அறியும்போது மிகுந்த மன வருத்தமாக இருந்தது.

சித்த மருத்துவர் விக்ரம் குமார்
சித்த மருத்துவர் விக்ரம் குமார்

மருத்துவத்தை பொறுத்தவரை இரண்டு விஷயங்களை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, உணவுப் பொருளை மருந்தாக எடுத்துக்கொள்வது என்பது வேறு; மருந்துப்பொருளை உணவாக எடுத்துக்கொள்வது என்பது வேறு. விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கிற மிளகு, சீரகத்தை மருந்துப்பொருளாக சாப்பிட்டால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது. தவிர, அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்கிற அளவும் நமக்கெல்லாம் தெரியும். ஆனால், செங்காந்தள் கிழங்கு என்பது மூலிகை மருந்து. அந்த மருந்துப்பொருளை உணவுப்பொருளாக நினைத்துக் கொண்டு சாப்பிட்டதுதான் ஒருவரை மரணம் வரை கொண்டு சென்றிருக்கிறது.

செங்காந்தளில் `COLCICHINE' என்கிற மருத்துவக்கூறு ஒன்று இருக்கிறது. அதை தனியாக பிரித்து எடுத்துதான், நவீன மருத்துவத்தில் கவுட் ஆர்த்ரைட்டீஸுக்கும், ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸுக்கும் மருந்தாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இவ்வளவு டோசேஜ்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற அளவு இருக்கிறது. சித்த மருத்துவத்திலும் பல 'சுத்தி முறைகள்' செய்த பிறகு, மிகக்குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துவோம்.

உயிரிழப்பு
உயிரிழப்பு
representational image

உணவுப் பொருள்களான கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்குபோல ஒரு மூலிகைக்கிழங்கை சாப்பிட்டால், அது இப்படிப்பட்ட பின்விளைவையும் ஏற்படுத்தலாம். இறந்த நபருக்கு, செங்காந்தள் கிழங்கு உடலின் செல்கள் பிரிவதில் பிரச்னை ஏற்படுத்தியோ, ஒரே நேரத்தில் உடலின் பல உறுப்புகளை செயலிழக்க வைத்தோ மரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம். மருத்துவர்கள் பரிந்துரைக்காத எந்தவொரு மூலிகையையும், யூடியூப் பார்த்தோ வாட்ஸ்ஆப் ஃபார்வேர்ட் பார்த்தோ தயவுசெய்து சாப்பிடாதீர்கள்" என்று எச்சரிக்கை கலந்த வேண்டுகோளை முன்வைத்தார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்.