Published:Updated:

பட்டினியால் வாடும் நாடுகளில் இந்தியாவுக்கு என்ன இடம்? #VikatanInfographics

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பட்டினியால் வாடும் நாடுகளில் இந்தியாவுக்கு என்ன இடம்? #VikatanInfographics
பட்டினியால் வாடும் நாடுகளில் இந்தியாவுக்கு என்ன இடம்? #VikatanInfographics

வளர்ந்து வரும் உலக நாடுகளில் உள்ள பட்டினி விகிதத்தின் அடிப்படையில் புதிய அட்டவணையைச் சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வுக் கழகம் வெளியிட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்திய அரசின் இன்றியமையாத கடமைகளாக, குடிமக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலைப்புச் சட்டம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. அவையெல்லாவற்றையும்விட ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றைத் தன் நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டியது ஓர் அரசின் தலையாய கடமை.  

``உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு" என்பது வள்ளுவம். 

``இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது" என மத்திய அரசு சொல்லிக்கொண்டிருக்கும் அதே வேளையில், பசி மற்றும் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வரும் அவலநிலை நீடிக்கிறது. வளர்ந்து வரும் உலக நாடுகளில் உள்ள பட்டினி விகிதத்தின் அடிப்படையில் புதிய அட்டவணையை (Global Hunger Index 2018) சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வுக் கழகம் வெளியிட்டது. 

ஒரு தனி மனிதனுக்குக் கிடைக்க வேண்டிய மூன்று வேளை உணவு, உணவின் தரம், அதன் தன்மை முதலான அடிப்படைகளில் இந்த ஆய்வுகள் அமைகின்றன. 119 நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தப் பட்டியலில் இந்தியா 103-வது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியா பெற்றிருக்கும் பட்டினிக் குறியீட்டு அளவு 31.1. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்தியா 100 -வது இடத்தில் இருந்தது. மேலும் பட்டினி நிலையில் இந்தியா அபாயகரமான நிலையில் இருப்பதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

தெற்காசிய அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. இலங்கை, நேபாளம், பூடான் முதலான நாடுகளைவிட இந்தியா பின்தங்கியுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகம் என்றாலும், இது அவலத்திற்குரியதே.

ஊட்டச்சத்துள்ள உணவுத்தன்மையின் அடிப்படையில் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு உடைய மக்கள் தொகை, 2000-ல் 18.2 சதவிகிதத்திலிருந்து 2018-ல் 14.8 சதவிகிதம் குறைந்துள்ளதும், குழந்தைகளின் இறப்பு 9.2 சதவிகிதத்திலிருந்து 4.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளதும் நம்பிக்கை தரக்கூடிய தகவல்கள்.

எனினும், ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு நோய்த்தாக்கம் கொண்ட குழந்தைகள் எண்ணிக்கையைக் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, மிகவும் மோசம். இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் சதவிகிதம் 21 ஆகும். அதிலும், குறிப்பாக இந்தியாவின் வடமாநிலக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் . 

உத்தர பிரதேசம், பீகார் முதலான மாநிலங்களில் இந்த மோசமான நிலை நீடிக்கிறது. 2000-ல் 17.1 சதவிகிதமாக இருந்த நிலை உயர்ந்து 2005-ல் 20 சதவிகிதமாக உயர்ந்தது. தற்போது இது 21 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்நிலை இவ்வாறே நீடிக்குமானால் 2030-ம் ஆண்டுக்குள் வறுமையற்ற உலகம் என்ற இலட்சிய நோக்கை அடைவது கடினம் என ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச உணவுக் கழகமும் எச்சரிக்கின்றன. 

உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டதாகக் கூறிக்கொண்டு, உணவு உற்பத்தியின் பிரதான மூலங்களான விவசாய நிலங்களை நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கொடுக்கிறோம் என கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறது இந்திய அரசு. ஆடம்பரத் தேவைகள் மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தியிலும் விவசாயத்திலும் கைவைக்கின்றன. 

பட்டினி நிலை இவ்வாறிருக்க, உலக அளவில் அதிக உணவுப் பொருள்களை வீணாக்கும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்தியர்களாகிய நாமே! வசதி படைத்தோர் அறுசுவை உணவு உண்டு களித்திருக்க, வறுமையே நிலையாய் கொண்டு பசிப்பிணியால் மாந்தர் வாடும் நிலை கண்டு துடித்துப்போனார் வள்ளலார். நாட்டின் முன்னேற்றம் என்பது மக்களின் வளமையில்தான். நாம் அலட்சியமாய்த் தூக்கியெறியும் உணவு, யாரோ ஒருவரின் பசியைப் போக்கும் என்பதை இனியேனும் உணர்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு