மஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன? #DoubtOfCommonMan

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்குரிய உணவுகளை உட்கொள்வது முக்கியம். அதேபோல சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியிருக்கும். கொழுப்புள்ள உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், மஞ்சள் காமாலை பாதிப்பின்போது செரிமானம் மெதுவாகத்தான் நடக்கும்.
அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் வளர்ந்து நிற்கிறோம். ஆனாலும், இன்றும்கூட ஒருவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டால் அவருக்குக் கீழாநெல்லி வேரை அரைத்து, அதன் சாற்றைக் குடிக்கக் கொடுக்கும் பழக்கம் கிராமங்களில் இருக்கிறது. மஞ்சள் காமாலையைப் போக்க அருமருந்தாகக் கீழாநெல்லி வேர் கருதப்படுகிறது. அதை ஆயுர்வேத மருத்துவமும் பரிந்துரைக்கிறது. ஆனால், அதை மருத்துவரின் ஆலோசனையுடன்தான் சாப்பிட வேண்டும் என்றும் கூறுகிறது. இது ஒருபுறமிருக்க... அலோபதி மருத்துவமோ அதை முற்றிலும் தவறு என்று எச்சரிக்கிறது. மஞ்சள் காமாலை குறித்த சந்தேகங்கள் பலரிடமும் உண்டு.
“மஞ்சள் காமாலை நோயின்போது கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் அல்லது தவிர்க்க வேண்டியவை எவை? அலோபதி மருந்து எடுத்துக்கொண்டிருக்கும்போது நாட்டு மருந்துகளையும் உட்கொள்ளலாமா?” என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் வாசகர் பாலாஜி என்பவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
வாசகரின் இந்தக் கேள்வி குறித்து, கல்லீரல் மருத்துவர் விவேக்கிடம் கேட்டோம்.
“மஞ்சள் காமாலை என்பது நோயல்ல. அது நோய்க்கான அறிகுறியே. மருத்துவரிடம் காண்பித்து, உடலில் என்ன வகையான பிரச்னை என்பதை அறிந்துகொள்வது முக்கியம். அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்குரிய உணவுகளை உட்கொள்வது முக்கியம். அதேபோல சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியிருக்கும். கொழுப்புள்ள உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், மஞ்சள் காமாலை பாதிப்பின்போது செரிமானம் மெதுவாகத்தான் நடக்கும். கல்லீரலிலிருந்து பித்தம் உடனடியாக உற்பத்தியாகாததால் செரிமானத்துக்கு அதிக நேரம் எடுக்கும். அதே போன்று எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
மீன், சிக்கன் சாப்பிடலாம். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் சிக்கன் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிட்டால் உடல் சூடாகிவிடும் என்றெல்லாம் நம்பிக்கைகள் உண்டு. அவையெல்லாம் தவறானவை. எண்ணெயில் சிக்கனை பொரித்துச் சாப்பிடாமல், வேறு வகையில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்குப் பிரச்னையில்லை.

அதேபோல, நாட்டு மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. நாட்டு மருந்து உட்கொள்வதால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏனெனில், தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் ஆற்றல் கல்லீரலுக்கு இருக்கும். இதை நாட்டு மருந்துகள் செயலிழக்கச் செய்துவிடும்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டால் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். இளநீர் குடிக்கலாம். காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும்.

இவையெல்லாம் எளிதில் செரிமானமாகும் உணவுகள். இவற்றைத் தேவையான அளவுக்கு உட்கொள்வதில் தவறில்லை!” என்கிறார் விவேக்.
ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன் தரும் விளக்கம் இது.
மஞ்சள் காமாலை குறித்த விளக்கம் ஆயுர்வேத மருத்துவத்தில் உண்டு. அன்னத்தின் மீது காமம் இல்லாமல் போவதைத்தான் காமாலை என்கிறது ஆயுர்வேதம். அதாவது, உணவின் மீது ஆசையின்றிப் போவது.

இதிலிருந்து பசியின்மை என்பதே மஞ்சள் காமாலைக்கான ஆரம்ப அறிகுறி என்பது தெரிய வரும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டால் முகம், கண், நகம் போன்றவை மஞ்சள் நிறத்துக்கு மாறும். இவையெல்லாம் அறிகுறிகள்.
இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் எளிதில் செரிமானம் அடையக்கூடிய உணவுகளைத்தான் உட்கொள்ள வேண்டும். அரிசிக் கஞ்சி, இட்லி சாப்பிடலாம். ஒவ்வொருவரின் உடல்வெப்ப நிலையும் மாறுபடும். அதற்கேற்ற உணவுகளை உண்பது அவசியம். எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதே நல்லது.

கீழாநெல்லி வேரை அரைத்து அதன் சாற்றை எடுத்து காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு உட்கொண்டு வரலாம். வாரத்தில் மூன்று நாள்கள் (மஞ்சள் காமாலையின் பாதிப்பைப் பொறுத்து) கால அளவுக்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும். உணவில் கறிவேப்பிலையைச் சேர்த்துக்கொள்வது நல்லது. மஞ்சள் காமாலையின் பாதிப்பு உடலிலிருந்து அகன்றுவிட்டால் கண், நகம், முகத்திலிருக்கும் மஞ்சள் நிறம் மாறியிருக்கும். சாப்பிடுவதில் ஆசை ஏற்படும்" என்கிறார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!