கட்டுரைகள்
Published:Updated:

வெல்கம் இட்லி!

இட்லி
பிரீமியம் ஸ்டோரி
News
இட்லி

இட்லியானது ஆவியில் வேகவைக்கப்படும் உணவு. ஆகவே, கெட்ட கொழுப்புச்சத்து எதுவும் கிடையாது.

‘‘என்னது... இன்னிக்கும் இட்லியா?’’ என்று காலையிலே உங்க முகம் ‘டல்’ ஆகிடுதா? பாரம்பர்ய உணவுத் தயாரிப்பாளரான `மண் வாசனை’ மேனகா சொல்றதைப் படிச்சுப் பாருங்க... டாலடிக்க ஆரம்பிச்சுடும்.

●இன்றைக்குச் சாதாரணமாகக் கிடைக்கும் இட்லி, அந்தக் காலத்தில் ஏழைகள் பலருக்கும் பெரிய உணவு. பண்டிகைகள், திருவிழாக்கள் போன்ற நேரங்களில் மட்டுமே வீட்டில் செய்து சாப்பிடுவார்கள்.

●‘ஊட்டச்சத்து நிறைந்த உயர்ந்த உணவு வகைகள்’ என்ற உலகச் சுகாதார நிறுவனப் பட்டியலில், இட்லிக்கு முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 30ஆம் தேதி, ‘இட்லி தினம்’ கொண்டாடப்படுகிறது.

வெல்கம் இட்லி!

● பண்டைய இலக்கியங்களில் இட்லி பற்றிய முதல் குறிப்பு கன்னட மொழியில் ‘வடராதனே’ எனும் நூலில் சிவகோட்டி ஆச்சாரியாரால் எழுதப்பட்டுள்ளது. கன்னட மக்கள் பயன்படுத்திய `இல்லாலிகே’ உணவைத்தான் `இட்லி’ என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள்.

●வரலாற்று ஆசிரியர் கே.டி. அச்சய்யா, `ஹிஸ்டாரிக்கல் டிக்‌ஷனரி ஆஃப் இந்தியா ஃபுட்’ என்கிற நூலில், இட்லியின் தாயகம் இந்தோனேசியா என்று குறிப்பிடுகிறார். இந்தோனேசியாவில் `கெட்லி’ (Kedli) என்று அழைக்கப்பட்டதே இட்லி என மருவியதாம்.

●10ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் குடியேறிய சௌராஷ்டிரர்கள் கொண்டுவந்த `இடாடா’ (Idada) என்பதே இட்லி என்றும் கூறப்படுகிறது. கி.பி.1250-க்குப் பிறகுதான் இந்தியாவில் இட்லி தயாரித்திருக்கிறார்கள். எனவே, அரேபிய வணிகர்களால்தான் சாத்தியமானது என்றும் வரலாற்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

●புளிக்கவைத்த மாவில் செய்வதை குஜராத்தில் `டோக்ளா’ என்றும், புளித்தமாவுடன் ஈஸ்ட், இனிப்பு சேர்த்துச் செய்வதை கேரளாவில் `வட்டையப்பம்’ என்றும் அழைக்கிறார்கள். இப்படி இட்லிக்குப் பல வரலாறு உண்டு. ஆனாலும், தென்னிந்தியாவில்தான் இட்லி பிரபலமாக இருக்கிறது.

இட்லி வகைகள்

ரவா இட்லி, தட்டு இட்லி, மினி இட்லி, வாழை இலை இட்லி, சிவப்பரிசி இட்லி, பாசிப்பயறு இட்லி, கம்பு இட்லி, கேழ்வரகு இட்லி, கோதுமை இட்லி, கொள்ளு இட்லி, சில்லி இட்லி என்று பல வகை இட்லிகள் உண்டு. உங்களுக்குப் பிடித்த மாதிரி குட்டி இட்லி, சூரியன் மற்றும் நட்சத்திரம் எனப் புதுப்புது வடிவங்களிலும் இட்லியைச் செய்துதரச்சொல்லி சாப்பிடலாம்.

வெல்கம் இட்லி!

சாப்பிடும் முறை

இட்லியைக் காலை மற்றும் இரவு உணவாகச் சாப்பிடுவது மிகவும் நல்லது. வேகவேகமாக விழுங்காமல் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். எந்த உணவாக இருந்தாலும் அப்படித்தான். அப்போதுதான் சாப்பிடும் உணவில் உமிழ்நீர் கலக்கும். உமிழ்நீரில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. அவை உணவுடன் கலந்து வயிற்றின் உள்ளே சென்று எளிதில் செரிமானம் அடைய உதவும்.

இப்போ சொல்லுங்க... இட்லியைக் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம்தானே!

நன்மைகள்

●ஒரு இட்லியில் சராசரியாக 65 கிராம் கலோரி, 2 கிராம் புரதம், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் சத்துகள் உள்ளன.

●வைட்டமின் டி, பொட்டாசியம், சோடியம், நார்ச்சத்துகள் ஆகியவையும் நிறைவாகக் காணப்படுகின்றன.

●இட்லியானது ஆவியில் வேகவைக்கப்படும் உணவு. ஆகவே, கெட்ட கொழுப்புச்சத்து எதுவும் கிடையாது.

●எளிதில் செரிமானமாகும் என்பதால் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படாது.