Published:Updated:

`வலிமை' கொடுக்கும் மூலிகை `நண்பன்' - முருங்கை மகத்துவம் அறிவோம்! - மூலிகை ரகசியம் - 5

முருங்கை

முருங்கை இலை, ஈர்க்கு, பூ, காய், பிஞ்சு, பிசின், பட்டை, வேர் என அனைத்துப் பாகங்களும் மருந்தாகப் பயன்படுகின்றன. தாராளமாகக் கிடைப்பதால் முருங்கைக்கீரையின் மகத்துவத்தை நாம் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை.

`வலிமை' கொடுக்கும் மூலிகை `நண்பன்' - முருங்கை மகத்துவம் அறிவோம்! - மூலிகை ரகசியம் - 5

முருங்கை இலை, ஈர்க்கு, பூ, காய், பிஞ்சு, பிசின், பட்டை, வேர் என அனைத்துப் பாகங்களும் மருந்தாகப் பயன்படுகின்றன. தாராளமாகக் கிடைப்பதால் முருங்கைக்கீரையின் மகத்துவத்தை நாம் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை.

Published:Updated:
முருங்கை

முருங்கை மரம் என்றதுமே, மரம் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, அதன் மரக்கிளைகளில் ஊர்ந்துகொண்டிருக்கும் கம்பளிப் பூச்சிகள் நிச்சயமாக உங்கள் நினைவில் வந்து செல்லும். முருங்கை மரத்திலுள்ள மருத்துவக் குணங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டுதான் என்னவோ, கம்பளிப் பூச்சிகள் அங்கேயே குடித்தனம் நடத்துகின்றன போலும்! சரி அதைக் கம்பளிப் பூச்சிகளிடமே ரகசியமாகப் பிறகு கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

கிராமத்து முருங்கை:

கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒரு முருங்கை மரமாவது நின்றுகொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். காரணம் என்ன தெரியுமா? முருங்கை மரத்தின் ஒவ்வோர் உறுப்பிலும் நிறைய மருத்துவக் குணங்கள் இருப்பது கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் நகரத்து வாசிகளுக்கு முருங்கையின் பலன்கள் தெரிந்திருந்தாலும் முருங்கை மரங்களை வளர்ப்பதற்கு இடவசதி இல்லாமல் போய்விடுகிறது. உங்கள் வீட்டருகே இடவசதி இருந்தால் இன்றே முருங்கைத் தண்டைப் புதைத்து உயிர்கொடுங்கள். கிராமங்களில்கூட இப்போதெல்லாம் நாட்டு முருங்கைக்குப் பதிலாக ஆபீஸ் முருங்கை என்ற பெயர் கொண்ட ரகத்தையே அதிகமாகப் பார்க்க முடிகிறது. ஓங்கி உயர்ந்த முருங்கை மரங்களின் எண்ணிக்கை குறைந்து, முருங்கை செடிகள் என்று அழைக்கும் அளவுக்கு ஹைபிரிட் ரகங்கள் இப்போது வலம் வருகின்றன!

செடி முருங்கை
செடி முருங்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முருங்கை இலை, ஈர்க்கு, பூ, காய், பிஞ்சு, பிசின், பட்டை, வேர் என அனைத்துப் பாகங்களும் மருந்தாகப் பயன்படுகின்றன. தாராளமாகக் கிடைப்பதால் முருங்கைக்கீரையின் மகத்துவத்தை நாம் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. `முருங்கைக்கீரை பொறியலா! அய்யோ கசக்கும்’ என்று நீங்கள் ஒதுக்கிவிட்டதால்தான், இளம் வயதிலேயே கண் பார்வை கோளாறுகள் அதிகரித்திருக்கின்றன.

அதுவும் இப்போதைய `கேட்ஜட்’ உலகத்தில் கண்பார்வையின் மீது கூடுதல் அக்கறை வைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். முருங்கை போன்ற கீரை வகைகளையும், கண் பார்வைக்கு ஊட்டமளிக்கும் காய் மற்றும் பழ ரகங்களையும் நீங்கள் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இளம் வயதிலேயே கண்ணாடி அணிந்துகொண்டிருக்கும் எத்தனை மாணவர்களை இப்போது பார்க்கிறோம். முருங்கை இலைகளுக்கு கண் நோய்களைப் போக்கும் தன்மை உண்டு என்பதை இன்று முதல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்படுபவர்கள், முருங்கைக்கீரையை அதிகமாகச் சேர்த்து வந்தால், உடல் ஊட்டம் பெறும். இரும்புச்சத்து அதிகம் கொண்ட இதன் இலைகள், பல்வேறு நாடுகளின் பாரம்பர்ய மருத்துவத்தில் ரத்தக் குறைவு நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. தவறாமல் நாமும் இனி பயன்படுத்துவோமே!

அடிமையாக்கும் முருங்கை சூப்:

நீங்கள் சூப் பிரியர் எனில், கடைகளில் கிடைக்கும் அடைக்கப்பட்ட சூப் பவுடர்களை வைத்து தயாரிக்கப்படும் சூப் ரகங்களைத் தவிர்த்துவிட்டு, முருங்கை இலைகளை நீரில் கொதிக்க வைத்து, சீரகம், உப்பு மற்றும் சில காய் ரகங்களை சேர்த்து வெண்ணெய் விட்டு சூப் செய்து குடித்துப் பாருங்கள். அதன் சுவைக்கு வாழ்நாள் அடிமையாக மாறிவிடுவீர்கள்.

பாக்கெட்களில் அடைக்கப்பட்ட சூப் ரகங்களைப் பருகும்போது செரியாமை, வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை நீங்களே உணர்ந்திருப்பீர்களே! ஆனால், இயற்கையான மூலிகை சூப் ரகங்களை அருந்துவதால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. முருங்கைக்கீரை சூப்பை அருந்துவதால் ரத்த உற்பத்தி அதிகரித்து, உடலுக்கு புதுத்தெம்பு உண்டாகும். மாலையில் சோர்வுடன் வீடு திரும்பும் நீங்கள், முருங்கை சூப்பைக் குடித்துப் பாருங்கள். புத்துணர்ச்சி உங்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் அடம்பிடிக்கும்.

முருங்கை
முருங்கை

முருங்கைப் பிசின்:

முருங்கை மரங்களிலிருந்து கருஞ்செம்மை நிறத்தில் வடியும் பசை போன்ற ஒரு பொருளை நீங்கள் கவனித்திருக்கலாம். அதை `முருங்கைப் பிசின்’ என்று அழைப்பார்கள். இதுவரை கவனித்தது இல்லையெனில் இப்போதே புறப்படுங்கள் முருங்கை மரத்தை நோக்கி! மரத்தின் கட்டையிலிருந்து வடியும் பிசின் இயற்கையின் அதிசயமே! பிசின்களை சுரக்கும் எண்ணற்ற மரங்கள் உண்டு.

காதில் உண்டாகும் புண்ணைக் குணமாக்க முருங்கைப் பிசின் அற்புதமான மருந்து. முருங்கைப் பிசினை தேங்காய் எண்ணெயில் குழைத்து புண்ணில் தடவ, தீவிரம் படிப்படியாக குறைவதை உணரலாம். அடிபட்டதால் உடலில் ஏற்படும் சிறிய வீக்கங்களுக்கு செயற்கை வீக்கமுறுக்கி மருந்துகளைப் பயன்படுத்தாமல், முருங்கை இலை அல்லது பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கத்தின் மீது பற்றுப் போடுங்கள். விரைவில் வீக்கம் கரைந்துவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முருங்கைக்காய் நமது உணவுக் கலாசாரத்தில் நெடுங்காலமாகப் பயணித்து வரும் உணவுப் பொருள். அதன் விதைகளுக்கு ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது. முருங்கைப் பூக்களைக் கொதிக்க வைத்து தேநீர் போல பல கிராமங்களில் இப்போதும் அருந்துகின்றனர். இதனால் உடலில் அதிகரித்த வெப்பம் குறையும், கண்களுக்கு குளிர்ச்சியுண்டாகும்.

முருங்கைப் பூ கொண்டு செய்யப்படும் உணவுகள், தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கும். முருங்கைக் காய்க்குள் இருக்கும் வித்து உடலுக்கு பலத்தைக் கொடுக்கக்கூடிய முதன்மையான மருந்து. முருங்கை வேரை அரைத்து உப்பு சேர்த்து பற்றுப் போட, மூட்டு வீக்கங்கள் காணாமல் போகும்.

முருங்கை
முருங்கை

முருங்கை இலைகளுக்கு பாக்டீரியாக்களைக் கொல்லும் தன்மையும், வலிநிவாரணி, வீக்கமுறுக்கி, சுரமகற்றி செய்கைகளும் இருப்பதாக பல ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன. முருங்கையில் இருக்கும் `Quercetin’ எனும் வேதிப்பொருள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறதாம். வைட்டமின்களுக்கும் தாது உப்புகளும் முருங்கையில் அதிகமாகவே கிடைக்கின்றன! குறிப்பாக வைட்டமின் – ’ஏ’ வினுடைய சேமிப்புக் கிடங்காக முருங்கையைச் சொல்லலாம். கண்களுக்கு நலம் உண்டாக்கும் பல்வேறு நலக்கூறுகள் முருங்கை இலைகளில் இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. உணவின் சத்துகள் முறையாக உறிஞ்சப்படுவதற்கும் முருங்கைக்கீரை உதவுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.

முருங்கையும் நெய்யும்:

நெய்யைக் காய்ச்சும்போது, முருங்கை இலைகளைச் சேர்த்துக் காய்ச்சும் வழக்கம் நமது பாரம்பர்யத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. உணவு வகைகள் கெடாமலிருப்பதற்கு, முருங்கை இலைகளைச் சேர்த்து சமைக்கும் வழக்கம் பெரும்பாலான கிராமங்களில் இன்றும் தொடர்கிறது.

சித்த மருத்துவர் விக்ரம்குமார்
சித்த மருத்துவர் விக்ரம்குமார்

உங்களுக்கு ஒரு வரலாற்றுச் செய்தி. உலகப் புகழ்பெற்ற கியூபாவின் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ தனக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்திக்கொள்ள முருங்கையை மருந்தாக பயன்படுத்திய வரலாற்றுச் செய்தி புகழ்பெற்றது. முருங்கைக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றியும் இணையத்தில் இப்போதே படித்து தெரிந்துகொள்ளுங்கள். மருத்துவமும் புதுமையான சிந்தனையும் உங்களுக்குள் துளிர்விடும்.

முருங்கை மரம் வளர்க்க ஆசையா? விதைகளை விதைத்தாலும் வளரும் அல்லது முருங்கைக்கொம்பை எடுத்து வந்து மண்ணில் புதைத்து, கொம்பின் நுனியில் மாட்டுச் சாணம் வைத்து தினமும் நீர் ஊற்றிப் பராமரித்தாலும் வளரும். நீங்கள் உயிர்கொடுத்த முருங்கைக்கொம்பு விரைவில் நீங்கள் ஆசைப்பட்ட முருங்கை மரமாக வளர ஆரம்பித்துவிடும். அதன் பின் விரும்பிய நேரத்தில் முருங்கை மரத்தின் பயன்களை அனுபவிக்கலாம்.

தாவரவியல் பெயர்:

Moringa oleifera

குடும்பம்:

Moringaceae

கண்டறிதல்:

ஓரளவு உயரமாக வளரும் மரம். தண்டு சொரசொரப்புடன் காணப்படும். தண்டிலிருந்து பிசின் சுரக்கும். சிறகு கூட்டிலை அமைப்பு. மலர்கள் வெண்மை நிறம். காய்கள் நீண்டிருக்கும். உள்ளிருக்கும் விதையில் சிறகு போன்ற அமைப்பு காணப்படும். முருங்கையின் தண்டு வலுவற்றதாய் இருக்கும். வேகமாக வீசும் காற்றுக்கே வளையும் தன்மை கொண்டது.

தாவர வேதிப் பொருள்கள்:

Beta – carotene, Moringine, Cysteine, Vitamin – C, Zeatin

முருங்கை… வலிமை கொடுக்கும் மூலிகை நண்பன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism