Published:Updated:

``தண்ணீரில் கழுவினாலும் வைரஸ் போகாது!" - பச்சைக் காய்கறிகள் குறித்து நிபுணர் கருத்து

பச்சையாகச் சாப்பிடுகிற பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் கிருமிகள் தங்கியிருக்கும். எனவே அவற்றை முறையாகக் கழுவ வேண்டியது அவசியம்.

ழக்கமாக கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய், தர்பூசணி உள்ளிட்ட குளிர்ச்சி தருகிற காய்கறிகளையும் பழ வகைகளையும் சாப்பிடுவோம். வெறுமனே நீரில் கழுவியோ, அல்லது தோலை உரித்தோ பச்சையாகவே சாப்பிடுவோம். ஆனால், அப்படி நாம் சாப்பிடுகிற முறை சரியல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

பழங்கள்
பழங்கள்

குறிப்பாக, தற்போது கோவிட் -19 தொற்று பரவி வருகிற சூழலில், இப்படிச் சாப்பிடும் முறையை அறவே தவிர்க்க வேண்டும் என்கின்றனர். இது குறித்து ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம் விநோத்திடம் பேசினோம்.

``வழக்கமாக நம்மில் பலர் சந்தைக்குப் போனாலே ருசி பார்ப்பதற்குச் சில காய்கறி, பழங்களை அப்படியே எடுத்துச் சாப்பிடுவது உண்டு. இனிமேல் அந்தப் பழக்கத்தை நாம் அறவே விட்டுவிட வேண்டும்.

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்
கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

தற்போது நோய்த்தொற்றுக் காலத்தில் கவனமாக இருந்துவிட்டு, பின்னாளில் மீண்டும் பழைய வழக்கத்துக்குத் திரும்பிவிடக் கூடாது. காரணம், பொதுவெளியில் விற்கிற காய்கறிகளில் ஏராளமான நோய்க்கிருமிகள் ஒட்டியிருக்கும். அவற்றைக் கழுவாமல், நம் கைகளையும் கழுவாமல் அப்படியே சாப்பிடும்போது கிருமித் தொற்றைத் தவிர்க்க முடியாது. எனவேதான் இதைக் காலத்துக்கும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காய்கறிகளையும் பழங்களையும் வாங்கி வந்துவிடுகிறோம். சூடாகச் சமைத்துச் சாப்பிடுகிறவற்றில் எவ்விதக் கிருமிகளும் மறைந்துவிடும். ஆனால், பச்சையாகச் சாப்பிடுகிற பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் கிருமிகள் தங்கியிருக்கும். எனவே அவற்றை முறையாகக் கழுவ வேண்டியது அவசியம்.

கை சுத்தம்
கை சுத்தம்

முறையாக என்று சொல்வது, வெறும் தண்ணீரில் கழுவுவதற்குப் பதிலாக வெந்நீரில் கழுவவேண்டும் என்பதே. அதுவும் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக் கழுவாமல், தண்ணீரை காய்கறிகளிலும் பழங்களிலும் ஊற்றிக் கழுவ வேண்டும். அப்போதுதான் கிருமிகள் நீங்கும். ஒருமுறை கழுவியதும் வெந்நீரை கீழே ஊற்றிவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மீண்டும் அந்த நீரைப் பயன்படுத்தக்கூடாது.

கீரைகளை வாங்கியதும் அவற்றை உப்பு, மஞ்சள் சேர்த்துக் கழுவுகிறார்கள். இவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. உப்பு மஞ்சள் கலந்த நீரில் கீரையை அலசிய பிறகு, இரண்டு மூன்று முறை நன்கு நீரில் அலசிய, கீரையைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்கிறபோது கீரையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

கீரை
கீரை

வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளையும் ஆப்பிள் போன்ற பழங்களையும் தோலுரித்துச் சாப்பிடுகின்றனர். இது முழுக்கவே தவறானது. தோலில்தான் நிறைய சத்துகள் நிரம்பியிருக்கும். தோலை உரித்துக் கீழே எறிவது, சத்துகளைத் தூக்கிப் போடுவதற்குச் சமம். ஆகவே தோலோடு அவற்றைக் கழுவி சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.

நீரும் நீராகாரங்களும் உடலுக்கு நல்லவை என்றாலும் காய்கறிகளையும் பழங்களையும் ஜூஸ் ஆக்கிப் பருகுவதை நிபுணர்கள் பரிந்துரைப்பதே இல்லை. அவற்றை அப்படியே சாப்பிடுவதில்தான் ஆரோக்கியம் இருக்கிறது. ஜூஸ் ஆக்கிவிடும்போது சத்துகள் குறை விடுகின்றன.

ஆரஞ்சு அண்டு மெலன் ஜூஸ்
ஆரஞ்சு அண்டு மெலன் ஜூஸ்

சிறிய குழந்தைகள் இவற்றைச் சாப்பிட அடம்பிடிக்கும்போது, அவர்களுக்கு ஜூஸாகத் தரலாம். ஆனால், வளர வளர ஜூஸாகப் பருகுவதைத் தவிர்த்து நேரடியாகச் சாப்பிடப் பழகவேண்டும். அப்படியே ஜூஸ் சாப்பிடத் தோன்றினாலும் கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்துகொள்வதுதான் சிறந்தது.

Vikatan

சராசரி மனிதன் தினமும் 5 கப் வரை காய்கறிகள் சாப்பிடவேண்டும். காய்கறிகளைப் பச்சையாகவோ வேகவைத்தோ பச்சடியாகவோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடக்கூடிய காய்கறிகளும் இருக்கின்றன. உதாரணத்திற்கு கேரட், தக்காளி, வெங்காயம், வாழைத்தண்டு, வெண்டைக்காய், முள்ளங்கி போன்றவை.

பச்சைக் காய்கறிகள்
பச்சைக் காய்கறிகள்

காய்கறிகளில் கத்திரிக்காய், கொத்தவரங்காய், வாழைப்பூ, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, பீர்க்கங்காய், புடலங்காய் போன்றவற்றை பச்சையாகச் சாப்பிடுவது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவேதான் இவற்றை சமைத்தே சாப்பிட்டுப் பழகியிருக்கிறோம்.

நீரிழிவு நோயாளிகள் மட்டும் மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்றவாறு இந்தக் காலங்களில் உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற எவரும் இந்தக் காய்கறிகளையும் பழங்களையும் தகுந்தமுறையில் சுத்தம் செய்து சாப்பிடலாம். இவற்றை அதிகாலையில் சாப்பிடுவது எல்லோருக்கும் சரிவராமல் போகலாம்.

சாலட்
சாலட்

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட மிட் மார்னிங் எனப்படுகிற நேரத்தில் இவற்றைச் சாப்பிடலாம். மாலையிலும் இரவிலும் இவற்றை எடுத்துக்கொள்ளலாம். சாலட்டாக உப்பு காரத்தோடு சேர்த்துச் சாப்பிடலாம். எதுவாக இருந்தாலும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம் என்பதையும் மனதில் வைக்க வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு