பிரீமியம் ஸ்டோரி
சித்தர்களுள் ஒருவராக அறியப்படும் இடைக்காடர், மேய்ச்சல் தொழிலை மேற்கொண்டு வந்தவர். அபாரமான ஜோதிட ஞானம் கொண்டவர். ஒரு நேரம் ஊர் மக்களிடம், ‘இன்னும் கொஞ்ச நாள்களில் கொடிய பஞ்சம் வரப்போகிறது’ என்று எச்சரித்தார்.

ஆனால், மழைக்காலம் நெருங்கிக்கொண்டிருந்ததால் யாரும் இடைக்காடரின் சொற்களை மதிக்கவில்லை. அவரை ஏளனமாகப் பேசினார்கள்.

இடைக்காடரோ பஞ்சத்தை எதிர்கொள்ளத் தயாரானார்.

தம் ஆடுகளை எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடிய எருக்கிலைகளைத் தின்னப் பழக்கினார். தன் கைவசமிருந்த வரகு தானியத்தை மண்ணுடன் சேர்த்துப் பிசைந்து சுவர்களை எழுப்பி குடிசை கட்டினார். எருக்கிலையை உண்ட ஆடுகள் உடலில் அரிப்பெடுக்க, அவை சுவரில் தம் உடம்பைத் தேய்த்துக்கொண்டன. ஆகவே, மண் சுவரிலிருந்து வரகு தானியங்கள் உதிர்ந்தன. அவற்றைச் சேகரித்து கஞ்சி காய்ச்சி உண்டு வாழ்ந்தார்.

இடைக்காடர் எதிர்பார்த்தபடியே பஞ்சம் வந்தது. ஊர் மக்களும் கால்நடைகளும் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி தவித்துக்கிடக்க, இறப்பின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால், இடைக்காடரின், அவரது ஆடுகளின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தது. இதைப் பார்த்த நவகிரக நாயகர்களும் ‘ஊரே பஞ்சத்தில் பாலைவனமாகிக் கிடக்க, இடைக்காடரை மட்டும் பஞ்சம் எதுவும் செய்யவில்லையே. எப்படி?’ என்று வியந்தனர். அதைத் தெரிந்துகொள்ள நவகிரக நாயகர்களும் ஒன்றாக இடைக்காடரின் குடிசைக்கே வந்தனர்.

இடைக்காடர் நவகிரகங்களைப் பார்த்ததும் அகமகிழ்ந்தார். ‘இந்த ஏழையின் குடிசையில் வரகு ரொட்டியும், ஆட்டுப் பாலும்தான் உள்ளன. எளிய உணவை தாங்கள் தயவுசெய்து ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று நவகிரகங்களையும் நன்றாக உபசரித்தார். வரகு ரொட்டியை விரும்பி உண்ட நவகிரக நாயகர்கள், தாகத்துக்கு ஆட்டுப் பாலைப் பருகினர். அது எருக்கிலைச் சத்து நிறைந்த ஆட்டுப் பால் என்பதால் அதை அருந்தியதும் மயங்கி விழுந்தனர். உடனே இடைக்காடர், கிரகங்கள் எந்த அமைப்பில் இருந்தால் மழை பொழியுமோ அந்த அமைப்பில் அவர்களை மாற்றிப் படுக்க வைத்தார்.

வரகு
வரகு

உடனே வானில் கருமேகங்கள் திரண்டன. பூமி குளிரக் குளிர மழை பொழிந்தது. பஞ்சம் நீங்கியது. மயக்கம் தெளிந்து விழித்தெழுந்த நவகிரக நாயகர்கள், மக்கள் நலனுக்காக இடைக்காடர் செய்த இந்த அருஞ்செயலைப் பாராட்டினர் என்று ஒரு கதை சொல்லப்படுவது உண்டு.

நெல்லோ, பிற பயிர்களோ வறட்சி தாங்காது. வெள்ளம் வந்தாலும் சங்கடம்தான். ஆனால், நீரே இல்லாத வறட்சியான சூழ்நிலை என்றாலும், அதிக மழை பெய்த காலகட்டம் என்றாலும் சரியான முறையில் விளைந்து உழவனுக்கு உற்சாகத்தைத் தரக்கூடியவை சிறுதானியங்களே. அப்படிப்பட்ட சிறு தானியங்களில் தனித்துவம் மிக்கது வரகு.

Panicum miliaceum - இது வரகின் தாவரவியல் பெயர். இது Poaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. Panicum என்ற தாவர இனத்தைச் சேர்ந்தது. Proso millet, Common millet, Hog millet, White millet - இவை வரகைக் குறிக்கும் ஆங்கிலப் பெயர்கள்.

கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களின் பூர்வீகம் ஆப்பிரிக்கக் கண்டம் என்று குறிப்பிடலாம். ஆனால், வரகின் பூர்வீகத்தை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஐரோப்பியக் கண்டத்தின் கிழக்குப் பகுதியும், தென்மேற்கு ஆசியப் பகுதியும் இணைந்த பகுதியைக் குறிப்பிடும் `டிரான்ஸ்காகசியா’ பகுதியில் சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பே வரகு காட்டுப் பயிராக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அதேபோல சீனாவின் சில காட்டுப் பிரதேசங்களிலும் வரகு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விளைந்ததாகக் கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரகு, சீனாவிலிருந்து அரேபியாவின் சில பகுதிகளுக்கும் இராக்குக்கும், கி.மு ஏழாம் நூற்றாண்டில் பரவியது. இந்தியாவில் வரகு பரவிய துல்லியமான காலம் தெரியவில்லை. ஆனால், கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டு களுக்கு முன்பிருந்தே இந்தியாவில் வரகு புழக்கத்தில் இருந்திருக்கிறது.

ஐரோப்பியக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் வரகு சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பே விளைந்திருந்தாலும், பிற ஐரோப்பிய நாடுகளில் மக்களின் உணவாக வரகு மிக மெதுவாகத்தான் பரவியது. இத்தாலியிலும் கிரீஸிலும் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் வரகு கால்பதித்ததாக நம்பப்படுகிறது.

வரகு, பழந்தமிழ் மக்களின் குறிப்பிடத்தகுந்த உணவு. அதை நிரூபிக்கும் வகையில் வரகு பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள் காணப்படுகின்றன. உணவு என்றாலே அது வரகு, தினை, கொள்ளு, அவரை ஆகிய நான்கும்தான். இந்த நான்கின்றி வேறு எதுவும் உணவே இல்லை என்று சங்ககாலப் புலவரான மாங்குடி கிழார் அழுத்தமாகச் சொல்கிறார்.

`கருங்கால் வரகே இருங்கதிர்த்தினையே

சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர்

அவரையொடு இந்நான்கல்லது உணாவும் இல்லை.'

இந்த புறநானூற்று வரிகள் மூலமாக வரகு, பழந்தமிழ் மக்களின் அடிப்படை உணவில் ஒன்றாக இருந்ததை அறிந்துகொள்ள முடிகிறது. புறநானூற்றில் பறம்பு நாட்டின் வளத்தைச் சொல்லும்விதமாக கபிலர் பாடிய வரிகள்…

`கீழு மேலு மெஞ்சாமைப் பலகாய்த்து

வாலிதின் விளைந்த புதுவர கரியத்

தினைகொய்யக் கவ்வை கறுப்ப…'

கதிரினது அடியும் தலையும் ஒழியாமல் சிறப்பாக விளைந்திருக்கும் புதிய வரகை `அறுக்க, தினையைக் கொய்ய…' என்று இந்தப் பாடல் விரிகிறது.

`புதுவர கரிகாற் கருப்பை பார்க்கும்

புன்றலைச் சிறாஅர்…'

இதுவும் புறநானூற்று அடிகள். புதிதாக விளைந்த வரகை அரிந்தபின் அதை வந்து மேயும் எலியைப் பிடிப்பதற்காகக் குறி பார்க்கிறார்கள் என்பது பொருள்.

வரகும் கேழ்வரகும் வேறு வேறு. கேழ்வரகு என்பது சிவப்பு நிறம்கொண்ட வரகு. சாதா வரகு என்பது பழுப்பு நிறம் கொண்டது. ஏழு அடுக்குத் தோல் கொண்டது. இந்தத் தோலை நீக்குவதை வரகு தீட்டுதல் என்பார்கள். சரியாகத் தீட்டப்பட்ட வரகை உண்ணுதல் அவசியம். வரகரிசியைத் தீட்டினால் அது வெண்மையாகிவிடும். கேழ்வரகைத் தீட்ட முடியாது.

பொதுவாக ஆடிப்பட்டம், வரகு சாகுபடிக்கு ஏற்றது. தவிர, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் விதைக்கப்படும் வரகு, ‘பனிவரகு’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பனிவரகை விதைத்தால், அப்போது கிடைக்கும் மழை மற்றும் பனியை வைத்தே 75 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும். சாதா வரகு என்னும் சிறுவரகு, பனிவரகு, விளைச்சலுக்கான காலம் கொஞ்சம் அதிகமாகத் தேவைப்படும் பெருவரகு என்று வரகில் மொத்தம் மூன்று வகை உண்டு.

அமெரிக்காவில் வரகு, கால்நடைத் தீவனங்கள், பறவைகளுக்கான உணவுகள் தயாரிப்பதில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அறுவடைக்குப்பின் கிடைக்கும் வரகுப் புல்லுக்கு உடம்புச் சூட்டைத் தணிக்கும் சக்தி இருப்பதால், அதை நம் விவசாயிகள் கால்நடைகளுக்கு உணவாகக் கொடுக்கிறார்கள். வீடுகளில் கூரை வேய, வரகுப்புல்லைப் பயன்படுத்தலாம். கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.

நன்மைகள்: வரகரிசியில் நிறைய நன்மைகள் புதைந்துள்ளன. வரகில் உள்ள நார்ச்சத்து அரிசி, கோதுமையில் இருப்பதைவிட மிக அதிகம். தவிர, வரகில் மாவுச்சத்து குறைவு. ஆகவே, இது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. குறிப்பாக நீரிழிவாளர்களின் உணவு நண்பன். வரகு, உடம்பில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. விரைவில் செரிமானம் ஆகி, உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. வரகரிசி உடலில் கெட்ட கொழுப்பைக் கரைத்து, உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. மாதவிடாய்ப் பிரச்னைகள் உள்ள பெண்களுக்கு வரகு நல்ல உணவு.

கடைசியாக ஔவைப்பாட்டியின் மெனு ஒன்றைப் பார்த்துவிடுவோம்.

`வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்

முரமுரவென் றேபுளித்த மோரும் - பரிவுடனே

புல்வேளூர்ப் பூதன் புகழ்புரிந் திட்டசோ

றெல்லா வுலகும் பெறும்.'

இது ஔவையின் பாடல். வரகரிசியில் சமைத்த சோறும், அதற்குத் தொட்டுக்க, வழுதுணங்காயில், அதாவது கத்திரிக்காயைச் சுட்டு சமைத்த கறியும், முரமுரவெனப் புளித்த மோரும் அன்றே நம் ஔவைப் பாட்டி ரசித்து உண்ட மெனுவாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் அது நம் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.

கலசத்தில் வரகு

இயற்கைப் பேரழிவுகள் என்பதை மனிதனால் தடுக்க முடியாது. ஒரு பெரிய வெள்ளத்துக்குப் பிறகு, மீண்டும் விவசாயம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு விதைகள், தானியங்கள் தேவை. வெள்ளத்திலிருந்து தானியங்களை, விதைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு உயரமான இடம் அவசியம்.

ஊரிலேயே உயரமான இடம் என்றால் அது கோயில் கோபுரம்தான். அதற்காகத்தான் நம் முன்னோர்கள் கோயில் கலசங்களில் தானியங்களைப் பாதுகாத்து வைக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்தார்கள்.

இன்றைய மெனு: வரகு

இந்தக் கலசங்கள் ஐம்பொன்னால் செய்யப்பட்டவை. அதில் கொட்டப்படும் தானியங்களும் உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

பொதுவாக நெல், வரகு, கேழ்வரகு, தினை, சோளம், மக்காச்சோளம், சாமை, எள் ஆகியவற்றைக் கலசங்களுள் கொட்டினார்கள். அதில் வரகு தானியத்தை அதிகமாக நிரப்பினார்கள். ஏனென்றால் முளைப்பதற்கு முன்பான உறக்க நிலையில் இருக்கும் ஒரு தானியத்தில் எப்போதும் உயிரோட்டம் இருக்கும். அந்த உயிரோட்டம்தான், தானியத்தின் முளைப்புத்திறனை, அதைச் சுற்றி ஒரு காந்தப் புலத்தை உருவாக்கிப் பாதுகாத்து வைத்திருக்கும். அந்த காந்தப் புலம் பன்னிரண்டு ஆண்டுகள் வரை நீடித்து இருப்பது வரகு தானியத்தில் மட்டும்தான்.

அதாவது பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தும் வரகு முளைப்புத் திறனுடனேயே இருக்கும். அதனால்தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தி, கோயில் கும்பங்களில் உள்ள வரகு தானியத்தை மாற்றியமைக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு