Published:Updated:

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்
பிரீமியம் ஸ்டோரி
கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்

தொகுப்பு: ரேவதி; அட்டைப்படம்: மதன்சுந்தர்

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

தொகுப்பு: ரேவதி; அட்டைப்படம்: மதன்சுந்தர்

Published:Updated:
கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்
பிரீமியம் ஸ்டோரி
கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்
குடும்பத்தின் ஆரோக்கியம் தொடங்கும் இடம் சமையலறை. அதைச் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் வைத்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம். சுத்தமான சமையலறையில் சமைக்கும்போது சுவையும் கூடும். சமையல் வேலை ரசனையானதாக மாறும். சமையலறையைச் சுத்தமாக வைத்துக்கொள்வதை ஒரு வேலையாகப் பார்க்காமல், சமையலோடு சேர்ந்த விஷயமாகப் பின்பற்றிப் பழக வேண்டும்.
கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

ஏ டு இஸட் தகவல்களைப் பகிர்ந்தவர்கள்: சமையல் வித்தகிகளும் இல்லத்தரசிகளுமான...

 உமா அபர்ணா -  ஜெயஸ்ரீ அனந்த் -  சாருலதா -  வித்யா தேசிகன் -  கீதா ஷங்கர்
உமா அபர்ணா - ஜெயஸ்ரீ அனந்த் - சாருலதா - வித்யா தேசிகன் - கீதா ஷங்கர்

சமையலறை எப்படி இருக்க வேண்டும், சமைப்பதற்கு முன்பும் சமைத்து முடித்த பிறகும் கவனிக்க வேண்டிய விஷயங்கள், பாதுகாப்பு உள்ளிட்ட கிச்சன் பராமரிப்பு பற்றிய ஏ டு இஸட் தகவல்களைப் பகிர்கிறார்கள் அனுபவமிக்க இல்லத்தரசிகள்...

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

சொர்க்கம் என்பது சுத்தம் உள்ள கிச்சன் - மேடை

* சொந்த வீடு கட்டுபவர் என்றால், சமையலறை மேடையை சரியான உயரத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும் அல்லது கட்டிய வீட்டை வாங்கினாலும் சமையலறை மேடையும், சாமான்கள் வைக்கும் இடமும் வீட்டில் சமையல் செய்பவரின் உயரத்துக்கு ஏற்றவாறு இருத்தல் அவசியம். மேடை மிக உயரமாக இருந்தால், ஒவ்வொரு முறை சமைக்கும்போதும், எட்டி எட்டிப் பார்த்து, கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால், கை மற்றும் கழுத்துவலி வரலாம். இதன் தாக்கம் சமையலில் பிரதிபலிக்கும். மேலும், எட்டி எடுக்கும்போது பொருள்கள் கொட்டவும் வாய்ப்புகள் அதிகம்.

* சமையலறையின் நீள, அகலத்துக்கேற்ப மேடை அமைப்பதை பிளான் செய்ய வேண்டும். `L' வடிவ சமையலறை பார்ப்பதற்கு அழகு. துலக்கிய சாமான்களைக் கவிழ்த்து வைக்க வசதியாகவும் இருக்கும்.

* ஸ்டவ்வுக்கும் சிலிண்டருக்குமிடையே மேடையில் துளையிட்டு அதனுள் டியூபைப் பொருத்துவது பாதுகாப்பானது. வேலை செய்துகொண்டிருக்கும்போது வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் டியூப் இடைஞ்சலாகாமல் இருக்க இது உதவும்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

* மேடையைச் சுற்றி விளிம்பு பகுதியில் ஓர் அங்குல அளவுக்கு டைல்ஸ் ஒட்டலாம். மேடையைத் துடைப்பதைவிட, தினமும் கழுவிவிடுவதுதான் சுத்தம். அதனால் சிங்க்குடன் இணைந்த மேடையின் ஓரத்தில் டைல்ஸ் ஒட்டினால் கழுவிவிட வசதியாக இருப்பதுடன், தண்ணீரும் வெளியே கசியாது.

* தினமும் மேடையைக் கழுவ முடியாதவர்கள் குறைந்தபட்சம் தினமும் அதைத் துடைப்பதுடன், வாரம் ஒரு முறை நன்றாக சோப்பு நீரால் கழுவிவிட்டால் எப்போதும் பளிச்சென இருக்கும்.

* சமைத்ததும் சமைத்த பாத்திரங்கள், பொருள்களை எடுத்த டப்பாக்கள், உபயோகித்த டம்ளர்கள் போன்றவற்றை மேடையிலேயே போட்டு வைக்க வேண்டாம். எடுத்த கையோடு இவற்றை உடனுக்குடன் கழுவி, அவற்றுக்கான இடங்களில் அடுக்கிவைப்பது அடுத்தவேளை சமைக்கும்போது எளிதாக இருக்கும்.

* மேடையில் ஸ்டவ்வுக்கு அருகிலேயே சப்பாத்தி இடுவதைத் தவிர்ப்பது நல்லது. பிறகு அந்த இடத்தைச் சுத்தப்படுத்துவது கடினம்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...
pixelfit

பாத்திரங்கள்

* பாத்திரங்களைக் கழுவும்போது எஞ்சியிருக்கும் கறிவேப்பிலை, மிளகாய், காய்கறித்தோல் போன்றவற்றை உடனுக்குடன் குப்பைத்தொட்டியில் போட்டுவிட வேண்டும். இதில் சோம்பேறித்தனம் பார்த்தால், அடிக்கடி டிரெயின் (Drain) அடைத்துக் கொள்ளும். பிறகு சரிசெய்யும் வரை அவஸ்தைதான்.

* சமைக்கும் பாத்திரங்களையும், சாப்பிடப் பயன்படுத்திய பாத்திரங்களையும் உடனுக்குடன் சுத்தமாகக் கழுவி வைத்து விட்டால் வாடை இருக்காது. பயன்படுத்திய பாத்திரங்களை, மலை குவியல் போலாக்கி டென்ஷனாகவும் தேவையில்லை, பார்ப்பதற்கும் பளிச்சென இருக்கும். வேலையாள் வரவில்லை யென்றால், அவர் வரும்வரை அப்படியே போட்டு விடுவது, கிருமிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடும்.

* நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் வெவ்வேறு மெட்டீரியல்களில் இருக்கும். ஒவ்வொரு பாத்திரத்தையும் தனித்தனியே வெவ்வேறு முறைகளில் கழுவ வேண்டும்.

* எண்ணெய்ப் பிசுக்கு படிந்த, அடிப்பிடித்த பாத்திரங்களை ஸ்க்ரபிங் பிரஷ் கொண்டு தேய்த்தால் எளிதில் சுத்தமாகிவிடும்.

* தீய்ந்து போன பாத்திரங்களைத் தேய்ப்பது கடினம். உடனடியாக முடியாவிட்டாலும் ஒருமுறை நன்றாகத் தேய்த்து, பிறகு வெந்நீரை விட்டு டிடர்ஜென்ட் போட்டு ஸ்க்ரப்பால் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் ஊறவிட வேண்டும். கடைசியில் எலுமிச்சைப்பழச் சாறு கலந்த வெந்நீரில் தேய்த்துக் கழுவிவிடுங்கள். கரி பிடித்த வாசனை போய், தீய்ந்துபோன பாத்திரம், பளிச்சென மாறும்.

* பாத்திரங்களைக் கழுவிச் சுத்தப்படுத்தியதும் நன்றாகக் காய வைத்துவிட வேண்டும். ஈரம்போக கவிழ்த்து வைத்தால் எளிதில் உலர்ந்துவிடும். அல்லது சுத்தமான துணியால் துடைத்து, வெயில் படும்படி வைக்க வேண்டும். இது பாத்திரங்களைச் சுத்திகரித்ததற்கு (ஸ்டெரிலைஸ்) ஈடாகும்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...
metamorworks

கிருமிகளுக்கு நோ என்ட்ரி

* பாத்திரங்களைத் தேய்த்து முடித்தவுடன் பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தும் நார் அல்லது ஸ்க்ரப்பரை நன்றாக அலசி வெயிலில் காயவைக்க வேண்டும். அப்போதுதான் கிருமிகள் பரவாமல் இருக்கும்.

* காய்கறி நறுக்கும் பலகையைச் சரியாகச் சுத்தப்படுத்தாவிட்டால், பாக்டீரியா பல்கிப் பெருகுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்தப் பலகையைப் பயன்படுத்தும்போது, அடுத்து நாம் சமைக்கும் உணவையும் கெடுத்துவிடும். பலகையைச் சுத்தப்படுத்தாமல் அப்படியே வைக்கும்போது, அதில் படிந்துள்ள காய்கறிக் கழிவுகள் கரப்பான் பூச்சி, பல்லி என எல்லாவற்றுக்கும் உணவாகி விடும். அது விஷமாகவும் மாறலாம். காய்கறிகளை வெட்டியதும் அரிவாள்மனை, கத்தி, பலகை போன்றவற்றை சோப் போட்டு நன்றாகக் கழுவி வைத்து விட வேண்டும்.

* நறுக்கும் பலகையில் கத்தி பட்டு கீறல்கள் இருந்தால் உடனே மாற்றிவிடுங்கள். என்னதான் கழுவி வைத்தாலும், கத்தியின் தடம் பதிந்த இடங்களில் கிருமிகள் பெருகி உணவை விரைவில் கெட்டுப்போக வைத்துவிடும். அதேபோல் கத்தியையும் சரியாகக் கழுவ மறந்தால் அதில் கிருமிகள் பெருகும்.

* சோடியம் ஹைபோகுளோரைட் உள்ள கிருமிநாசினி மூலம் பாத்திரங்களைச் சுத்தம் செய்வது சிறந்தது.

* மூடியுடன்கூடிய டஸ்ட்பின் ஒன்றை சிங்குக்கு கீழே வைத்து விட வேண்டும். பாத்திரங்களைத் தேய்த்ததும், உடனடியாக சிங்கினை நன்றாகத் தேய்த்து, வெந்நீரால் ஒருமுறை கழுவ வேண்டும். அதில் உள்ள காய்கறி மற்றும் இதரக் கழிவுகளை உடனடியாக எடுத்து அந்த டஸ்ட்பின்னுள் போட வேண்டும். இப்படி, பாத்திரங்களைக் கழுவியதும் சிங்க்கை சுத்தம் செய்து விட்டால், கிருமிகளின் பெருக்கம் இருக்காது.

* குப்பைகளைப் போடும் டஸ்ட்பின்கூட சுத்தமாக இருக்க வேண்டும். குப்பைகளை வெளியில் கொட்டியவுடன், டஸ்ட் பின்னை உடனடியாக டிடர்ஜென்ட் போட்டுக் கழுவுவது முக்கியம்.

* மட்கும் பிளாஸ்டிக் கவர் பண்டலாகக் கிடைக்கிறது. அதை வாங்கி டஸ்ட்பின்னுக்குள் வைத்துவிட்டால், டஸ்ட்பின்னில், உணவுத் துணுக்குகள் ஒட்டாமல் இருக்கும். அப்படியே கவருடன் வெளியில் கொட்டிவிடலாம். குப்பைத் தொட்டியை லேசாக கழுவினாலே போதும்.

* உணவுப் பொருள்களை நன்றாகக் காயவைத்தால் கிருமித் தொற்று பெருகாது. உதாரணத்துக்கு தனியா, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வாங்கியதும், ஒருமுறை வெயிலில் படும்படி வைத்து எடுக்க வேண்டும். முழுமையாக உலர்த்துவதால், அதிக விலை கொடுத்து வாங்கிய உணவுப் பொருள்கள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் தடுக்கலாம்.

* சமையலறை ஸ்விட்ச் போர்டை சுற்றி எண்ணெய்ப் பிசுபிசுப்பும் அழுக்கும் படிந்து காணப்படும். வேலை செய்துகொண்டே தொட்டிருப்போம். தினமும் அதையும் துடைத்து பளிச்சென வைத்தல் நலம்.

* அதேபோல் சமையலறையைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருக்கும் டைல்ஸில் ஒட்டியிருக்கும் தாளிக்கும் பொருள்கள், எண்ணெய்ப் பிசுபிசுப்பை போக்க, வெந்நீரில் டிடர்ஜென்ட் பவுடரை கரைத்து, அதில் துணியை முக்கித் துடைக்கலாம். மேலும், டைல்ஸை எந்த அளவுக்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ... அந்த அளவுக்கு சமையலறையின் வெளிச்சம் பளிச்சென இருக்கும்.

* சமையலறையில் உபயோகிக்கும் துணிகளைத் தினமும் மாற்ற வேண்டும். சுத்தமாகத் துவைத்து உலரவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

பாத்திரங்களை அடுக்கும் முறை

* சமையலறையில் அதிகமான பாத்திரங்கள் இருக்கக் கூடாது. தேவையான பாத்திரங்களும், அவற்றுக்குப் பொருத்தமான மூடிகளும் இருந்தால் சிறிய கிச்சனாக இருந்தாலும், பார்க்க விஸ்தாரமாகத் தெரியும்.

* தேய்த்து வைத்த பாத்திரங்களை ஈரம் போக காய்ந்த பிறகே, எடுத்து அலமாரியில் அடுக்க வேண்டும்.

* பாத்திரங்கள், கண்ணாடி - பீங்கான் பாத்திரங்கள், டீ கப்ஸ், ஸ்நாக்ஸ் போட்டு வைக்கும் டப்பாக்களுக்கு எனத் தனியே இடம் ஒதுக்கிவைத்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

* உப்பு கொட்டி வைக்கும் டப்பாக்கள் மற்றும் ஜாடிகளைக் கீழ் தட்டில் வைக்கலாம். பொடி வகைகளை ஒரு தட்டிலும், மளிகை சாமான்களை நடு மற்றும் மேல்தட்டுகளிலும் வைக்கலாம்.

* நறுக்கத் தேவையான கட்டர், பலகை, கத்தி, கத்தரிக்கோல், சீவும் கருவி, துருவும் கருவி இவற்றை சமையலறையின் ஓரத்தில் வைக்க வேண்டும். சில நேரம் இவற்றை எடுக்கும்போது, தவறுதலாக கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டியது முக்கியம்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

சாமான்களை அடுக்கும் முறை

* ஸ்பூன், கரண்டி, பிளாஸ்டிக் ஸ்பூன்ஸ் போன்றவற்றைத் தனியாகவும், தட்டுகள், கிண்ணங்களைத் தனியாகவும் அளவுக்கு ஏற்ப அடுக்கலாம். அந்த ஸ்டாண்டு நம் கைக்கு எட்டும் இடத்தில் இருப்பது நல்லது. மாடுலர் கிச்சன் எனில், தேய்த்து, துடைத்த பிறகே அடுக்குவது சிறப்பு.

* சாதத்துக்கு, பால் காய்ச்சுவதற்கு, சாம்பார் - ரசம், பொரியல் என நான்கு கரண்டிகள் மற்றும் தோசை திருப்பி ஒன்று போதும். கண்ணை மூடிக்கொண்டு உபயோகிக்காத, தேவையில்லாத பாத்திரங்களை கொலு பொம்மைகளை பேக் பண்ணி மேலே போட்டு வைப்பதுபோல் இல்லாமல், தேவையானவர்களுக்குக் கொடுத்துவிடுவது நல்லது. அதிக பாத்திரங்களைத் தேய்க்கும் வேலை மிச்சமாகும்.

* பழைமை மாறாத வீடுகளில் சாமான்களைப் போட்டு வைத்துக் கொள்ள எவர்சில்வர் டப்பா (சம்படம்)கள் வைத்திருப்பர். சிறிய குடும்பம், அவ்வப்போது சாமான்களை வாங்குபவர்கள் எனில், பெரிய டப்பாக்களைத் தவிர்த்து, ஒரு மாதத்துக்குத் தேவையான அளவுள்ள டப்பாக்கள் இருந்தால் போதும். குறைந்த அளவு பாத்திரங்களுடன்கூடிய நல்ல விஸ்தாரமான சமையலறை நாம் நேசிக்கும் இடமாகிவிடும்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

ஃப்ரிட்ஜ்

* எலெக்ட்ரிக் பொருள்களை வாங்குவதற்கு முன் பிளான் பண்ணுங்கள். உதாரணத்துக்கு, ஃப்ரிட்ஜ் வாங்கப்போகிறீர்கள் என்றால், ‘வீட்டில் இரண்டு பேர்தானே இருக்கிறோம், எதற்கு பெரிய ஃப்ரிட்ஜ்' என்று செலவைப் பற்றி நினைக்க வேண்டாம். வாங்கும்போதே பெரிய ஃப்ரிட்ஜாக வாங்கிவிட்டால் மறுபடி சில வருடங்களில் அதை மாற்றி, பணத்தை விரயம் ஆக்காமல் சிக்கனமாக இருக்க முடியும். ஏனெனில், இதுமாதிரியான கேட்ஜெட்களை அடிக்கடி நாம் வாங்கப்போவதில்லை.

* பொதுவாக, ஃப்ரிட்ஜைப் பராமரிப்பது பெரும் வேலைதான். 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரே பொருள் ஃப்ரிட்ஜ். மாதக்கணக்கில், ஏன் வருடக்கணக்கில்கூட, சிலர் வீட்டு ஃப்ரிட்ஜில் பொருள்கள் உறைந்து கிடக்கும். வாரம் ஒரு முறை ஃப்ரிட்ஜை சுத்தப்படுத்த வேண்டும்.

* ஃப்ரிட்ஜில் உள்ள அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு, ஸ்விட்சை அணைத்துவிட்டு மாதத்தில் ஒரு நாள் ஓய்வு கொடுப்பது நல்லது.

* ஃப்ரிட்ஜில் காய்களை வைக்கும்போது கழுவி, நிழலில் காய வைத்து, பிறகு துடைத்து காற்று புகா பைகளில் போட்டு வைக்கலாம். ஓரிரு நாள்கள் அல்லது வாரத்துக்குத் தேவையான அளவு மட்டும் காய்கறி, பழங்களை வாங்கினால் போதுமானது.

* ஃப்ரிட்ஜில் பொருள்களை அடுக்குவதிலும் ஆரோக்கியம் பின்பற்றப்பட வேண்டும். வாங்கிய காய்களை தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். டப்பர்வேர் போன்ற நல்ல, மறு சுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் டப்பாக்களில் பேப்பர் அல்லது வாழையிலை போட்டு அவற்றுக்குள் வைத்து மூடினால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

* கேரட் வாங்கியதும் கழுவி, சற்று பெரிய துண்டாக நறுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் சமையலுக்கு அப்படியே பயன்படுத்தலாம்.

* கொத்தமல்லி, கறிவேப்பிலையை நன்றாக அலசி, ஆய்ந்து தனி டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், ஒரு வாரம் ஆனாலும், பசுமையாக இருக்கும்.

* ஃப்ரிட்ஜில் ஒரு தட்டில் ஊறுகாய் வகைகள், நீண்ட நாள் உபயோகத்துக்கான பொடிகள், துவையல் போன்றவற்றை வைக்கலாம். அதற்கு மேல் சமைத்த, மீண்டும் உபயோகிக்கும் உணவு வகைகளை வைக்கலாம். கூடியவரை ஃப்ரிட்ஜினுள் வைக்கும் அனைத்தும் மூடப்பட்டிருப்பது நல்லது.

* அவரவர் வைத்திருக்கும் ஃப்ரிட்ஜின் அளவுக்கு ஏற்ப பொருள் களை வைக்க முடிவு செய்தல் அவசியம். வைத்த பொருள்களை மாதக்கணக்கில் பார்க்காமல் விடுவதைத் தவிர்க்கவும்.

* மேல் அடுக்கில் இட்லி மாவு, தோசை மாவு, அடை மாவு வைக்கலாம். பார்வையில் படும் இடத்தில் முதலில் உபயோகிக்க வேண்டிய உணவை வைப்பது மிகவும் அவசியம். மறுநாள் சமைக்கும் முன் முதல் நாள் வைத்த பொருள்களை சரிபார்ப்பது, தேவையானவற்றை வெளியே எடுத்து வைப்பது என பழக்கப் படுத்திக்கொள்வது பண்டம் வீணாவதைத் தடுக்கும்

* மூடி போட்ட டம்ளர், டப்பாக்களில் தயிர் ஊற்றி வைப்பது இடத்தை அடைக்காமல் இருக்கும்.

* பால் வைக்கும் இடத்தில் வெண்ணெய், சாக்லேட் வைக்கலாம்.

* கதவில் பாட்டில்களில் தண்ணீர், பானங்கள், டம்ளரில் தயாரித்த தயிர் போன்றவை வைக்கலாம்.

* உருளைக்கிழங்கு, வெங்காயம் முதலியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. காற்றோட்ட வசதியுள்ள தட்டில் போட்டு வைக்கலாம். இடம் இருப்பதாலேயே பொருள்களை அடைக்காமல் இருப்பது நல்லது.

* பால், தயிர், இட்லி மாவு மற்றும் உணவுப் பொருள்கள் எதுவாக இருந்தாலும், ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்தவுடன் நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்துவது கூடாது. பத்து, பதினைந்து நிமிடங்கள் வெளியில் வைத்துவிட்டுதான் சமைக்க வேண்டும்.

* வாரம் ஒருமுறை வெளிப்புறமும் துடைத்துவிட்டால் பராமரிப்பு எளிதாகும்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

மிக்ஸி

* தினமும் மிக்ஸியைத் துடைத்து வைப்பதன் மூலம் நீண்ட காலத்துக்குப் பழுதாகாமல் இருக்கும். மேலும், மிக்ஸியில்தான் அதிகமாக கரப்பான்பூச்சி வாசம் செய்யும். மிக்ஸியில் அரைத்தவுடன், கடைசியில் வெறும் தண்ணீரை ஊற்றி ஒரு சுற்று சுற்றி பிறகு கழுவினால், இடுக்குகளில் உணவுத் துணுக்குகள் சேராமல் இருக்கும்.

* மிக்ஸி சுத்தம் செய்ய பெயின்ட் பண்ணும் பிரஷ்ஷைப் பயன் படுத்தலாம். மிக்ஸியின் கீழ் மோட்டர் இருக்கும் பகுதியை மேலோட்டமாகத் துடைக்காமல், தினமுமே மிக்ஸியின் கீழே இருக்கும் இடைவெளியில் பிரஷ்ஷைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* பொருள்களை வதக்கிவிட்டு, சிலர் அவசரத்தில் சூடாக அப்படியே மிக்ஸியில் போட்டு அரைத்துவிடுவார்கள். மிக்ஸி மூடி தெறித்து, அதில் உள்ள சூடான பதார்த்தம் முகத்தில் பட்டுப் புண்ணாக வாய்ப்புண்டு. கவனம்.

* மிக்ஸியில் அரைக்கும்போது ஜாரில் முழுவதும் போட்டு அரைக்கக் கூடாது. இதனால், மோட்டார் சீக்கிரத்திலேயே கெட்டுவிடும். ஜாரின் கொள்ளளவில் முக்கால் பங்கு இருப்பது போல் சேர்த்து அரைக்கலாம்.

* லோவோல்டேஜ் பிரச்னை இருந்தால், அந்தத் தருணத்தில் மிக்ஸியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* துவையல், சட்னி அரைப்பதாக இருந்தாலும், எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிய பிறகு அரைக்க வேண்டும். சிலர் தக்காளி, தேங்காய் போன்றவற்றைப் பெரிதாகப் போட்டு அரைப்பார்கள். இதனால் சீக்கிரத்திலேயே மிக்ஸி பழுதாக வாய்ப்பு இருக்கிறது.

* மிக்ஸியில் போட்ட பொருள் சரியாக அரையவில்லை என்றால், பிளேடின் ஷார்ப்னெஸ் போயிருக்கலாம். கல் உப்பை போட்டு ஒரு சுற்று சுற்றிவிட்டு அரைத்தால் நன்றாக அரையும்.

* மிக்ஸியில் பொருள்களைப் போட்டு, மூடாமல் அரைப்பது கூடாது. அரைக்கும்போது ஒரு கையால் மூடியை அழுத்தியபடி அரைப்பது நல்லது. மேலும், மிக்ஸி ஓடிக்கொண்டிருக்கும்போதே, நடுவில் திறந்து பார்ப்பது கூடாது. கண்களில் தெறிக்க வாய்ப்பு இருக்கிறது.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

காஸ் சிலிண்டர்

* காஸ் சிலிண்டரின் மேலே D 21, C 22 இப்படி எழுத்துகள் எழுதப்பட்டிருப்பதைப் பலரும் கவனித்திருக்க மாட்டார்கள். இதுதான் சிலிண்டரின் எக்ஸ்பைரி டேட். அதில் வரும் முதல் எழுத்து மாதத்தைக் குறிப்பது,

* அதாவது A என்பது மார்ச் வரை, B என்பது ஜூன் வரை, C என்பது செப்டம்பர் வரை, D என்பது டிசம்பர் வரை என்று அர்த்தம். அந்த எழுத்தைத் தொடர்ந்து வரும் எண்கள் வருடத்தைக் குறிப்பவை.

* அதாவது, இப்போது உங்களிடம் இருக்கும் காஸ் சிலிண்டரின் மேலே D 21 என்று இருந்தால், அதன் எக்ஸ்பைரி டேட் டிசம்பர் மாதம் 2021 என்று அர்த்தம். அதுபோல C 22 என்று இருந்தால், அதன் எக்ஸ்பைரி டேட் செப்டம்பர் மாதம் 2022 என்பதாகும்.

* அதனால் காஸ் சிலிண்டரை வாங்கும்போதும் சரி, அதைப் பயன்படுத்தும் போதும் சரி, இந்த எக்ஸ்பைரி டேட்டை கவனமுடன் பார்த்து வாங்கிப் பயன்படுத்தினால், அது நம் உயிருக்குப் பாதுகாப்பு. சிலிண்டர் கொண்டு வந்து வைக்கும்போதே இதைக் கவனித்து விடுவது அவசியம்.

* ஒருவேளை கவனிக்கத் தவறிவிட்டாலும் உடனடியாக உங்கள் சிலிண்டர் ஏஜென்சிக்கு போன் செய்து சொன்னால் அவர்கள் மறுக்காமல் மாற்றித் தந்துவிடுவார்கள்.

* சமைத்தவுடன் காஸ் ஸ்டவ்வை ஆஃப் செய்வதுடன், சிலிண்டரை யும் மூடி விட வேண்டும். குழந்தைகள் தெரியாமல் திருப்பிவிட வாய்ப்பு அதிகம். பெரும் ஆபத்துகளைத் தடுக்க சமையல் செய்யாதபோது, சிலிண்டரின் வால்வை எப்போதும் அணைத்து வைத்துவிட வேண்டும்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

ஓவன்

* ஓவனில், குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொருள்களை வைத்தால், அதிக சூடாகிவிடும். மேலும், ஓவனுக்குரிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாம் சமையலுக்குப் பயன் படுத்தும் எல்லா பாத்திரங்களையும் இதற்குப் பயன்படுத்தக் கூடாது.

* ஓவனையும், அதனுள் வைக்கும் பாத்திரத்தையும், மிக சுத்தமாக வைத்திருக்க வேன்டும். எலெக்ட்ரானிக் பொருள்கள் எல்லா வற்றையும் உணவு தயாரித்த பின் பிளக்கை எடுத்துவிட்டு, ஸ்விட்ச் ஆஃப் செய்து விட வேண்டும். பிறகு, ஓவனில் உள்ளே இருக்கும் சுழல் தட்டை சோப்பு நீரால் துடைத்துக் காய வைக்க வேண்டும்.

* சமையலறையில் மிக்ஸிக்கு ஓரிடம் போல், மைக்ரோ ஓவனுக்கும் தனி இடம் ஒதுக்குதல் நல்லது.

இண்டக்‌ஷன் ஸ்டவ்

* இண்டக்‌ஷன் ஸ்டவ்வில் சமைக்கும்போது சமையலறை உஷ்ணமாகாமல் இருக்கும். சமைக்கும் சிரமமும் தெரியாது. சாதாரண அடுப்புகளைக் காட்டிலும் விரைவாகச் சமைத்து விடலாம். ஒரே நிமிடத்தில் தண்ணீரை சூடாக்கி விட முடியும். எளிதாக சுத்தம் செய்யலாம். எங்கும் எடுத்துச் செல்ல வசதியானது. நேரடியாக நெருப்பு வராததால் தீப்பிடிக்குமோ என்ற பயம் தேவையில்லை.

* அப்பளம், புல்கா போன்றவற்றை இதில் சுட முடியாது. அடுப்பங்கரையின் ஓரத்தில் வைக்கலாம். அடுப்புக்கும் இண்டக்‌ஷன் ஸ்டவ்வுக்கும் நிறைய இடைவெளி இருப்பதுபோல் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

சிம்னி

சமையலறையில் உஷ்ணம் தகிக்கும். அதனால், தென்கிழக்கு நோக்கி சமையலறை இருப்பது விசேஷம். உஷ்ணம் தாக்காமல் இருக்கும். மேலும் சமையலறையில் சூடு, புகை பரவாமல் இருக்க, எக்சாஸ்ட் ஃபேன் பொருத்துவது, சிம்னி அமைத்துக்கொள்வது சிறப்பு. சமையலறையில் நல்ல காற்றோட்டம் இருக்கும்பட்சத்தில் சிம்னி தேவையில்லை. மேடைக்கும் சிம்னிக்கும் சுமார் 3 அடி உயரமாவது இருக்க வேண்டும். எக்சாஸ்ட் ஃபேன் 6 அடி உயரத்துக்கு மேல் இருப்பது நல்லது.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

சமையலறை சுத்தமும் ஜீவகாருண்யமும்

விடியற்காலையில் மாடி வீட்டிலிருந்து சத்தம். ‘ஏங்க... பெரிய பூரான்... வந்து அடிங்க... என்று மனைவி கத்த, ‘ஒரு ஜீவனைக் கொல்ல என்னால முடியாது...' என்று கணவர் ஒதுங்க... ‘அது கடிச்சிடும்பா...’ என்று மகள் பதற... கடைசியில், மகள் துணிந்து துடைப்பக்கட்டையால் அடித்து வெளியில் கொண்டுபோய் போட்டாள். மனிதனின் உயிருக்கு உலைவைக்கும் ஜீவன்களைக் கொல்வதில் தவறில்லை. ஆனால், எறும்பு, பல்லி போன்றவற்றை கெமிக்கல் மூலம் கொல்வதைத் தவிர்த்து, அவை சமையலறைக்குள் வராமல் தடுக்கவும் வழியிருக்கிறது.

இயற்கை முறையில் பூச்சிகள் வராமல் தடுக்கும் வித்தையைக் கடைப்பிடித்தால், கெமிக்கல் பொருள்களைக் கொண்டு, இந்த உயிரினங்களைக் கொல்வது தவிர்க்கப்படும். மேலும், உணவுப் பொருள்களில் இந்த கெமிக்கல்கள்பட்டு உணவும் விஷமாகாமல் காக்க முடியும்.

* நம் முன்னோர்கள் சொன்ன ஜீவகாருண்யத்துடன், சமையலறையை சுத்தமாக வைக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும். வீட்டில் எறும்புத் தொல்லை இருந்தால் கொஞ்சம் பெருங்காயத்தூள் தூவினால் போதும், எறும்பு எட்டிக்கூட பார்க்காது.

* உணவுப் பொருள்களில் வண்டு வராமல் இருக்க வேப்பிலையுடன் வசம்பை ஒரு துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி போட்டு வைக்கலாம்.

* சமையலறையின் நான்கு மூலைகளிலும் நான்கு டம்ளர்களில் உப்பு சேர்த்த தண்ணீர் நிரப்பி வைத்தால் எறும்புகள் நெருங்காது.

* தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை இலைகளைப் போட்டு, அதன் எசென்ஸ் இறங்கும் வரை சிறிது நேரம் வைத்திருந்து, பின்பு அந்தக் கலவையை அறை முழுவதும் தெளித்துவிட்டால், ஈ, எறும்பு, பல்லி எதுவுமே அண்டாது.

* பருப்பு வகைகள் தீர்ந்து போய், டப்பா காலியாக இருக்கிறதா... உடனடியாக அதில் நிரப்பாமல், நன்கு கழுவி காய வைத்து பிறகு, சாமான்களை அதில் போட வேண்டும். இதனால், வண்டு வருவது தவிர்க்கப்படும்.

* உடனுக்குடன் ஒரு துணியை எடுத்து காஸ் அடுப்பை பளிச்சென துடைப்பது என்று மேடையை, சிங்க்கை சுத்தமாக ஈரமின்றி வைத்திருந்தாலே பூச்சிகள் அண்டாது. நம் கைகளுக்கும் நல்ல பயிற்சி.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

கரப்பானை விரட்டும் கிராம்பு!

கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே பலருக்கும் அலர்ஜிதான். மழைக் காலத்தில் வீட்டில் கரப்பான் பூச்சித் தொல்லை அதிகமாக இருக்கும். பிரிஞ்சி இலை, கிராம்பு இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து மேடை மற்றும் சிங்க்கில் தெளித்துவிட்டால் போதும். அந்த வாசத்துக்கு கரப்பான்பூச்சி வரவே வராது. பாத்திரங்களைக் கழுவியதும் சிங்க்கில் நாப்தலின் உருண்டைகளைப் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சி வராது. தண்ணீர் வெளியேறும் குழாய்களின் வழியாகப் பூச்சிகள் உள்ளே வருவதும் தடுக்கப்படும்.

ஒரு பாட்டிலில் இரண்டு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு வினிகர், லைம் ஜூஸ் கலந்து வைத்துவிடுங்கள். இரவு நேர சமையல் முடிந்தவுடன், சுத்தமாக ஈரத்தன்மை இல்லாமல் துடைத்துவிட்டு, தயாரித்துவைத்துள்ள பேக்கிங் சோடா கலவையை எடுத்து ஸ்பிரே பண்ணிவிடுங்கள். கரப்பான் பூச்சிகள் வராது.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

கறை, அழுக்கு, பிசுபிசுப்பு நீங்க...

* வாழைப்பூ, வாழைக்காய், எலுமிச்சை போன்றவற்றை வெட்டும்போது ஏற்படும் கறையைத் தவிர்க்க வெட்டும்போது அடியில் பிளாஸ்டிக் பேப்பர் விரித்துக்கொள்ளலாம்.

* சமைக்கும்போது தரைப்பகுதி ஈரம் இல்லாமல் இருக்க, அங்கு ஒரு மிதியடியைப் போட்டு வைத்துவிட வேண்டியது அவசியம். இதனால் சிதறும் நீர் மற்றும் பதார்த்தங்கள் நம் காலில் மிதி படாமல் இருக்கும்.

* கிச்சன் சுவரில் ஏற்படும் பிசுபிசுப்புத் தன்மை, கறையை அகற்ற மாதமொருமுறை சோப் பவுடரும் தண்ணீரும் கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்.

* ஆயில் கேன் வைக்கும் இடத்தில் கீழே டிஷ்யு பேப்பரை வைத்து விடுங்கள். எண்ணெய் எடுக்கும்போது சிந்தினாலும், தரையில் படிந்து கறையாகாமல் இருக்கும்.

* ஸ்டவ் அருகில் காய்கறிகளை வெட்டுவது கூடாது. எப்போது காய்கறிகளை வெட்டினாலும், கீழே ஒரு பேப்பரை விரித்து வைத்து கட் பண்ணுங்கள். கறை படியாது.

* சமைக்கும் இடத்தின் கீழே இரண்டு மேட்களை போட்டு வையுங்கள். தண்ணீர் தெளித்து, ஈரத்தன்மையில்லாமல் இருக்கும். கால் வைக்கும்போது அழுக்கு படிவது தவிர்க்கப்படும்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

சமையலறை ஸ்டோர் ரூம் அல்ல...

* அதிகமான மளிகைச் சாமான்களை வாங்கிக் குவித்தல் நல்லது அல்ல. உபயோகிக்கும் காலம் முடிந்துவிடும். உபயோகப்படுத்தாமல் மாதக்கணக்கில் வைத்திருந்தால் கெட்டுவிடவும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு மாதத்துக்குத் தேவையான சாமான்களை மட்டும் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

* தேவையான அளவு மளிகைச்சாமான்கள் வாங்கியதும் பையுடன் வைக்காமல், சாமான்கள் வெளியில் தெரியும்படி டிரான்ஸ்பரன்ட் பாட்டில்களில் நிரப்ப வேண்டும். அதற்கு உரிய ஸ்பூன்களையும் அதில் வைத்துவிட வேண்டும். சமைக்கும்போது, எடுக்க ஸ்பூனைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

* துருப்பிடித்த கத்திகளை சமையலறையில் வைத்திருக்கத் தேவை யில்லை. நிறைய கத்திகளும் வேண்டாம். கடினமான காய்களை நறுக்க ஒரு நல்ல கத்தி, பச்சை மிளகாய், பூண்டு இவற்றை நறுக்க சிறிய கத்தி மற்றும் தோல் சீவ பீலர் இருந்தால் போதும்.

* சமையலறை சாமான்கள் வைக்கும் பாட்டில்கள் ஒரே மாதிரி கலரில், ஒரே அளவில் இருந்தால் பார்க்க அழகாக இருக்கும். தினமும் பயன்படுத்தும் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு போன்றவற்றை வரிசையாக அடுக்கி வைக்கும்போது அழகாக இருக்கும்.

* தினமும் தேவைப்படும் கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு என அஞ்சறைப் பெட்டியில் வைத்துக்கொள்வது தாளிக்கும்போது அவசரத் தேவைக்கு கைகொடுக்கும். அஞ்சறைப் பெட்டி சாமான் களை ஓரளவு மீடியம் சைஸ் பாட்டில்களில் போட்டு வைத்து விடுங்கள். அஞ்சறைப் பெட்டியில் காலியானதும், அதிலிருந்து இதில் நிரப்ப வசதியாக இருக்கும். இதற்கான பாட்டில்களும் ஒரே அளவில், ஒரே கலர் மூடியுடன் இருப்பது அழகாக இருக்கும்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

ஆன்லைனில் என்ன வாங்கலாம்?

ஆன்லைனில் பொருள்களை வாங்கிக் குவிப்பதைப் பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். நமக்கு மிகவும் தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம். கட்டரில் தொடங்கி டப்பாக்கள், ஸ்டாண்ட் என எல்லாம் கிடைக்கின்றன. மட்கும் பிளாஸ்டிக்கைத் தேர்ந்தெடுத்து வாங்குவது அவசியம்.

யார் வீட்டுக்காவது சாப்பிடப் போகிறோம் என்றால், குறைந்த விலையில் கிடைக்கும் அத்தியாவசிய பொருள்களை வாங்கிப் பரிசாகத் தந்தால், சாப்பிட்ட நம் வயிறும் நிரம்பும். சாப்பாடு போட்டவர்களின் மனதும் குளிரும்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

உடையாத ஜார்கள்

எளிதில் உடையாத கண்ணாடி ஜாடி. தங்க முலாம் பூசப்பட்ட காற்றுப் புகாத அலுமினிய மூடி. 9 செ.மீ நீளம் கொண்டது. ஆறு ஜாடி விலை ரூ.299/- குழந்தைகளுக்கான சாக்லேட், பிஸ்கட், ஸ்நாக்ஸ் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

கார்பேஜ் கவர்

குப்பைகளைப் போடும் மட்கும் கவர். கறுப்பு, பச்சை நிறங்களில் கிடைக்கிறது. இதை ட்ஸ்ட்பின்னில் பொருத்தி, தினமும் ஒன்று பயன்படுத்தலாம். 180 பைகள் விலை ரூ.200/-

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

வெஜிடபிள் ஸ்டோரேஜ் ஜிப் பேக்

பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் நேரடியாக வைக்காமல், நன்றாகக் கழுவி, நெட் பேகில் போட்டு வைத்துவிடலாம். வாரக் கணக்கில் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். 12 பைகளின் விலை ரூ.320/- (எல்லா அளவுகளிலும் கிடைக்கிறது)

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...
Bet_Noire

பாதுகாப்பு -  எலெக்ட்ரிக் பொருள்கள்

ஓவன், மிக்ஸி, ஃப்ரிட்ஜ் எனச் சின்ன கிச்சனிலேயே எல்லாவற்றையும் அடைத்து வைத்திருப்பர் சிலர். பொதுவாக, சமையலுடன் சம்பந்தப்பட்ட கேட்ஜெட்ஸை கிச்சனில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

டிப்ஸ்...

* சிங்குக்கு கீழே சிறிய டவல், சமைக்கும் இடத் தில் ஒரு சிறிய டவல் வைத்துவிட்டால், அடிக்கடி கைகளைத் துடைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

* பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஃப்ரீஸரில் வைக்க வேண்டும். பொருள்கள் வைக்கும்போது கூடியவரை அவ்வப்போது துடைப்பது ஃப்ரிட்ஜுக்கு நிரந்தர சுத்தம் தரும்.

* ஒரே டவலையே துடைப்பதற்கும், சமைத்ததை இறக்குவதற்கும், பயன் படுத்தக்கூடாது. எனவே, மூன்று நல்ல சிறிய டவல்கள் சமையலறையில் மாட்டியிருத்தல் வேண்டும். ஒன்று, தேய்த்த பாத்திரங்களைத் துடைத்து வைக்க, இரண்டாவது மளிகை சாமான்களைப் போட்டு வைத்திருக்கும் பாட்டில்களை உடனுக்குடன் மூடி அதன் மேல் துடைப்பதற்கு, மூன்றாவது ஃப்ரிட்ஜ், மைக்ரோ ஓவன், மிக்ஸி இவற்றைத் துடைப்பதற்கு...

* சமையல் சாமான்கள் தீர்ந்தவுடனே அதை செல்போனில் நோட்ஸில் குறித்து வைத்துவிடுங்கள். `ஷாப்பிங் லிஸ்ட்' என நம் வீட்டில் உள்ளவர்களோடு ஒரு குரூப் தொடங்கி அதில் அனுப்பினால், கடைக்குப் போகிறவர்கள் தேவை யானதை வாங்கி வைத்துவிடுவர்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

* தூசு, அழுக்கு படிந்துவிடக்கூடிய ஒரே அறை சமையலறை தான். தூசு தெரியக் கூடாது என்பதற்காகச் சிலர் அடர் நிறத்தில் பெயின்ட் அடிப்பதுண்டு. வெளிர் நிறம்தான் சமையலறைக்குப் பொருந்தும். கண்ணுக்குத் தெரியும் தூசையும் உடனடியாக அகற்ற முடியும். மேலும், அதிக வெளிச்சத்தைத் தருவதும் வெளிர் நிற பெயின்ட்தான்.

* அடுப்பின் தீயை சிம்மில் வைத்தே பாலைக் காய்ச்ச வேண்டும். பெரிதாக வைத்துக் காய்ச்சினால் தீய்ந்த ஸ்மெல் வருவதுடன் அடிப்பிடித்து பாத்திரங்களைத் தேய்ப்பது கடினமாகிவிடும்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

* நாள்பட்ட புளித்த தயிரை வெளியில் வைத்தால் கெட்டு விடும். எனவே, தேவைப்படும்போது மட்டும் எடுத்து உபயோகித்து விட்டு மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.

* சமையலறையில் நின்றுகொண்டே காய்கறிகளை நறுக்கி சமைக்கும்போது கால்வலியுடன் தேவையில்லாமல் சலிப்பும் ஏற்படும். நிறைய காய்கறிகளை நறுக்குவதாக இருந்தால், தரையில் அமர்ந்தோ, டேபிள் - சேரில் அமர்ந்தோ நறுக்குவது நல்லது. சிலர் முந்தைய நாள் இரவே மறுநாளுக்கான காய்கறிகளை நறுக்கி வைப்பார்கள். எப்போதாவது அவசரத்துக்கு இதைச் செய்யலாம். எப்போதுமே செய்வது நல்லதல்ல. காய்கறிகளை நறுக்கி ஃப்ரிட்ஜில் வைப்பதால் அதன் தன்மை மற்றும் சத்துகளில் மாறுபாடு ஏற்படும்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

* பிரியாணி இலை, கிராம்பை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளலாம். இதைத் தண்ணீரில் கலந்து கரப்பான் பூச்சி, அதன் முட்டை இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்தால் போதும். மசாலா வாசனைக்கு கரப்பு காணாமல் போய்விடும்.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

* பச்சை மிளகாய் காம்பை கிள்ளி, வைத்துவிட்டால் சீக்கிரத்தில் பழுக்காது.

கிச்சன் பராமரிப்பு ஏ டு இஸட்! - சுவை, சுத்தம், சுகாதாரம்...

* எலுமிச்சைப்பழம் வாங்கியதும் அதன் மேல் லேசாக தேங்காய் எண்ணெயைத் தடவி வைத்துவிட்டால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism