Published:Updated:

கலர் காஜா ரோல், பனானா ரோல், பப்பட் ரோல்... குழந்தைகளின் ஃபேவரைட் ரோல் ரெசிப்பிகள்...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கலர் காஜா ரோல், பனானா ரோல், பப்பட் ரோல்... குழந்தைகளின் ஃபேவரைட் ரோல் ரெசிப்பிகள்...!
கலர் காஜா ரோல், பனானா ரோல், பப்பட் ரோல்... குழந்தைகளின் ஃபேவரைட் ரோல் ரெசிப்பிகள்...!

கலர் காஜா ரோல், பனானா ரோல், பப்பட் ரோல்... குழந்தைகளின் ஃபேவரைட் ரோல் ரெசிப்பிகள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குட்டீஸ் விரும்பும் ஸ்பெஷல் டிஷ் 'ரோல்'!  அந்த ரோலை எளிமையாக வீட்டிலிருந்தபடியே செய்வதற்கு கற்றுக் கொடுக்கிறார்  சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சுதா செல்வகுமார். "நடுவே டூத்பிக் அல்லது அலங்காரக் குச்சி அல்லது கிராம்பு குத்தி, ரோல் பிரிந்து வராமல் பரிமாற வேண்டும்” என்று டிப்ஸ் கொடுத்துவிட்டு கலர்ஃபுல் ரெசிப்பிகளை அளிக்கிறார்.

கலர் காஜா ரோல்

தேவையானவை

மைதா மாவு, சர்க்கரை - தலா ஒரு கப்

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

நெய் - சிறிதளவு

அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

கலர் சுகர் சேமியா ஸ்பிரிங்கிள்ஸ் - தேவையான அளவு

உப்பு - ஒரு சிட்டிகை

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

சிறிதளவு மைதா மாவுடன் தண்ணீர்விட்டு பேஸ்ட் போல கரைக்கவும். மீதமுள்ள மைதா மாவுடன் உப்பு, சிறிதளவு நெய்விட்டுப் பிசிறவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு மாவை எடுத்து பெரிய சப்பாத்தியாக இடவும். அதன் மீது அரிசி மாவு தூவி, பாய் போல சுருட்டவும் (அப்போதுதான் சுருள் மடிக்கும்போது ஒட்டாமல் வரும்). சுருளை முடிக்கும் இடத்தில் பிரியாமல் இருக்க மைதா பேஸ்ட் தடவி ஒட்டவும். இப்போது நீளமான உருளை கிடைக்கும். இதை இரண்டு இன்ச் அளவு துண்டுகளாக்கவும். ஒவ்வொரு துண்டிலும் சிறு அழுத்தம் தரவும். வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து மைதா மாவு துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். இதுவே காஜா.

அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பைச் சிறு தீயில் வைத்துக் கொதிக்கவிடவும். அதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து இரண்டு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சி இறக்கவும். பொரித்த காஜாக்களைச் சர்க்கரைப் பாகில் போட்டு சில நிமிடங்கள் கழித்து எடுக்கவும். பாகு பொரித்த சுருளில் ஒட்டிக்கொள்ளும். பாகில் இருந்து வெளியே எடுத்த உடனே கலர் சேமியா கலவையில் காஜாக்களைப் புரட்டி எடுக்கவும். சுவையான, வண்ணமயமான காஜா ரோல் தயார். 

குறிப்பு:

கலர் சேமியாவுக்குப் பதிலாகச் சீவிய நட்ஸ், குங்குமப்பூ பயன்படுத்தலாம்.

பனானா ரோல்

தேவையானவை

கோதுமை மாவு - ஒரு கப்

பெரிய மஞ்சள் வாழைப்பழம் (அ) பச்சை வாழைப்பழம் - 3 (தோல் நீக்கி, 2 இன்ச் துண்டுகளாக்கவும்)

விரும்பிய பழக்கூழ் (மாம்பழம், கிவி, சப்போட்டா) - தலா கால் கப்

பொடித்த பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன்

பாதாம் எசென்ஸ் - சிறிதளவு

சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

வெதுவெதுப்பான பால் - மாவு பிசையத் தேவையான அளவு

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

ஃப்ரெஷ் பேரீச்சைத் துண்டுகள் - தேவையான அளவு (அலங்கரிக்க)

செய்முறை:

கோதுமை மாவுடன் பொடித்த பாதாம், ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாதாம் எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு பால்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி சப்பாத்தியாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, தேய்த்த சப்பாத்திகளைப் போட்டு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். பிறகு சப்பாத்திகளை நீளவாக்கில் ரிப்பன்கள் போலத் துண்டுகளாக்கவும். ஒவ்வொரு சப்பாத்தி துண்டின் மீதும் மாம்பழக் கூழ், அடுத்து கிவி, அடுத்து சப்போட்டா பழக் கூழ் என வரிசையாகத் தடவவும். அதன் மீது ஒரு வாழைப்பழத் துண்டை வைத்து இறுக்கமாக ரோல் செய்யவும். பிறகு துண்டுகளை நிமிர்த்து வைத்து அவற்றின் மேல் ஃப்ரெஷ் பேரீச்சைத் துண்டுகளை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும். பாதாம் ஃப்ளேவருடன் சப்பாத்தியும், பழ ஃப்ளேவரும் சேர்ந்து இந்த ரோல் சுவைக்க அமிர்தமாக இருக்கும்.

குறிப்பு: சீஸன்களில் கிடைக்கும் பழங்களைக் கூழ் செய்யப் பயன்படுத்தலாம்.

முந்திரி சாக்கோ ரோல்

தேவையானவை

முந்திரி - அரை கிலோ

சர்க்கரை - கால் கிலோ

சாக்கோ சிப்ஸ் - 50 கிராம்

சாக்கோ ஸ்பிரெட் - 100 கிராம்

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

நெய் - ஒரு கப்

கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

முந்திரியை 4 - 5  மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டர் (அ) மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பைச் சிறு தீயில் வைத்துக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும், அதனுடன் சிறிதளவு நெய், அரைத்த முந்திரி விழுது சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். நடு நடுவே நெய் சேர்த்துக் கிளறவும். பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். 

இதை நெய் தடவிய தட்டு அல்லது பார்ச்மென்ட் பேப்பரில் கொட்டிப் பரப்பவும் (அதிகமாக இறுகிவிட்டால் ரோல் செய்ய வராது; ரொம்ப இளகலாகவும் இருக்கக் கூடாது). அதன் மேல் அரை இன்ச் உயரத்துக்குச் சாக்கோ ஸ்பிரெட் தடவவும். பிறகு பாய் போலச் சுருட்டவும். இந்த நீளமான முந்திரி சாக்கோ உருளையை ஒரு இன்ச் துண்டுகளாக்கவும். வெளிப்புறம் கண்டன்ஸ்டு மில்க் தடவி சாக்கோ சிப்ஸ் தூவி ஃப்ரிட்ஜில் பத்து நிமிடங்கள் வைத்து எடுத்துப் பரிமாறவும். முந்திரியும், சாக்லேட் சுவையும் சேர்ந்து ம்ம்ம்... யம்மி!

குறிப்பு:

முந்திரிக்குப் பதிலாக, பிஸ்தா அல்லது பாதாம் பயன்படுத்திச் செய்யலாம்.

பப்பட் ரோல் 

தேவையானவை

ஈர அப்பளம் - 6 (டிபார்ட்மென்ட் கடைகள் அல்லது பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்)

பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்

தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் - 50 கிராம்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

வேகவைத்து, தோல் உரித்து மசித்த உருளைக்கிழங்கு - கால் கப்

சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்

மைதா பேஸ்ட் - சிறிதளவு (ஒட்டுவதற்கு)

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சோள முத்துகளை மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி வெங்காயம், தக்காளி சாஸ், உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த சோளம், மசித்த உருளைக்கிழங்கு, மிளகுத்தூள், வெண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்கவும், அப்பளத்தின் மீது இந்த மசாலாவைத் தடவி, அதன் மேல் சில்லி ஃப்ளேக்ஸ் தூவி சுருட்டவும். ஓரங்களை மைதா பேஸ்ட்டால் ஒட்டவும். வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து அப்பள ரோல்களைப் போட்டுப் பொரித்தெடுத்து பரிமாறவும். பொரித்த உடனே சாப்பிட வேண்டும். இல்லையென்றால் நமுத்துவிடும்.

குறிப்பு:

அப்பளம் ஈரமாக இருந்தால்தான் சுருட்ட வரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு