தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: வீகன் ஊட்டச்சத்துகளின் சங்கமம்!

ஊட்டச்சத்துகளின் சங்கமம்
News
ஊட்டச்சத்துகளின் சங்கமம்

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

மீபத்தில் நடந்துமுடிந்த 92-வது ஆஸ்கர் விருது விழாவின் ஹைலைட்டுகளில் ஒன்று அங்கே பரிமாறப்பட்ட விருந்து. ஹாலிவுட்டே குழுமியிருந்த அந்த விருந்தில் விதவிதமான வீகன் உணவுகள் பரிமாறப்பட்டன. ‘வீகனாக மாறிவிட்டேன்’ என அறிவிப்பது இன்று பாலிவுட், ஹாலிவுட்டில் ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டாக இருக்கிறது. அதென்ன வீகன் டயட்?

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: வீகன் ஊட்டச்சத்துகளின் சங்கமம்!

உணவு, உடை உள்ளிட்ட எந்தத் தேவைக்காகவும் உயிரினங்களுக்கு எதிராக நடத்தப்படும் அத்தனை வன்முறைகளையும் தவிர்த்த ஒரு வாழ்வியல் முறையே வீகனிசம். உயிரினங்களின் மீது பரிவு, இயற்கையின் மீது அக்கறை ஆகிய இரண்டும்தாம் வீகனிசத்தின் பிரதான கொள்கைகள். இந்த உணவியல் முறையில் தாவர உணவுகளுக்கு மட்டுமே அனுமதி. முட்டை மற்றும் அசைவ உணவுகளுக்கு அனுமதி கிடையாது. இவ்வளவு ஏன்... பால் உணவுகள்கூட கிடையாது. சூழலியலிலும் ஆரோக்கியத் திலும் அதீத அக்கறை உள்ளவர்களுக்கான உணவு முறை இது. வீகன் உணவுப் பழக்கத்துக்கு மாறும் எண்ணத்தில் இருப்போர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்.

  • அத்தியாவசிய சத்துகள், நார்ச்சத்து, 0% கொலஸ்ட்ரால் என வீகன் உணவுகளை `ஊட்டச்சத்துகளின் சங்கமம்' என்றே சொல்லலாம். இந்த உணவு முறைக்கு மாறிய பலரும் நோய்களிலிருந்து விடுபட்டதாகவும், மருத்துவச் செலவுகள் பெருமளவில் குறைந்ததாகவும் சொல்வதைக் கேட்கலாம்.

  • இடுப்பு அளவைக் குறைத்து எடைக்குறைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே பலரும் வீகன் உணவு முறைக்கு மாறுகிறார்கள். தாவரங் களைப் பிரதானமாகக்கொண்ட வீகன் உணவுகளில் அதிக அளவிலான நார்ச்சத்து இருப்பதே இதற்குக் காரணம். இந்த உணவுகள் குறைந்த கலோரிகளே தருவதால் எடைக்குறைப்பு எளிதில் சாத்தியமாகிறது.

ஊட்டச்சத்துகளின் சங்கமம்
ஊட்டச்சத்துகளின் சங்கமம்
  • செரிப்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட், அதிக நார்ச்சத்து மற்றும் 0% கொலஸ்ட்ரால் தன்மைகளின் காரணமாக வீகன் உணவுக்காரர்களுக்கு பருமன், நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், இதயநோய் மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன. நூறு சதவிகித வீகன் உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவோருக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 40 சதவிகிதம் குறைவதாகத் தெரிகிறது.

  • வீகன் உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவோருக்கு பித்தப்பைக் கற்கள், கீல்வாதம், அல்சைமர், மலச்சிக்கல், குடல் பாதிப்புகள் மற்றும் ஒவ்வாமை (குறிப்பாக, குழந்தைகளுக்கு ஏற்படும் பால் ஒவ்வாமை) போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

  • சைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது அசைவ உணவுகளைத் தயாரிக்கச் செலவாகும் இயற்கை வளங்களின் அளவு மிக அதிகம்.

  • விலங்குகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியாகக் கருதி பால் உணவுகளையும் வீகன் உணவுக்காரர்கள் தவிர்க்கிறார்கள்.

பாதகங்கள்

குறிப்பிட்ட சில உணவுகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் வீகன் உணவுப்பழக்கத்தை ஆரம்பித்த புதிதில் சிலருக்கு அதிகமாகப் பசிக்கும். அதன் தொடர்ச்சியாக அவர்கள் ஆரோக்கியமற்ற, அதிக அளவு பதப்படுத்தப்பட்ட, இனிப்பு சேர்த்த நொறுக்குத்தீனிகளைத் தேடிப் போகலாம். அதனால், அவர்களின் எடை அதிகரிக்கலாம். எனவே, வீகன் உணவு முறைக்கு மாற நினைப்பவர்கள், சிறிது சிறிதாக அதற்குப் பழகுவதன் மூலம் தேவையற்ற எடை அதிகரிப்பையும் உடல்நலச் சிக்கல்களையும் தவிர்க்கலாம்.

ஊட்டச்சத்துகளின் சங்கமம்
ஊட்டச்சத்துகளின் சங்கமம்

இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் டி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி12, அயோடின் மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துகளுக்கு அசைவ உணவுகளும் பால் உணவுகளுமே பிரதானமானவை. வீகன் உணவுகளில் இந்தச் சத்துகள் இல்லாமல் போகும்போது அவை ரத்தச்சோகை, கூந்தல் மெலிவது, எலும்புகளின் அடர்த்தி குறைவது, தசை இழப்பு, தைராய்டு சிக்கல்களுக்குக் காரணமாகலாம். குறிப்பாக வைட்டமின் பி12 குறைபாடு, மத்திய நரம்பு மண்டலத்தையும் வளர்சிதைமாற்றச் செயல்பாடுகளையும் பாதித்து அதீத களைப்பு, பலவீனம், மலச்சிக்கல், பசியின்மை போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

வீகன் பழக்கத்தைப் பின்பற்றும் சிலர் போதுமான அளவு புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாததால் உடலில் நீர் சேர்தல், வீக்கம், களைப்பு, முடி உதிர்வு போன்றவை ஏற்படலாம்.

வீகன் உணவுகளிலேயே எல்லாச் சத்துகளும் கிடைக்குமாறு தேர்வுசெய்து சாப்பிடுவது பிரச்னைகளைத் தவிர்க்கும்.

புரோட்டீன் தேவைக்குப் பருப்புகளை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியுள்ளதால் அவை வயிற்று உப்புசம், வாய்வுக் கோளாறு, வயிற்றுவலி போன்றவற்றை சிலருக்கு ஏற்படுத்தலாம்.

அசைவம் மற்றும் பால் உணவுகளைத் தவிர்த்து, அவற்றுக்கு மாற்றாக அதே அளவு ஊட்டமுள்ள வேறு உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது என்பது எல்லா சந்தர்ப்பங்களிலும் சாத்திய மாகாது. குறிப்பாக வெளியிடங்களில் சாப்பிடும்போதும், திருமணம் போன்ற விசேஷங்களில் சாப்பிடும்போதும் இது பிரச்னையாக இருக்கும்.

வீகன் உணவுப் பழக்கத்துக்கு மாற நினைப்போருக்கான சில ஆலோசனைகள்...

ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். வீகன் உணவுப் பழக்கத்துக்கு மாறியே தீர்வது என்ற முடிவில் இருப்போர் உணவுத்தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஊட்டச்சத்துகளின் சங்கமம்
ஊட்டச்சத்துகளின் சங்கமம்

சூப்பர் மார்க்கெட்டுகளில் வீகன் என்ற பெயரில் விற்கப்படும் பதப்படுத்தப் பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

`செறிவூட்டப்பட்டது' என்ற அறிவிப்புடன் வரும் வைட்டமின் டி, கால்சியம், மற்றும் வைட்டமின் பி12 சேர்த்த உணவுகள் உங்கள் மெனுவில் அவசியம் இடம்பெற வேண்டும். செறிவூட்டப்பட்ட சோயா மில்க், செறிவூட்டப்பட்ட டோஃபு (சோயா பனீர்), சோயா பீன்ஸ், செறிவூட்டப்பட்ட ரெடி டு ஈட் சோயா உணவுகள் சிறந்தவை.

வீகன் உணவுப்பழக்கம் உள்ளோருக்கு மிக எளிதில் அனீமியா எனப்படும் ரத்தச்சோகை தாக்கலாம். முளைகட்டுதல், புளிக்கவைத்தல் போன்றவற்றின் மூலம் சத்துகள் இழப்பை ஓரளவு தவிர்க்கலாம். கீரைகள், டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், வைட்டமின் சி உள்ள உணவுகள் மூலம் இரும்புச்சத்து கிரகிப்புத் தன்மை மேம்படும். இரும்புப் பாத்திரங்களில் சமைப்பதும் உதவும்.

சியா சீட்ஸ், ஃபிளாக்ஸ் சீட்ஸ், வால் நட்ஸ், சோயா பீன்ஸ் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால், இவற்றைத் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கொண்டைக்கடலை, பயறு, டோஃபு, சோயா மில்க், நட்ஸ் போன்றவற்றின் மூலம் தரமான புரதச்சத்தைப் பெறலாம்.

அயோடின் சத்தைப் பெற அயோடைஸ்டு சால்ட் உபயோகிப்பது, கடல்பாசியைச் சேர்த்துக்கொள்வது போன்றவை உதவும்.

வேறு வழியே இல்லை, வீகன் உணவுதான் நிரந்தரம் என்ற முடிவில் இருப்போர் வீகன் உணவுகளின் மூலம் கிடைக்காத சத்துகளை மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட்டுகள் மூலம் ஈடுசெய்து கொள்ளலாம்.

(நம்மால் முடியும்!)

வீகன் சாய்ஸ்...

காலை உணவுக்கு...

சிக்கனுக்குப் பதில் சோயா சங்க்ஸ் மற்றும் காளான் பனீருக்கு பதில் டோஃபு தயிருக்குப் பதில் தேங்காய்ப்பால் இட்லி, தோசை அல்லது ஊத்தப்பம்... சாம்பார் அல்லது அனைத்து வகையான சட்னி நெய் சேர்க்காத பொங்கல் இடியாப்பம் மற்றும் தேங்காய்ப்பால் ஆப்பம் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்துச் செய்த வெஜிடபிள் ஸ்டியூ காய்கறிகள் சேர்த்த சிறுதானிய உப்புமா புட்டு மற்றும் கடலைக்கறி குழிப்பணியாரம் காய்கறிகள் சேர்த்த அவல் உப்புமா ஃப்ரெஞ்ச் டோஸ்ட் மற்றும் டோஃபு பொடிமாஸ் தேங்காய்ப்பால் சேர்த்தோ, சேர்க்காமலோ ராகி கஞ்சி சட்னியுடன் பெசரெட் பூரி மற்றும் சன்னா.

ஊட்டச்சத்துகளின் சங்கமம்
ஊட்டச்சத்துகளின் சங்கமம்

சாத வகைகள்...

வெஜிடபிள் பிரியாணி சோயா சங்க்ஸ் பிரியாணி தேங்காய் சாதம் எலுமிச்சை சாதம் புளி சாதம் தக்காளி சாதம் ராஜ்மா சாதம் சிறுதானிய பிரியாணி தால் கிச்சடி வெஜிடபிள் புலாவ்

சைடிஷ்...

சோயா மசாலா, வெஜிடபிள் கோஃப்தா, தால் மக்கனி, காய்கறி சாம்பார், சுண்டைக்காய், பூண்டு, வெண்டைக்காய், சோயா சேர்த்த காரக்குழம்பு, அனைத்து வகையான காய்கறிக் கூட்டு, வகை வகையான காய்கறிப் பொரியல், மிக்ஸ்டு வெஜிடபிள் சப்ஜி, பாலக் டோஃபு, பைங்கன் பத்ரா, அவியல், மோர்க்குழம்பு அல்லது கடி.

குடிப்பதற்கு...

மூலிகை டீ ஜல்ஜீரா அனைத்து வகையான ஃப்ரூட் ஜூஸ் லெமன் மின்ட் டிரிங்க் இளநீர் தேங்காய்ப்பால் சேர்த்த வாழைப்பழ மில்க் ஷேக் தேங்காய்ப்பால் சேர்த்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்

டெசர்ட்...

தேங்காய்ப்பால் பாயசம் தேங்காய் பர்பி காஜு கத்லி இலை அடை கோகனட் சியா புடிங்.

மற்றவை...

டோக்ளா வெஜிடபிள் கட்லட் டோஃபு

கட்லெட் ஆலு டிக்கி கட்டி ரோல் பக்கோடா.