Published:Updated:

உற்சாகம், சுறுசுறுப்பு, சந்தோஷம், நோ பால், நோ சர்க்கரை... சித்த மருத்துவம் சொல்லும் சூப்பர் காபி!

காபி
காபி ( pixabay )

சித்தர் வாழ்வியல் முறை பால் சேர்த்த காபியைத் தவிர்க்கவே வலியுறுத்துகிறது. பால் சேர்க்காத வரக்காப்பியே சிறந்தது. உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையைக் குறைப்பவர்களுக்கு காபி குடிக்கும் பழக்கமும் பெரியளவில் கைகொடுக்கும்.

காபி உலகின் மிகவும் பிரபலமான பானம். இது எத்தியோப்பியாவைத் தாயகமாகக் கொண்டது. காபி பிரேஸில் நாட்டிலிருந்து அதிகமாக ஏற்றுமதியாகிறது. இதன் கிறங்கடிக்கும் சுவைக்கும் சுண்டி இழுக்கும் நறுமணத்திற்கும் பலர் அடிமை.

காபியில் முப்பதுக்கும் மேலான ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. குறிப்பாக, க்ளோரோஜெனிக் (Chlorogenic) ஆசிட், காபியிலிருக்கும் மிக முக்கியச் சத்து. அதன் சுண்டி இழுக்கும் நறுமணத்திற்கு அதில் உள்ள க்யூனிக் (Quinic) ஆசிட்தான் காரணம். காபி தரும் ஆனந்த சுகத்திற்கு, அதில் உள்ள கேஃபைன் (Caffeine) என்ற ஆல்கலாய்டு காரணம்.

Health benefits of coffee
Health benefits of coffee
pixabay

காபி குடித்த 45 நிமிடங்களில் அதில் உள்ள கேஃபைன் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு டோபமைன் என்ற ஹார்மோன் உற்பத்தியைத் தூண்டும். காபி தரும் உற்சாகத்திற்கு இந்த ஹார்மோனின் வேலையே காரணம். காபி அருந்தும்போது, நம்மைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் அட்ரினலின் (Adrenaline) என்ற ஹார்மோனையும் அது உற்பத்தி செய்யும். காபியில் கேஃபைன் தவிர பல ஆர்கானிக் அமிலங்கள், மருத்துவக் குணம் பொருந்திய பாலி பீனால்கள் மற்றும் பல நல்ல தாவர மூலக்கூறுகள் உள்ளன.

காபியின் நன்மைகள் பல. விழித்திருக்கச் செய்து மனக்களிப்பை அதிகரிக்கும். செய்யும் செயலில் முழு ஈடுபாட்டை உண்டாக்கும். உடல் சற்று சோர்வாகும்போது நம்மை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் பானம் காபி என்றால் மிகையாகாது. பல வகை புற்றுநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். ஈரல்புற்று, ரத்தப்புற்று, தோல் புற்று, மார்பகப் புற்று மற்றும் ப்ராஸ்டேட் புற்று உண்டாகும் சாத்தியக் கூறுகளை காபி குறைப்பதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Health benefits of coffee
Health benefits of coffee
pixabay

அல்ஸைமர் நோய், பக்கவாத நோய், ரத்தக்கொதிப்பு நோய், இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஆகியன வராமல் பாதுகாக்கும் ஓர் அரும்பெரும் பானம் காபி. உடல் எடை குறைப்பிற்கு இது மிக அற்புதமான பானம்.

காபியில் உள்ள கேஃபைன் சத்து, நமது நரம்பு மண்டலத்தைத் தூண்டி அட்ரினலின் ஹார்மோன் உற்பத்தியைத் தூண்டும். இந்த ஹார்மோன் சுரப்பு ரத்தத்திற்குத் தன் சிக்னல்களை அனுப்பி உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்புக் கூறுகளை உடைத்து ரத்தத்தில் கலக்கச் செய்யும். கொழுப்பு சக்தியாக மாறி உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது தொடர்ச்சியாக நடக்கும்போது உடல் எடை குறைப்பில் பெரும் பயன் அளிக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், உடல் எடை குறைப்பிற்கு காபி குடிப்பது மட்டும் எந்த மாயாஜாலத்தையும் செய்துவிடாது. உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்ற பல வழிகளில் உடல் எடை சற்று குறைய ஆரம்பிக்கும்போது, காபி குடிக்கும் பழக்கம் அதற்குப் பெரியளவில் கைகொடுக்கும். ரத்த சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தில் கேஃபைன் ஊக்குவிப்பானாகச் செயல்பட்டு ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கும்.

நாம் உபயோகிக்கும் காபிக் கொட்டையின் வகை, அதை வறுக்கும் முறை மற்றும் டிகாக்ஷன் எடுக்கும் முறை ஆகியவற்றைப் பொறுத்து காபியின் தன்மை அமையும். காபியில் அரேபிகா மற்றும் ரொபோஸ்டா என்ற இரு முக்கிய வகை உள்ளன. அரேபிகா வகை காபிச் செடிகளை வளர்ப்பது மிகக் கடினம். இது சில குறிப்பிட்ட தட்பவெப்ப நிலைகளில் மட்டுமே வளரும். ரோபோஸ்டா வகையை வளர்ப்பது மிக எளிது, இதன் விலையும் மலிவு. இது அதிகம் நோய்வாய்ப்படாத ரகமும்கூட.

Health benefits of coffee
Health benefits of coffee
pixabay

லேசாக வறுக்கப்பட்ட கொட்டைகளை வைத்துத் தயாரிக்கபட்ட காபி வயிற்று எரிச்சலை உண்டாக்கும். நன்றாக வறுத்த காபி கொட்டைகளை வைத்துத் தயாரிக்கப்பட்ட காபி நெஞ்செரிச்சலையோ வயிற்று எரிச்சலையோ அவ்வளவு உண்டாக்குவது இல்லை.

காபியில் இருக்கும் சில வேதியியல் பொருள்கள், புற்றுநோய்க் காரணிகள் என உலக சுகாதார நிறுவனம் கூறி வந்தது. பல ஆய்வுகளுக்குப் பின்னர், 2016-ம் ஆண்டில், இதில் புற்றுநோய்க்காரணி இல்லை என்றும், பல புற்றுநோய்கள் வராமல் நம்மைப் பாதுகாக்கும் ஒரு பானம் காபி என்றும் தெரிவித்தது.

புற்றுநோய்க்கான பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் (IARC), விலங்குகளிடமும் மனிதர்களிடமும் நடத்திய பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில், காபி புற்றுக் காரணி அல்ல எனத் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று டம்ளர் காபிவரை குடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும் கூறி உள்ளது. நாள் ஒன்றுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் கேஃபைனின் மொத்த அளவு 400 மிகி-க்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

காபி குடிக்கும் பழக்கம் நம்மை பல நாள்பட்ட நோய்களின் பிடியில் சிக்காமல் பாதுகாக்கும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. 65 வயதிற்குப் பின்னர் வரக்கூடிய கணைய மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் வராமல் பாதுகாக்கக் கூடிய பல தாவர மூலக்கூறுகள் அடங்கிய பானம் காபி என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Health benefits of coffee
Health benefits of coffee
pixabay

நாள் ஒன்றுக்கு இரண்டு கோப்பை காபி அருந்துவது பக்கவாதம் வருவதற்கான சாத்தியக் கூறுகளை 20% குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதே நேரம், பெண்களுக்கு சினைப்பை புற்று உண்டாவதற்கான சாத்தியக் கூறுகளை மட்டும் இது சற்று அதிகப்படுத்துவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. காபியின் இத்தனை நன்மைகளும் அதில் பாலோ, சர்க்கரையோ சேர்க்கும்போது இல்லாமல் போய்விடுகிறது.

பாலுடன் சேர்ந்த காபிக்கு எந்த மருத்துவக் குணமும் சொல்லப்படவில்லை. சித்தர் வாழ்வியல் முறையில் பால் சேர்க்கும் காபியைத் தவிர்க்கவே வலியுறுத்தபடுகிறது. எனவே, பால் சேர்க்காத வரக்காப்பியே சிறந்தது.

Health benefits of coffee
Health benefits of coffee
pixabay
புத்துணர்ச்சி தரும் காபி... அளவுக்கு மீறினால் என்னாகும்? #InternationalCoffeeDay #VikatanPhotoCards

காபியை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. அது நெஞ்சு எரிச்சல், அஜீரணம் ஆகியவற்றை ஏற்படுத்தும். காபி குடிப்பதால் சிலருக்குத் தூக்கமின்மை, படபடப்பு, மனப்பதற்றம், ஒற்றைத் தலைவலி ஆகியன உண்டாகும். இதற்கும் காபியில் உள்ள கேஃபைனே காரணம். சித்த மருத்துவப் புரிந்துணர்வின்படி நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற பித்தம் சம்பந்தமான குறிகுணங்கள் இருப்பவர்கள் காபியைத் தவிர்க்க வேண்டும். தூக்கம் மிகக் குறைவாக உள்ளவர்கள் மாலை 5 மணிக்கு மேல் காபி குடிக்க வேண்டாம்.

அடுத்த கட்டுரைக்கு