Published:Updated:

புத்தம் புது காலை: சர்க்கரை நோய்க்கு பலா பழத்தில் மருந்தா? இன்ஜினீயரின் விடாமுயற்சியும், வெற்றியும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பலாவில் சர்க்கரை நோய்க்கு மருந்து
பலாவில் சர்க்கரை நோய்க்கு மருந்து

சிறுவயதில் ஏற்படும் முதலாவது நோய்வகைக்கு இன்சுலின் ஊசிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், வாழ்க்கைமுறை மாற்றங்களால் நாற்பதுகளில் ஏற்படும் இரண்டாவது நோய்வகைக்கு, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் என்ற கூட்டு சிகிச்சையே பரிந்துரைக்கப்படுகிறது.

"சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தணுமா... பலா சாப்பிடுங்க!" என்று ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் நம்மிடம் சொன்னால் நம் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? காதில் வாங்காமல் கடந்துபோவோம்தானே! ஆனால், இந்த இன்ஜினீயர் சொன்னதை இப்போது உலகமே கேட்க ஆரம்பித்திருக்கிறது!


"வேணில் சக்க... வேரிலும் காய்க்கும்!''

அதாவது "வேண்டும் என்றால் பலா, கிளையில் மட்டுமல்ல வேரிலும் காய்க்கும்" என்று விடாமுயற்சியுடைவர்கள் எப்படியும் வெற்றியடைவார்கள் என்பதைச் சொல்லும் மலையாளப் பழமொழி இது. இந்தப் பழமொழியைப் போலவே இப்போது சர்க்கரை நோய்க்கு மருந்து பலாவில் இருந்தே கிடைத்திருப்பது ஒரு மகத்தான ஆச்சர்யம்தான்!

"இந்தியாதான், உலகின் சர்க்கரை நோயாளர்களின் தலைநகரம்" என்று அழைக்கப்படும் அளவிற்கு, நம்மிடையே சர்க்கரை நோய் அதிகளவு காணப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜோசப் பெங்களூர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு இன்ஜினீயர்.

தினசரி தன்னைச் சுற்றி வேலையிடத்திலும், சொந்தங்களிலும் சர்க்கரை நோயாளிகளைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போயிருந்த ஜோசப்பின் வாழ்க்கையில் திடீரென ஒரு திருப்புமுனை சம்பவம் நடந்தது. 2013-ம் ஆண்டு சர்ச்சில் சந்தித்த பாதிரியார் ஒருவர், தான் அரிசி உணவிற்கு பதிலாக பச்சைப்பலாவை உட்கொண்டதால் தனக்கு சுகர் கன்ட்ரோலில் இருப்பதாக சொல்ல அதைப்பற்றி தொடர்ந்து யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் ஜேம்ஸ் ஜோசப்.

ஜேம்ஸ் ஜோசப்
ஜேம்ஸ் ஜோசப்

தொடர்ந்து சர்க்கரை நோயையும், பலாவையும் பற்றி பல தகவல்களையும் தேடிப் படிக்கத் தொடங்குகிறார். பொதுவாக இரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் ஹார்மோனின் உற்பத்தியின்மையால் ஏற்படுவது டைப் 1 டயாபடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதுவே உடலில் உற்பத்தியாகும் இன்சுலினை உடலின் திசுக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அதை டைப் 2 டயாபடிஸ் என்று மருத்துவம் அழைக்கிறது.

இதில் சிறுவயதில் ஏற்படும் முதலாவது நோய்வகைக்கு இன்சுலின் ஊசிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், வாழ்க்கைமுறை மாற்றங்களால் நாற்பதுகளில் ஏற்படும் இரண்டாவது நோய்வகைக்கு, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் என்ற கூட்டு சிகிச்சையே (medical nutrition therapy) பரிந்துரைக்கப்படுகிறது.

பச்சைப் பலாவில், உடனடியாக ஆற்றலைக் கூட்டாத மாவுச்சத்து (low glycemic index) உள்ளது என்பதை அறிந்துகொள்கிறார் ஜோசப். மேலும் இதில் குறைவான கலோரிகள், அதிகளவில் நார்ச்சத்து மற்றும் நீர்த்தன்மை அதனுடன் கூடிய மாங்கனீஸ், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் உள்ளது என்பதையும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் தேவையான இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் என்பதையும் அறிந்துகொள்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தொடர்ந்து ஜோசப், தனது மைக்ரோசாஃப்ட் பணியை உதறிவிட்டு, தனது சொந்த மண்ணான கேரளாவின் ஆலுவா நகரில், பச்சை பலாவைப் பதனிடும் முயற்சியில் இறங்குகிறார். அதிக எடை, அதிக நீர்த்தன்மை, சீக்கிரமே பழுத்து அழுகிவிடும் நிலை என இயற்கையிலேயே சக்க பழம் தடங்கல்களைத் தருவிக்க, பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்கிறார் ஜோசப்.


ஆனால், எதுவும் அவ்வளவு எளிதாக அமையாமல் மனம் உடைந்திருந்த நேரத்தில், டாக்டர் அப்துல் கலாம் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு அமைகிறது. அப்படி சந்தித்தபோது தனது முயற்சியையும், அதன் நன்மைகள் குறித்தும் ஜோசப் அவரிடம் பகிர்ந்துகொள்கிறார். "பொதுமக்களின் உணவு பழக்கங்களை பாதிக்காத வகையில் இதையும் உணவாகவே உருவாக்க முயற்சி செய்யலாமே" என்று கலாம் சொன்ன வார்த்தைகள்தான் இவரது ஆராய்ச்சியில் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

ஜேம்ஸ் ஜோசப்
ஜேம்ஸ் ஜோசப்

அதன்பிறகு பச்சைப் பலாவில் இருந்து மாவு தயாரிக்க முடிவுசெய்கிறார் ஜோசப். தனது எட்டு வருட விடா முயற்சியில், பழுக்காத, ஆனால் முற்றிய பச்சைப் பலாப்பழத்திலிருந்து, உறைந்து உலர்த்தும் தொழில்நுட்பம் கொண்டு (freeze drying technology) எதிலும் கலக்கக் கூடிய, சுவை மற்றும் மணமற்ற சமநிலை மாவைத் தயாரிக்கிறார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அரசு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் கோபால் ராவ், புனேவைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பிகள் நிபுணரான டாக்டர் சுனில் நாயக் ஆகியோருடன் சேர்ந்து தனது மாவின் மருத்துவ குணங்களை நிரூபிக்க அடுத்த கட்ட ஆராய்ச்சியை ஆரம்பிக்கிறார் ஜோசப்.

2019-ம் ஆண்டு மே மாதம் தொடங்கி, 2020 பிப்ரவரி மாதம் வரை நடந்த இந்த ஆய்வில், 18 முதல் 60 வயதுவரை உள்ள சர்க்கரை நோயாளர்களை இரு குழுக்களாகப் பிரித்து தேர்வுசெய்கிறார்கள். அவர்களில் ஒரு குழுவினருக்கு, மருந்துகளுடன் பச்சைப் பலா மாவு ஒரு நாளில் முப்பது கிராம் அளவில் (30g/d) உணவாக கொடுக்கப்படுகிறது. மற்றொரு குழுவினருக்கு மருந்துகள் மட்டுமே கொடுத்து, அதன்பின் தொடர் சர்க்கரை அளவு பரிசோதனைகளும், மூன்று மாதக் கட்டுப்பாட்டைக் காட்டும் HbA1c அளவின் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

பலா மாவு
பலா மாவு

இந்த ஆய்வின் இறுதியில், பலா மாவை உணவில் உட்கொண்ட சர்க்கரை நோயாளர்களுக்கு, ஃபாஸ்ட்டிங் மற்றும் உணவிற்குப் பின்னான சர்க்கரை அளவுகளும், குறிப்பாக HbA1c அளவும் நன்கு கட்டுக்குள் இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வினை அமெரிக்க டயாபடிஸ் அசோசியேஷனுக்கும், ஆஸ்திரேலிய அமைப்பிற்கும் அனுப்பி வைத்ததுடன், சமீபத்தில் இந்திய பிரதமர் மோடியின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார் ஜேம்ஸ் ஜோசப்.

அதனால் இப்போது அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளது இந்த "வேணில் சக்க எனும் வேர்ப்பலா." ஜோசப் இந்த பச்சைப்பலாவில் மாவு தயாரிக்க jackfruit365 என்ற நிறுவனத்தை கேரளத்தில் தொடங்கியுள்ளார்.

"இந்த மாவை நீங்கள் தினமும் உட்கொள்ளும் இட்லி அல்லது ரொட்டியின் அரிசி மற்றும் கோதுமை மாவில், ஒன்று அல்லது இரண்டு டேபிள்-ஸ்பூன் சேர்த்துக் கொண்டால், உங்களது சர்க்கரை அளவு நன்கு கட்டுக்குள் வரும்" என்கிறார் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர். "கடந்த 2 வருடங்களாக எனது மூன்று வேளை உணவிலும் தலா ஒரு தேக்கரண்டி பலாப்பழப் பொடியை சேர்த்து வருகிறேன். ஆனால், ஒரு வருடத்திலேயே இன்சுலினை நிறுத்தி, சர்க்கரை அளவை வெறும் மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியும் எனும் அளவுக்கு சர்க்கரை குறைந்துவிட்டது" என்கிறார் மற்றொரு பயனாளர்.

தற்சமயம் இந்தியா தாண்டி ஆசிய மற்றும் அரபு நாடுகளில், பச்சைப்பலா மாவு பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. ''உணவின் முலமாகவே சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது நல்ல செய்திதானே'' என்று சிரிக்கிறார் ஜோசப். எது எப்படியோ... முள்ளை முள்ளால் எடுப்பது போல, முட்கள் நிறைந்த பலாவை உணவுடன் சிறிது சேர்த்து உங்கள் சர்க்கரையைக் குறைத்திடுங்கள் என்கிறது இந்த வேரில் பழுத்த பலா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு