Published:Updated:

`மதிய உணவுத்திட்டத்தில், சிறுதானியங்களைச் சேர்க்க வேண்டும்' - கோரிக்கை வைக்கும் கர்நாடக ஆய்வு!

சிறுதானியம்
சிறுதானியம்

``சிறுதானியம் உட்கொள்ளும் குழந்தைகள், மற்ற குழந்தைகளைவிடவும் 50 சதவிகிதம் வேகமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்கின்றனர்'' - ஆய்வு

கர்நாடகா மாநிலத்தின் கிராமப்புற பள்ளிகள் சிலவற்றில் கடந்த மூன்று மாதங்களாக ஆய்வொன்று செய்யப்பட்டு வந்தது. சுமார் 1,500 குழந்தைகள் மத்தியில் செய்யப்பட்ட அந்த ஆய்வில், `மதிய வேளையில், சிறுதானிய வகை உணவுகள் உட்கொள்ளும் குழந்தைகள், மற்ற குழந்தைகளைவிடவும் 50 சதவிகிதம் வேகமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்கின்றனர்' என்பது, ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடல் பருமன்
உடல் பருமன்

சிறுதானிய உணவுகள் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு, இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னையான உடல்பருமன் தடுக்கப்படுவதாகவும், அதன் காரணமாகக் குழந்தைகளின் பாடி மாஸ் இண்டெக்ஸ் (Body Mass Index) எனப்படும் உடல் நிறை குறியீட்டெண் BMI, சீராகப் பராமரிக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வின் முடிவை அடிப்படையாக வைத்து, `இனி குழந்தைகளுக்கு, அரிசி உணவுக்குப் பதிலாக, சிறுதானிய உணவுகளை அளிக்கலாம்' என ஊட்டச்சத்து நிபுணர்கள் சார்பில் பரிந்துரைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

குழந்தைகளுக்கான இலவச மதிய உணவுத்திட்டத்தில், சிறுதானியம் சேர்க்கலாமே!
பரிந்துரைக்கும் ஆய்வுக்குழு!
Vikatan

சர்வதேசப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அக்‌ஷயா பட்ரா அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் யாவும், ஜர்னல் `நியூட்ரியென்ட்ஸ்' என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆய்வுக் குழுவினரின் சார்பில் `இலவச மதிய உணவுத்திட்டத்தின் கீழ் வரும் அனைத்துப் பள்ளிகளிலும், இனி சிறுதானிய உணவுகள் தரப்பட வேண்டும்' என்ற கோரிக்கை மத்திய அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது.

சிறுதானியம்
சிறுதானியம்

ஏற்கெனவே உணவு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் சிறுதானியங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது, இங்கே குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழலில் குழந்தைகளுக்கான மதிய உணவுத்திட்டத்திலும் அவற்றைச் சேர்ப்பதென்பது ஆரோக்கியமான விஷயம்தானே!

அடுத்த கட்டுரைக்கு