Published:Updated:

நடிகர் மனைவியின் திடீர் மரணம்... உயிரைப் பறித்ததா பேலியோ டயட்? மருத்துவர் தரும் விளக்கம்!

பரத் கல்யாண்

பேலியோ டயட்டில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், பேலியோ டயட்டால் ஏன் மரணம் ஏற்படுகிறது என்பது பற்றி உணவியல் ஆலோசகரான சங்கீதா ஜெயக்குமார் தரும் விளக்கங்கள்...

நடிகர் மனைவியின் திடீர் மரணம்... உயிரைப் பறித்ததா பேலியோ டயட்? மருத்துவர் தரும் விளக்கம்!

பேலியோ டயட்டில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், பேலியோ டயட்டால் ஏன் மரணம் ஏற்படுகிறது என்பது பற்றி உணவியல் ஆலோசகரான சங்கீதா ஜெயக்குமார் தரும் விளக்கங்கள்...

Published:Updated:
பரத் கல்யாண்

கன்னட திரையுலகில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் பரத் கல்யாண். 2007-ம் ஆண்டு, சிருங்காரம் எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரவேசித்தார். தொடர்ந்து வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா, கனாக் காணும் காலங்கள் ஆகிய தொடர்களிலும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், ஜமீலா என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இவரின் மனைவி பிரியதர்ஷினி (43). இவர் உடல் எடையைக் குறைக்க பேலியோ டயட் எனும் உணவுக்கட்டுப்பாடு முறையைப் பின்பற்றி வந்துள்ளார். இந்நிலையில், இதனால் தீவிர உடல் பாதிப்புக்குள்ளான இவர் நேற்று (31.10.22) அதிகாலை 5 மணியளவில் இறந்துள்ளார்.

பேலியோ டயட்டை பொறுத்தவரை காய்கறிகள், நட்ஸ், இறைச்சி ஆகியவற்றை உட்கொள்ளலாம். ஆனால், பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் உணவுகள், பழங்கள் இவற்றைத் தவிர்க்க வேண்டும். கற்கால உணவு முறை என்று பலரும் இந்த டயட்டில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இவரது இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, பேலியோ டயட்டில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், பேலியோ டயட்டால் ஏன் மரணம் ஏற்படுகிறது என்பது பற்றி சென்னையைச் சேர்ந்த உணவியல்ஆலோசகரான சங்கீதா ஜெயக்குமாரிடம் பேசினோம்.

diet
diet

``பேலியோ டயட் முறையைக் கடைப்பிடிப்பதற்கு முன்னர், ஒரு விரிவான ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அந்த ரத்தப் பரிசோதனையில் கொளஸ்ட்ரால் அளவு, கிரியாட்டினின் (creatinine) எனப்படும் புரோட்டின் அளவு ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். மெட்டபாலிசம் அளவை சரிபார்க்க வேண்டும். ஒருசிலருக்கு மெட்டபாலிசம் அளவு குறைவாக இருப்பதால், ஜீரணம் ஆக அதிக நேரம் எடுக்கும். அதோடு உடல் எடையைக் குறைப்பதும் அவர்களுக்கு எளிதாக இருக்காது.

பேலியோ டயட்டை கடைப்பிடிக்கும் முன், உணவியல் ஆலோசகரிடம் உடல் எடைக்குத் தக்க புரோட்டின் உணவுகள் குறித்த வழிகாட்டுதல்களைப் பெற வேண்டும். நிபுணரின் வழிகாட்டுதல் இன்றி இந்த பேலியோ டயட்டை ஒருபோதும் கடைப்பிடிக்கக் கூடாது. இன்று, மருத்துவர்கள் முதல், உடல் எடை குறைய வழிகாட்டும் நிறுவனங்கள் வரை பேலியோ டயட் முறையை சிபாரிசு செய்கின்றனர். பேலியோ டயட்டை கடைப்பிடிக்கப் போகும் ஒருவரின் மெட்டபாலிக் அளவுக்கு ஏற்றாற்போல் அந்த டயட் இருக்க வேண்டும் என்பதைப் பலரும் கவனிக்க மறந்துவிடுகிறார்கள். அதற்கு ஏற்பதான் டயட் சார்ட் தயாரிக்கப்பட வேண்டும்.

பேலியோ டயட்டை பொறுத்தவரை அது கற்கால உணவு முறை. ஆதி மனிதன் காலத்தில் அவனுக்குப் பழங்கள், பால் என அந்த உணவுகள் பற்றி எதுவும் தெரியாது. அன்றைக்கு அவனுக்கு இறைச்சி மட்டும்தான் உணவாக இருந்தது. அதிலுள்ள கொழுப்புகள் அவன் தசைகளை வலுவாய் வைத்திருந்தன. இன்றைய காலகட்டத்தில் பேலியோ டயட்டை பரிந்துரைக்க காரணம் அந்த உணவுக்கட்டுப்பாட்டு முறையில் சர்க்கரை அளவை முற்றிலும் தவிர்ப்பதால்தான். பழங்களில் சுக்ரோஸ் இருக்கும். அதனால்தான் பேலியோ டயட்டில் பழங்களைத் தவிர்க்கிறார்கள். ஆனால், இவற்றை ஓர் உணவியல் ஆலோசகரின் வழிகாட்டுதலின்கீழ் கடைப்பிடிக்க வேண்டும். அதோடு பால் சார்ந்த உணவுகளை முற்றிலும் உட்கொள்ளாமல் தவிர்ப்பதும் கூடாது.

பேலியோ டயட் !
பேலியோ டயட் !

பேலியோ டயட்டை தொடர்ந்து கடைப்பிடிக்கையில் சிலசமயம் அதிகமான கொழுப்பு உடலில் சேர வழிவகுக்கும். இதனால் ரத்த உறைவு, ரத்த அடைப்பு மற்றும் புரோட்டின் அளவு அதிகமாவதால் சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்படும் அபாயங்களும் உள்ளன. கல்லீரல் சார்ந்த நோய்கள் பாதிக்கும் அபாயமும் உள்ளது. பொதுவாக, பழங்களில் அதிக வைட்டமின்கள் இருக்கும். அதுபோல பாலில் கால்சியம் இருக்கும். ஆனால், இந்த உணவுகளைத் தவிர்க்கும்போது, கால்சியம் மற்றும் வைட்டமினின் அளவு உடலில் குறைய ஆரம்பிக்கும். மெள்ள மெள்ள இது மரணம் வரை கொண்டு செல்லும்.

உடற்பயிற்சிகள் செய்பவர்களாயினும் டயட்டை கடைப்பிடிக்கும் முன்னர், உணவியல் ஆலோசகரை சந்தித்து வழிகாட்டுதல் களைப் பெற வேண்டும். உட்கொள்ளும் உணவுகளின் கலோரியை சமப்படுத்தும் வகையில், உடற்பயிற்சிக்கு முன் எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், உடற்பயிற்சிக்குப் பின் எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது பற்றிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பெற்றிருக்க வேண்டும். உடற்பயிற்சியில் ஈடுபடும்போது தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்ளாமல் இருக்கவும் கூடாது; தேவைக்கு மேல் உணவை எடுத்துக்கொள்ளவும் கூடாது.

பேலியோ டயட்!
பேலியோ டயட்!

நாம் வாழும் இடத்துக்கு ஏற்ப உணவு எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். இந்தியர்களுக்கு கார்போஹைட்ரேட் மிகவும் அவசியமானது. ஆனால், அதற்காக மேற்கத்திய உணவு முறையை முழுமையாகக் கடைப்பிடிக்கவும் கூடாது. பேலியோ டயட்டை பொறுத்தவரை இரண்டு மாதங்கள் கடைப்பிடிக்கலாம். அதற்குப் பின், உணவியல் ஆலோசகரின் வழிகாட்டுதலின் படி மற்றொரு டயட்டை மேற்கொள்ளலாம். ஆனால், எந்த டயட்டையும் நீண்ட நாள்களுக்கு கடைப்பிடிக்கக் கூடாது” என்றார்.