
பட்டர் பன் செய்யுறது பெரிய வித்தையெல்லாம் இல்லை. அதேநேரம், கொஞ்சம் கவனமா பண்ணணும். இல்லேன்னா டேஸ்ட் மாறிடும்.
மதுரை என்றதும் மல்லிகைப்பூ, தூங்கா நகரம், எய்ம்ஸ் மருத்துவமனைச் செங்கல் எனப் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். கூடவே நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்கு சுவையான - காரசாரமான சைவ, அசைவ உணவுகளும் நம் ரீக்கால் லிஸ்ட்டில் மிஸ் ஆகாது. கரெக்ட்தானே?!
சூடான பருத்திப்பால், ஜில்லென்ற ஜிகர்தண்டா என சுவையான பானங்கள், திகட்டாத இனிப்பு உரப்பு நொறுக்குத் தீனிகள், வடை, அடை என தினுசு தினுசான பலகாரங்கள், பிளம் கேக் முதல் பிளாக் பாரஸ்ட் கேக் வரை பேக்கரி அயிட்டங்கள் என எதிலும் முத்திரை பதிப்பவர்கள் நம்ம மதுரைக்காரர்கள்..!

அந்த வகையில் மதுரை உணவு வரலாற்றில் முக்கியமானது பட்டர் பன்! எல்லா ஊரிலும்தான் பட்டர் பன் கிடைக்கிறது, மதுரையில் மட்டும் அப்படி என்ன சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம்..? மற்ற ஊர் பட்டர் பன்னைவிட இது ரொம்பவே ‘பெட்டர்' பன்னாக இருக்கும். அதற்குக் காரணம் இருக்கிறது, சொல்கிறேன்.
நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் நமக்குக் கொடுத்துவிட்டுச் சென்ற நல்ல விஷயங்களில் பிரட், பன் போன்ற மெல்லுணவுகள் முக்கியமானவை. வாங்கக் கூடிய விலையில் எல்லா இடங்களிலும் கிடைப்பவை. பன் ருசி அறியாதவர்களே நம் நாட்டில் இல்லை எனலாம்.

சரி, மதுரை ஸ்பெஷல் பட்டர் பன் மேட்டருக்கு வருவோம். மதுரையில், மாலை நேரம் வந்துவிட்டால் உணவுக் கடைகளிலிருந்து விதவிதமான வாசனைகளுக்கு நடுவே வெண்ணெய் உருகும் மணம் மூக்கைத் துளைக்க ஆரம்பிக்கும். அந்த வழியாகச் செல்வோரைச் சுண்டி இழுத்து, அந்த பட்டர் பன் கடைகள் முன்னால் கொண்டுபோய் நிறுத்தும்.
பெரிய டீக்கடைகள், ஹோட்டல்களில் பட்டர் பன் கிடைக்கும் என்றாலும் தெருவுக்கு ஒன்று என்ற கணக்கில் அமைந்திருக்கும் சிறிய பட்டர் பன் கடைகளுக்கென்று தனி வாடிக்கையாளர்கள் உண்டு.
அப்படி கஸ்டமர் செல்வாக்கு ஸ்ட்ராங்காக வைத்திருக்கும் கடைகளில் ஒன்றுதான் காமராஜர் சாலையில் முனி சாலை சிக்னல் அருகில் சோலை என்பவர் நடத்திவரும் பட்டர் பன் கடை.
பன் ரோஸ்ட் செய்துகொண்டிருந்த சோலையிடம் பேச்சுக் கொடுத்தோம்... ‘‘பட்டர் பன் செய்யுறது பெரிய வித்தையெல்லாம் இல்லை. அதேநேரம், கொஞ்சம் கவனமா பண்ணணும். இல்லேன்னா டேஸ்ட் மாறிடும். தரமான பன், வெண்ணெய் பயன்படுத்தணும். பழைய பன்னையோ, கலப்பட வெண்ணெயையோ பயன்படுத்தக் கூடாது. மெதுமெதுவென்ற பன் நடுவே வெட்டி உள்ளே வெண்ணெயைத் தடவி, அதில் சர்க்கரையைப் பரவ வைத்து, சூடான தோசைக்கல்லில் வெண்ணெயை விட்டு அதில் பன்னை வைத்து இரண்டு பக்கமும் திருப்பித் திருப்பி பதமாக வேக வைக்க வேண்டும். உள்ளே வைத்த வெண்ணெயும், சீனியும் உருகி பன்னோடு கலந்துவிடும். பொன்னிறமாக மாறியதும் உடனே எடுத்துடணும். விட்டா கருகிடும். கவனமா எடுத்து அதன் மேலே மீண்டும் வெண்ணெயைத் தடவி அதில் லேசா சீனியைத் தூவணும். அப்படியே சூடு குறையாமல் சாப்பிட்டுப் பாருங்க, அம்புட்டு ருசியா இருக்கும்'' என்று அவர் சொல்லும்போதே நமக்கு நாக்கில் எச்சில் ஊறிவிட்டது.

கடை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மக்கள் வந்து சாப்பிடுவதும், பார்சல் வாங்கிச் செல்வதுமாக இருந்தார்கள். நாமும் இரண்டு ஸ்பெஷல் பட்டர் பன்னை ஆர்டர் செய்து சூடு பறக்கச் சாப்பிட்டோம்...