Published:Updated:

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: வீட்டிலிருந்தே வேலையா? இனி இதுதான் உங்கள் டயட்!

எடைக்குறைப்பு
பிரீமியம் ஸ்டோரி
எடைக்குறைப்பு

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: வீட்டிலிருந்தே வேலையா? இனி இதுதான் உங்கள் டயட்!

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

Published:Updated:
எடைக்குறைப்பு
பிரீமியம் ஸ்டோரி
எடைக்குறைப்பு
‘வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நொறுக்குத் தீனிகளை மோப்பம் பிடிப்பதையும் தேடிப்பிடித்து உண்பதையும் கட்டுப்படுத்த முடியும்’ என்றொரு வாட்ஸ்அப் செய்தி ஃபார்வேர்டில் வந்தது. உண்மைதான்... கொரோனா கிருமிக்கு பயந்து மட்டுமல்ல, வாயை அடக்கவும் நமக்கெல்லாம் கவசம் தேவைப்படுகிறது இப்போது!

வாரங்களைக் கடந்துவிட்டோம். ஜிம், பார்க் எல்லாம் மூடப்பட்டன. கூட்டம்கூடத் தடை. தெருவில் இறங்கவே தடை என்ற நிலையில் ஃபிட்னஸ் பிரியர்களுக்கெல்லாம் கிட்டத்தட்ட கையறு நிலை. குழுவாகச் சேர்ந்து வொர்க் அவுட் செய்தவர்கள், ஒருநாள் தவறாமல் வொர்க் அவுட் செய்தவர்களுக்கெல்லாம் இந்தச் சூழல் கடுமையான மன அழுத்தத்தைத் தந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: வீட்டிலிருந்தே வேலையா? இனி இதுதான் உங்கள் டயட்!

கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடி நகர்கின்றன நிமிடங்கள். ஆரோக்கியக் கேடு என்று ஒருகாலத்தில் ஒதுக்கிவைத்த உணவுகளை எல்லாம் அசைபோட்டுக்கொண்டே வேலைசெய்வதில் தகர்கின்றன ஃபிட்னஸ் லட்சியங்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொஞ்ச நஞ்சம் இருந்த அசைவுகளும் அறவே இல்லாமல்போன நிலையிலும், ஓயாமல் எதையாவது மென்றுகொண்டே வேலை செய்கிற நிலையிலும் பலருக்கும் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது அவர்களது எடை அதிகரிப்பு.

‘வொர்க் ஃப்ரம் ஹோம் முடிஞ்சு திரும்ப ஆபீஸ் போகும்போது என்னை யாருக்கும் அடையாளமே தெரியாதுன்னு நினைக்கிறேன்’ என்ற சுயநகைச்சுவையோடு இந்தச் சூழலைக் கடப்பவர்களே அதிகம்.

எடைக்குறைப்பு
எடைக்குறைப்பு

வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழலில் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாகவும் அதேநேரம் எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்காமலும் வேலை செய்வதுதான் வொர்க் ஃப்ரம் ஹோமின் கான்செப்ட். ஆனால், அது தனக்கு வசதியான நேரத்தில், வசதியான இடத்தில், வசதியான உடையில், வசதியான உணவுகளோடு செய்கிற வேலை எனப் பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. அதனாலேயே பலரும் தவறான உணவுப்பழக்கங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வீட்டிலிருந்தபடியே அலுவலக டாஸ்க்கு களைச் சரியாக முடிக்க முடியுமா என்ற சவாலோடு, இந்தச் சூழலில் எடை அதிகரிக்காமல் ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற இன்னொரு சவாலும் சேர்ந்திருக்கிறது.

எடைக்குறைப்பு
எடைக்குறைப்பு

எல்லாவற்றுக்கும் காரணம் மனம்தான். அது உறுதியாக இருந்தால் ஒரு கிலோ எடையைக் கூட அதிகரிக்கவிடாமல் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

காலை உணவைத் தவிர்க்காதீர்கள்

அரக்கபரக்க எழுந்திருக்கத் தேவையில்லை. வெந்ததையும் வேகாததையும் தின்ன வேண்டியதில்லை. நேரம் உங்கள் வசம் என்பதால் நினைத்த நேரத்துக்கு எழுந்திருப்பது, நினைத்த நேரத்துக்குச் சாப்பிடுவது என இருப்பீர்கள். இதைத் தவிருங்கள். நார்ச்சத்தும் புரதமும் நிறைந்த காலை உணவை எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்காதீர்கள். இப்படிப்பட்ட காலை உணவு உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும் என்பதால், வேலைக்கிடையில் கண்டதையும் கொறிக்கத் தேடிப்போக மாட்டீர்கள். காலை உணவைத் தவறாமல் சாப்பிடுவது அன்றைய நாள் முழுவதும் நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரிக்காமலிருக்கவும் உதவும். காலை உணவைத் தவிர்க்கும்போது உங்கள் வயிறு பசியால் ஒலியெழுப்பும். அதன் தொடர்ச்சியாக இனிப்பு சேர்த்த உணவுகளின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். அடுத்தடுத்த வேளைகளில் உங்களையும் அறியாமல் வழக்கத்தைவிட அதிகம் சாப்பிடுவீர்கள்.

காலை உணவு
காலை உணவு

காலை உணவுக்கு ஆரோக்கியமான ஆப்ஷன்ஸ்

 • பருப்பு தோசையும் சட்னியும் சாம்பாரும்

 • சிறுதானிய உப்புமாவும் சட்னியும்

 • முட்டை

 • முசிலி அல்லது தானியக் கலவை, நட்ஸிலிருந்து எடுக்கப்பட்ட பால் மற்றும் பழங்களுடன்

 • சத்துமாவுக் கஞ்சி

நீரிழப்பைத் தவிர்க்க...

எடை நிர்வாகத்தில் நீர்ச்சத்துள்ள உணவுகளுக்கு முக்கிய இடமுண்டு. எடைக்குறைப்புக்காக ஆலோசனை பெற வருகிற பலரும் அவர்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவைவிட மிகக் குறைவான அளவே தண்ணீர் குடிப்பதைப் பார்க்க முடிகிறது. திரவ உணவுகளின் அவசியத்தை வலியுறுத்தி, அதைச் சரிசெய்யும்போது எடைக்குறைப்பு இன்னும் எளிதாவதையும் பார்க்கலாம். திரவ உணவுகளை நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதோடு, பிற உணவுகளின் மூலம் அதிக கலோரிகள் உடலில் சேர்வதும் தடுக்கப்படும்.

பல நேரங்களில் தாக உணர்வானது பசி உணர்வெனத் தவறாகப் புரிந்துகொள்ளப் படுகிறது. சூப், ரசம், மோர், எலுமிச்சை ஜூஸ், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யலாம். கூடவே போதுமான அளவு நீரும் அருந்த வேண்டும். சாதாரண நாளில் ஒருவருக்கு மூன்று முதல் நான்கு லிட்டர்வரை தண்ணீர் தேவைப்படும் என்பதை நினைவில்கொள்ளவும்.

மதிய உணவை பேக் செய்யுங்கள்

ஆரோக்கியமான மதிய உணவுக்கான சாய்ஸ் என்னவென்று யோசியுங்கள். `வொர்க் ஃப்ரம் ஹோம்தானே... பரபரப்பில்லாமல் நிதானமாகச் சமைக்கலாம், சாப்பிடலாம்' என்ற எண்ணத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளைப் பற்றி யோசிக்காதீர்கள். மதிய உணவென்பது அன்றைய பொழுதுக்கான பெரிய, முக்கியமான உணவு என்பதால் வீட்டிலிருக்கும்போது நிறைய சாப்பிடச் சொல்லி, மனம் தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம், ஜாக்கிரதை. முடிந்தால் உங்கள் லஞ்ச் பேக்கிலேயே உணவை வைத்துச் சாப்பிடலாம்.

மதிய உணவு
மதிய உணவு

மதிய உணவுக்கான ஆரோக்கிய ஆப்ஷன்ஸ்

 • சாதம், பருப்பு, காய்கறிகள்

 • கீன்வா(Quinoa), கீரை மற்றும் பொரியல்

 • பிசிபேளாபாத், பொரியல்

 • புலாவ், ரைத்தா

 • பிரியாணி, ரைத்தா

 • சாதம், மிக்ஸ்டு வெஜிடபிள் கறி

மேலே குறிப்பிட்டவற்றை கலர்ஃபுல்லாக மாற்ற முயலுங்கள். வீட்டிலேயே இருப்பதால் உங்களுக்குப் பிடித்ததையெல்லாம் பிடித்த நேரத்தில் சாப்பிடுவதைத் தவிருங்கள்.

உங்களை நீங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளுங்கள்!

எடைக்குறைப்பு என்பது விடாமுயற்சியும் குறையாத தன்னம்பிக்கையும் தேவைப்படுகிற விஷயம். வீட்டிலேயே இருப்பதால் பலரும் எளிதில் எடைக்குறைப்பு விஷயத்தில் நம்பிக்கை இழக்க வாய்ப்புகள் அதிகம். அதற்கு இடம்கொடுக்காமல் உங்களை நீங்களே உற்சாகமாக வைத்துக்கொள்வதற்கான வழிகளை யோசியுங்கள். சரியான எடையில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும், அதற்குத் தேவைப்படுகிற முயற்சிகளையும் மறக்காதீர்கள். எடைக்குறைப்பு முயற்சியில் உங்கள் இலக்கு என்னவாக இருந்தது, அதில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி சரிபாருங்கள். அதை நோக்கிய உங்கள் பயணம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறதா என்று கண்காணியுங்கள். உங்களால் முடியும் என்று சொல்லிக்கொள்ளுங்கள். வீட்டைவிட்டுத் தாண்ட முடியாத நிலையிலும் உங்களால் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என நம்புங்கள். அந்த நம்பிக்கைதான் இப்போது மிக மிக முக்கியம்.

வீட்டிலேயே வொர்க்அவுட் செய்யுங்கள்

வொர்க் அவுட் செய்வதென்றால் ஜிம்மையோ, பார்க்கையோ, துணைக்கு நண்பர்களையோ தேடி ஓட வேண்டியது அவசியமில்லை. ஃபிட்னஸ் என்ற விஷயம் உங்களை உற்சாகப்படுத்த வேண்டும், சந்தோஷப்படுத்த வேண்டும். அதை எங்கேயும் எப்போதும் செய்யலாம், தவறில்லை.

வொர்க் ஃப்ரம் ஹோமில் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் இந்தச் சூழலிலும் உங்களால் ஃபிட்டாக இருக்க முடியும்.

உங்களுக்குச் செய்ய முடிகிற ஃபிட்னஸ் பிராக்டீஸை முதலில் முடிவு செய்யுங்கள். அதற்கேற்ப அன்றைய நாளைத் திட்டமிடுங்கள். வேலையின் பிரேக்குகளுக்கு இடையே 15 நிமிடங்கள் ஃபிட்னஸ்ஸுக்காக ஒதுக்குங்கள். யோகாசனங்கள், சூர்யநமஸ்காரம் உள்ளிட்ட எத்தனையோ பயிற்சிகளை நீங்கள் உங்கள் இருப்பிடத்திலேயே செய்ய முடியும். ஃபிட்னஸ் பயிற்சியாளரிடம் போன் அல்லது வீடியோ காலில் தொடர்புகொண்டு உங்களுக்கான பிரத்யேக பயிற்சிகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டும் செய்ய ஆரம்பிக்கலாம்.

டின்னரும் முக்கியம்

இரவு உணவுக்கும் போதுமான முக்கியத்துவம் கொடுங்கள். தூங்கப்போகும் வேளைதானே என ஏனோதானோ எனச் சாப்பிடாதீர்கள். மெனுவைத் திட்டமிடுவது முதல் காய்கறிகள் நறுக்குவதுவரை இரவு உணவுத் தயாரிப்பில் உங்களை உற்சாகமாக ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

புதுமையான சமையல் முறைகளை (அதாவது அதிக நேரமெடுக்காமலும் அதே நேரம் ஆரோக்கியமானதாக இருக்கும்படியும்) முயற்சி செய்யுங்கள்.

அந்தந்த வாரத்துக்கான மெனுவைத் திட்டமிட்டு, அதைப் பின்பற்றுங்கள். இவற்றில் எதுவும் உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யாமல் பார்த்துக் கொள்வதில்தான் இருக்கிறது உங்கள் சாதுர்யம்.

இரவு உணவு
இரவு உணவு

டின்னருக்கான ஆரோக்கிய ஆப்ஷன்ஸ்

 • ரொட்டியும் அசைவ கறியும்

 • தோசையும் வெஜிடபிள் கறியும்

 • புரதம் நிறைந்த உணவுடன் சூப்

இப்படியெல்லாம் இருப்பது சிறந்தது என இன்னும்கூட நிறைய ஆலோசனைகளையும் வழிமுறை களையும் இங்கே உங்களுக்குக் கொடுக்கலாம். ஆனால், முயற்சிகளை எடுக்க வேண்டியது நீங்கள்தான்!

‘உற்பத்தித் திறன் என்பது ஒருபோதும் விபத்தல்ல, புத்திசாலித்தனமான திட்டமிடல், கவனம் பிசகாத முயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் பலன் அது’ என்பது பால் ஜே மேயரின் பொன்மொழி. எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் இதுதான் மெசேஜ்.

இருக்கும் நேரத்தையும் வாய்ப்பையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வரப்போகிற நாள்களிலும் ஆரோக்கியமாக வாழ்வதை விட்டுக் கொடுக்காதீர்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோம் நாள்களைக் கடந்து மீண்டும் அலுவலகத்துக்குப் போகும்போது உங்களை யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாதுதான்... அதாவது முன்னைவிட ஆரோக்கிய மாகவும் இளமையாகவும் மாறியிருக் கும் உங்களை அவர்களுக்கு அடை யாளம் தெரியவில்லை என்றால் அதுதான் உங்கள் வெற்றி. அதற்கு இன்றிலிருந்தே மெனக்கெடுங்கள்!

(நம்மால் முடியும்!)