என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

சமையல் சந்தேகங்கள் : 4 - திரியாத மோர்க்குழம்பு... திடீர் சிற்றுண்டி... டிராவல் உணவுகள்...

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சமையல் சந்தேகங்கள்

#Utility

சுகுன ரோஷிணி

சமையல் சந்தேகங்களுக்குப் பதில் சொல்கிறார் சமையற் கலை நிபுணர் கிருத்திகா ராதா கிருஷ்ணன்

மோர்க்குழம்பு வைக்கும்போது திரிந்தது போல் ஆகிவிடுவது ஏன்? மோர்க்குழம்பை எவ்வளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும்?

- எஸ்.மீனாட்சி, திருச்சி-9

அந்த நாள்களில் மீந்துபோன தயிரில் மோர்க்குழம்பு செய்தார்கள். ஆனால், இப்போது நம்முடைய உணவு வகைகளிலேயே ஒன்றாக மோர்க்குழம்பு ஆகிவிட்டதால் புதிதாகத் தயிரை வாங்கி மோர்க்குழம்பு செய்கிறோம். மோர்க்குழம்பு புளித்துப் போய் இருந்தால் பலருக்குப் பிடிப்பதில்லை. அவ்வப்போது தயிர் வாங்கி மோர்க்குழம்பு தயாரித்தால், அதன் சுவை மிகுதியாக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள்  : 4 - திரியாத மோர்க்குழம்பு... திடீர் சிற்றுண்டி... டிராவல் உணவுகள்...

மோர்க்குழம்பு தயாரிக்கும்போது கெட்டியான தயிரைத்தான் பயன்படுத்த வேண்டும். தயிருடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மெல்லிதான காட்டன் துணியில் வடிகட்டி, மிக்ஸியில் லேசாக அடித்துவிட்டுச் செய்தால் திரியாமலிருக்கும்.

சமையல் சந்தேகங்கள்  : 4 - திரியாத மோர்க்குழம்பு... திடீர் சிற்றுண்டி... டிராவல் உணவுகள்...

கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், தனியா அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன் அனைத்தையும் தண்ணீரில் அரைமணிநேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை வடித்து, இத்துடன், சிறிய துண்டு இஞ்சி மற்றும் தேங்காய்க்கீற்றுகள் இரண்டு, பச்சைமிளகாய் இரண்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளைப்பூசணி, கத்திரிக்காய், வெண்டைக்காய் ஆகிய காய்களில் ஏதேனும் ஒன்றில் 150 கிராம் அளவு எடுத்து நறுக்கி, சிறிதளவு தண்ணீர், அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

வேகவைத்த காய் மற்றும் அரைத்த கலவை, அடித்துவைத்திருக்கும் தயிர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். முதல் கொதிவந்ததும் இறக்கி, அதில் கடுகு உளுத்தம்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, கறிவேப்பிலை, மல்லித்தழை தூவினால் சுவையான மோர்க்குழம்பு ரெடி. கடலைப்பருப்பு வடை மாவு மீதம் இருந்தால், வடைகளாகப் பொரித்து, காய்கறிகளுக்குப் பதிலாக மோர்க்குழம்பில் சேர்த்தால் சுவை கூடும். மோர்க்குழம்பை லேசாகச் சூடு செய்யலாமே தவிர, திரும்பத் திரும்ப கொதிக்க வைத்துப் பயன்படுத்தக் கூடாது.

கெட்டியான, புளிப்பில்லாத, வாசனையான தயிர் தயாரிப்பது எப்படி?

- புஷ்பா மீனாட்சிசுந்தரம், பெங்களூரு-3

சமையல் சந்தேகங்கள்  : 4 - திரியாத மோர்க்குழம்பு... திடீர் சிற்றுண்டி... டிராவல் உணவுகள்...

க்ரீம் அதிகமுள்ள பாலை வாங்கி சிறிதளவு தண்ணீர் மட்டுமே கலந்து காய்ச்சவும். புதிதாக சிறிய தயிர் பாக்கெட் ஒன்றை வாங்கிக்கொள்ளவும். காய்ச்சி வைத்த பால் வெதுவெதுப்பாக ஆறியதும் இரண்டு கரண்டி பாலை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தயிர் விட்டு ஸ்பூனால் நன்கு கலக்கிக் கொள்ளவும். பிறகு, கலக்கியதை மொத்த பாலிலும் சேர்த்து, இரண்டுமுறை ஆற்றி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்தால், கெட்டியான புளிப்பில்லாத, வாசனையான தயிர் கிடைக்கும்.

பயணம் செய்யும்போது வயிற்றுக்குத் தொந்தரவு செய்யாத உணவுகள் எவை?

- ஆர்.கீர்த்தனா ராஜேஷ், சென்னை-19

சமையல் சந்தேகங்கள்  : 4 - திரியாத மோர்க்குழம்பு... திடீர் சிற்றுண்டி... டிராவல் உணவுகள்...

பொதுவாக, பயணம் செல்லும்போது வயிறு நிறைய சாப்பிடக் கூடாது. ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, போன்ற பழங்கள் சாப்பிடலாம். கேரட், வெள்ளரி ஆகியவற்றைத் தோல்சீவி சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளலாம். பயணத்தின்போது எப்போதும் எலுமிச்சைப்பழங்களை வைத்துக்கொண்டால் அதன் வாசனை வாந்தி, மயக்கம் வராமல் தடுக்கும். வெளியிடங்களில் ஜூஸ் சாப்பிடுவது நல்லதல்ல. அவர்கள் பயன்படுத்தும் பழங்கள், தண்ணீர் ஆகியவை சுத்தமாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. வெளியூர் பயணத்தின்போது சூடாக உள்ள உணவைச் சாப்பிடுங்கள். ஹோட்டல்களில் தங்கும்போது அங்கு சாலட் போன்ற உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால், அவை பல மணி நேரம் முன்பாக நறுக்கி வைக்கப்பட்டவையாக இருக்கும். அவை வயிற்றுக்குப் பிரச்னையைக் கொடுக்கும் வாய்ப்புகள் அதிகம். தயிர் சாதம், இட்லி, பிரெட் ஜாம், டிரை ஃப்ரூட்ஸ் ஆகியவற்றைக் கொண்டு செல்லலாம். இவையெல்லாம் நம் வயிற்றுக்குத் தொந்தரவு செய்யாது.

இரவு உணவுக்கு அவசர துவையல் அரைப்பது எப்படி?

- என்.பாக்கியலட்சுமி, கரூர்

வீட்டிலுள்ள கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி போன்றவற்றைக் காம்புகள் நீக்கிக் கழுவி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் லேசாக எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்து அதனுடன் கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஏதேனும் ஒன்றைச் சேர்த்து வதக்கி, சிறிதளவு புளி, சிறிய துண்டு தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான துவையல் ரெடி.

சமையல் சந்தேகங்கள்  : 4 - திரியாத மோர்க்குழம்பு... திடீர் சிற்றுண்டி... டிராவல் உணவுகள்...

வீட்டில் இருக்கும் கேரட், குடமிளகாய், கத்திரிக்காய், கோவைக்காய் போன்ற காய்கறிகளை வைத்தும் துவையல் செய்யலாம். அனைத்துக் காய்கறிகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் இரண்டு, வெங்காயம், தக்காளி தலா ஒன்று (பொடியாக நறுக்கியது) சேர்த்து, காய்கறிகளையும் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு உப்பு, சிறிது புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுவையான வெஜிடபிள் சட்னி ரெடி. குறைவாகத் தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து, இதையே துவையலாகவும் பயன்படுத்தலாம்.

வீட்டுக்கு வரும் திடீர் விருந்தினர்களுக்கு சட்டென செய்யும் டிபன் செய்முறை சொல்லுங்கள்...

- ஆண்டாள் நரசிம்மன், நாமக்கல்

எல்லோர் வீட்டிலும் பிரெட் இருக்கும். அத்துடன் சீஸ் சேர்த்து இரண்டு பக்கமும் வெண்ணெய் தடவிக் கொள்ளவும். தோசைக்கல்லில் வாட்டி, பிரெட் டோஸ்ட் தயாரிக்கலாம். இதில் நறுக்கி வைத்த தக்காளி, வெங்காயம், முட்டைக்கோஸ், மிளகாய் ஆகியவற்றை வதக்கி சேர்த்து சாண்ட்விட்ச் தயாரிக்கலாம்.

சமையல் சந்தேகங்கள்  : 4 - திரியாத மோர்க்குழம்பு... திடீர் சிற்றுண்டி... டிராவல் உணவுகள்...

பிரெட்டை சின்ன துண்டுளாக கட் செய்து கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, நன்கு புரட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு இவற்றைப் பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய்விட்டு நன்கு வதக்கி இதனுடன் பிரெட்டை சேர்த்துக் கிளறி எடுத்தால், பிரெட் உப்புமா ரெடி. தண்ணீர் விடக் கூடாது. தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

தோசை மாவு இருந்தால் ஒரு பெரிய தோசைக்கல்லில் ஐந்து அல்லது ஆறு சிறிய தோசைகளாக ஊற்றிக் கொள்ளவும். அவற்றின்மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியைத் தூவவும். பிறகு தோசையின் மேல் நெய் அல்லது வெண்ணெய், இட்லிப்பொடி அல்லது மசாலாப்பொடி தூவவும். சிறிது நெய் விட்டு, தோசையைத் திருப்பிவிட்டு லேசாக வெந்தவுடன் எடுத்துக் கொடுக்கலாம். தோசையிலேயே இட்லிப்பொடி, மசாலாப்பொடி இருப்பதால் தனியாக சட்னி தேவைப்படாது.

தோசை மாவுடன் சிறிது கடலைமாவு சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, சிறிது சோம்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் ஒரு ஸ்பூனில் மாவை எடுத்து சிறிது சிறிதாகக் காய்ந்த எண்ணெய்யில் விட்டுப் பொரித்து எடுத்தால் சுவையான இன்ஸ்டன்ட் பக்கோடா ரெடி.