Published:Updated:

இஞ்சி டீ முதல் நெல்லிக்காய் ஜூஸ் வரை... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டாப் 5 உணவுகள்!

ஆரோக்கிய உணவுகள்
News
ஆரோக்கிய உணவுகள்

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என நினைக்கிறோம். ஆனால், உண்மையில் நெல்லிக்காய்தான் சளிக்கு சிறந்த சிகிச்சை.

இஞ்சி டீ முதல் நெல்லிக்காய் ஜூஸ் வரை... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டாப் 5 உணவுகள்!

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என நினைக்கிறோம். ஆனால், உண்மையில் நெல்லிக்காய்தான் சளிக்கு சிறந்த சிகிச்சை.

Published:Updated:
ஆரோக்கிய உணவுகள்
News
ஆரோக்கிய உணவுகள்

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மருந்துகளுக்காக இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், ஆரோக்கியமான உணவுமுறையே நம்மிடம் எந்த நோயையும் அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளும் என்கின்றனர், மருத்துவர்கள்.

ஆரோக்கிய உணவுகள்
ஆரோக்கிய உணவுகள்

''நோய்க்கிருமிகள் பரவுவதற்கு புறச்சூழல்கள் மட்டுமே காரணமாய் இருப்பதில்லை. உடலில் நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகள் இருப்பதும், எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதுவுமே நோய்கள் பரவுவதற்குக் காரணம்'' என்கிறார், இயற்கை மருத்துவர் தீபா. அதென்ன நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு? ''கழிவுகள் உடலிலேயே தங்குவதன்மூலம் கிருமிகள் வளர்வதோடு நோய்களும் உடலில் பெருகி வீரியம்கொள்ளும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வதன்மூலம் வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்த்தொற்றுகளை வெகுவாகத் தவிர்க்க முடியும்'' என்கிறார் அவர். தீபா, வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் பானங்கள், உணவுகளைப் பட்டியலிடுகிறார்.

இயற்கை மருத்துவர் தீபா
இயற்கை மருத்துவர் தீபா

1. இஞ்சி டீ

மூன்று டம்ளர் தண்ணீரில் ஒரு விரலளவு இஞ்சியை சேர்த்துக் கொதிக்கவைத்து, அது சுண்டி வரும்போது, அதில் கொஞ்சம் தேன் கலந்து சூடாகக் குடிக்கலாம். கொதிக்கும்போது கொஞ்சம் புதினா சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்ல மணமாக இருக்கும். வாரம் இரண்டு முறை மாலை வேளைகளில் இதைப் பருகலாம்.

மூச்சுத் திணறல், வைரல் தொற்று, காய்ச்சல் எல்லாவற்றுக்கும் இஞ்சி டீ ஏற்றது. எதிர்ப்பு சக்தியையும் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து, கழிவுகளை மலம் வழியே வெளியேற்றிவிடும். வாந்தி, காய்ச்சல், சளி, தலைவலி, மூக்கடைப்பு போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு சிறந்த ட்ரீட்மென்ட், இஞ்சி டீ.

இஞ்சி
இஞ்சி

2. துளசி டிகாக்‌ஷன்

ஒரு டம்ளர் தண்ணீரில் கைப்பிடியளவு துளசி இலைகளைப் போட்டு கொதிக்கவைத்து, முக்கால் டம்ளர் அளவுக்கு வற்றியதும், இறக்குவதற்கு முன்பாக 3 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக் குடிக்கலாம். வாரம் இருமுறை இதை அருந்தலாம். அதிகக் காரம் என்பதால் அடிக்கடி பருக வேண்டாம். துளசி, ஆன்டிபயாடிக். சளி, இருமல், காய்ச்சல், மூச்சிரைப்பு, வைரல் தொற்று அண்டாது. இந்தத் தொந்தரவு இருப்பவர்கள் இதைத் தொடர்ந்து பருகிவர, மாற்றங்களை உணரலாம்.

3. மஞ்சள் தண்ணீர்

ஒரு டம்ளர் தண்ணீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் கலந்து கொதிக்கவைத்து, வெதுவெதுப்பாகக் குடிக்கலாம். பெரியவர்கள் முக்கால் டம்ளர், குழந்தைகள் கால் டம்ளர் எனப் பருகலாம். இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பது மஞ்சள். உடலுக்கு வெளியே ஏற்படும் தொற்று நோய், தோல் நோய் போன்றவற்றுக்கும், உடலில் ஏற்படும் கிருமித் தொற்றுகளுக்கும் சிறந்த மருந்து, மஞ்சள்.

மஞ்சள்
மஞ்சள்

4. பூண்டு

வெறும் கடாயில் 5 பூண்டுப் பற்களைப் போட்டு, சில நொடிகள் மட்டும் வதக்க வேண்டும். பச்சை வாசம் போய்விடும். பிறகு அவற்றை, நாம் தினசரி சாப்பிடுகிற இட்லி, தோசை, சட்னி, சாலட் உள்ளிட்ட அத்தனை டிஷ்களுக்குள்ளும் சிறிது வைத்துச் சாப்பிடலாம். பூண்டில் ஆலிஃபின் கலந்திருக்கிறது. இது, சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை உடலுக்குத் தரக்கூடியது; ரத்த அழுத்தத்தை சீராக்கும்; கொழுப்பைக் கட்டுப்படுத்தும்; செரிமானக் கோளாறை சரிசெய்யும்.

5. நெல்லிக்காய்

நெல்லிக்காய்த் துண்டை குடிநீரில் சிறிது நறுக்கிப் போட்டு அருந்தினாலே போதும். அதுவே அருமருந்தாய் நல்ல பலனைத் தரும். மேலும், நெல்லிக்காயுடன் அரை கைப்பிடி கறிவேப்பிலை, அரை கைப்பிடி கொத்தமல்லி, புதினா, இஞ்சி எல்லாம் சேர்த்து அரைத்து, தேன் கலந்தோ அல்லது தண்ணீர் சேர்த்தோ குடிக்கலாம். அல்லது உப்பும் கொஞ்சம் மிளகுத்தூளும் சேர்த்துப் பருகலாம்.

நெல்லிக்காய்
நெல்லிக்காய்

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என நினைக்கிறோம். ஆனால், உண்மையில் நெல்லிக்காய்தான் சளிக்கு சிறந்த சிகிச்சை. வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலுக்கு நிறைய நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். மருத்துவர்கள், ஒருநாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடச் சொல்கின்றனர். ஆனால், ஒரு நெல்லிக்காய், ஆப்பிளுக்கு சமமான சத்துகளை உடையது. நரை முடி ஏற்படாது தடுக்கும். மூளைத்திறனை உயர்த்தும். தொற்றுகள் வராமல் காக்கும்.