நம்முடைய வாழ்க்கை முறைக்கும் உடலில் ஏற்படும் நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, குறிப்பாக உணவுக்கு. உணவு முறையில் மாற்றங்கள் செய்தால் 13 ஆண்டுகள் ஆயுள் அதிகரிக்கும். சிறுவயதிலிருந்தே அந்த மாற்றங்களை ஆரம்பித்தால் இன்னும் கூடுதலாக வாழலாம் என்கிறது புதிய ஆய்வுத் தகவல் ஒன்று.

நார்வேயிலுள்ள பெர்கன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு PLOS Medicine என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கத்திய உணவு, குறிப்பாக சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கம் உள்ளவர்கள் மற்றும் குறைவாக சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவு எடுத்துக்கொண்டு, அதிக அளவில் காய்கறி, பழம், முழு தானியங்கள் ஆகியவற்றை சாப்பிடுபவர்கள் என இரண்டு பிரிவினரின் உணவுப் பழக்கத்தை மையமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவில், ஒரு பெண் தனது 20 வயதிலிருந்து ஆரோக்கிய உணவு உண்ண ஆரம்பித்தால், அவரது வாழ்நாளில் 10 ஆண்டுகளைக் கூட்டிக்கொள்ளலாம். ஓர் ஆண், 20 வயதில் ஆரோக்கியமான உணவை உண்ண ஆரம்பித்தால் 13 ஆண்டுகள் அவருக்கு ஆயுள் அதிகரிக்கும். 60 வயதுக்கு மேல் ஒரு பெண் ஆரோக்கிய உணவு முறையைப் பின்பற்றத் தொடங்கினால் 8 ஆண்டுகள், 60 வயதுக்கு மேல் ஓர் ஆண் ஆரோக்கிய உணவு முறையைப் பின்பற்றத் தொடங்கினால் 9 ஆண்டுகள் ஆயுள் அதிகரிக்கும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் 3.4 ஆண்டுகள் வரை ஆயுள் அதிகரிக்கும் என்கிறது ஆய்வுத் தகவல்.

தாவர உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள் சராசரியாக 80 வயது வரை வாழும் திறன் பெறுவார்கள். மேலும் ஆண் ,பெண் இருவரும் தம் வாழ்நாளில் ஆரோக்கிய உணவு மாற்றங்கள் செய்யத் தொடங்கினால், சராசரியாக 3.5 ஆண்டுகள் ஆயுள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் எந்த வயதில் ஹெல்தி டயட்டை ஆரம்பித்தாலும் ஆரோக்கியத்துடன் ஆயுளும் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.