Published:Updated:

மதுர ருசி: நாட்டுக்கோழி கிரேவி, மட்டன் கிரேவி, குடல் குழம்புடன் பன் பரோட்டா! அப்படி என்ன ஸ்பெஷல்?

பன் பரோட்டா
News
பன் பரோட்டா

மதுரையின் சுவை அடையாளங்களில் தனித்துவமானது இந்த பன் பரோட்டா. எங்கே கிடைக்கும்? இதில் என்ன ஸ்பெஷல்?

Published:Updated:

மதுர ருசி: நாட்டுக்கோழி கிரேவி, மட்டன் கிரேவி, குடல் குழம்புடன் பன் பரோட்டா! அப்படி என்ன ஸ்பெஷல்?

மதுரையின் சுவை அடையாளங்களில் தனித்துவமானது இந்த பன் பரோட்டா. எங்கே கிடைக்கும்? இதில் என்ன ஸ்பெஷல்?

பன் பரோட்டா
News
பன் பரோட்டா
பால் பன்னுக்கும் பட்டர் பன்னுக்கும் பலவகையான பரோட்டாக்களுக்கும் பிரபலமான மதுரையின் உணவு அடையாளங்களில் பன் பரோட்டா முக்கியமானது.

மைதா பரோட்டா, கோதுமை பரோட்டா, செட் பரோட்டா, முட்டை லாப்பா, சில்லி பரோட்டா, பனீர் பரோட்டா, வெஜ் பரோட்டா, எண்ணெய் பரோட்டாக்களை மதுரை மட்டுமல்லாமல் பல ஊர்களிலும் சாப்பிட்டிருப்போம். ஆனால், பன் பரோட்டாவுக்கு மதுரைதான் பேமஸான ஸ்பாட்!

பன் பரோட்டா
பன் பரோட்டா

பரோட்டாவைப் பல வகையாகச் செய்து பசி போக்கும் மதுரைக்காரர்கள் பன் பரோட்டா எனும் வடிவத்தை உருவாக்கி பரோட்டா பிரியர்களைப் பரவசப்படுத்தி வருகிறார்கள்.

பன் பரோட்டா என்றால் விருதுநகர் எண்ணெய் பரோட்டா போன்றது என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அது வேறு, இது வேறு என்பது ருசித்துப் பார்த்தவர்களுக்கே தெரியும்.

சிறப்பான பரோட்டாக்கடைகள் மதுரையில் அதிகம் இருந்தாலும் பன் பரோட்டாக் கடைகள் ஒரு சில மட்டுமே உள்ளன. அதில் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டுவது மதுரை ஆவின் பால் பண்ணை அருகில் அமைந்திருக்கும் 'மதுரை பன் பரோட்டாக்கடை'தான்.

நீண்ட காலமாக மதுரையில் செயல்பட்டுவரும் இக்கடைக்குச் செல்வது நல்ல அனுபவத்தைத் தரும். தற்போது அண்ணா நகரில் பெரிய ஹோட்டலாகவும் திறந்திருக்கிறார்கள்.

ஆவின் சிக்னலில் உள்ள 'மதுரை பன் பரோட்டா' கடையில் தினமும் மதியம் 2 மணிக்கு மாவு பிசையத் தொடங்குவதைப் பார்த்தாலே பிரமாண்டமாக இருக்கும்.

மதுரை பன் பரோட்டா
மதுரை பன் பரோட்டா

பெரிய பட்டறையில் மாவைக்கொட்டி அதில் சுத்தமான கடலை எண்ணெய், முட்டைகள், பால், நெய் இவற்றுடன் சிறிதளவு சர்க்கரை, உப்பு கலந்து தண்ணீர் ஊற்றிப் பிசையத் தொடங்குவார்கள். கையில் ஒட்டாத கெட்டியான இழுவைப் பதம் வரும் வரை பிசைந்து முடித்ததும் அவற்றைப் பொதி மூட்டைகளைப்போல உருவாக்கி வைக்கிறார்கள். நான்கு மணி நேரம் கழித்து அந்த மாவை சிறு உருண்டையாக்கி, நன்றாக வீசிப் பெரிதாக்குகிறார்கள். அதைத் தட்டாமல் சுற்றிய வடிவத்தில் வைக்கிறார்கள். வழக்கமான பரோட்டா இரண்டை ஒன்றாக்கினால் எப்படியிருக்குமோ அந்த சைஸில் தடிமனாக உள்ளது பன் பரோட்டாவுக்காகத் தயாரான இந்த உருண்டை!

கல்லில் எண்ணெய் கொஞ்சம் அதிகமாக விட்டு பரோட்டாவை வேக வைக்கிறார்கள். உப்பலாக பன்னைப் பொறிப்பதுபோல் திருப்பிப் போட்டுப் போட்டு, பொன்னிறமாக எடுக்கிறார்கள்.

சிறிது மொறு மொறு தன்மையுடன் உப்பலாக எடுத்த பரோட்டக்களை ரெண்டு தட்டு தட்டி நெகிழ வைக்கிறார்கள். அதை எடுத்து இலையில் சூடாகப் போட்டு நாட்டுக்கோழி கிரேவி, மட்டன் கிரேவி அல்லது குடல் குழம்புடன் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் சுவையின் வேறொரு பரிமாணத்துக்குச் சென்றுவிடுவோம். சேர்மானம் இல்லாமல் சும்மா சாப்பிட்டாலும் பன் பரோட்டா ருசிக்கு ஈடில்லை!

கருப்பணன்
கருப்பணன்
சாலையோரத்தில் அமைந்திருக்கும் 'மதுரை பன் பரோட்டா' கடைக்கு, மாலை நேரம் ஆனதும் மக்கள் வர ஆரம்பித்து விடுகிறார்கள்.

புதுச்சுவை பரோட்டாவை மதுரைக்கு அறிமுகப்படுத்திய இக் கடையைப்போல் மதுரையில் பல இடங்களில் பன் பரோட்டாக் கடைகள் வந்தாலும், ஆவின் சிக்னல் அருகில் இருக்கும் இந்த பன் பரோட்டாக் கடையே பிரத்யேகமான அடையாளமாக உள்ளது.

மதுரை பன் பரோட்டா கடை
மதுரை பன் பரோட்டா கடை

இங்கு பன் பரோட்டா மெயின் ஐயிட்டமாக இருந்தாலும் நாட்டுக்கோழி, மட்டன், மூளை ரோஸ்ட், குடல் கிரேவி, ஈரல் கிரேவி என்று மண் மனத்தோடு சைடு டிஷ்கள் பன் பரோட்டாவுக்கு இணையாக உள்ளன.

இப்போது இக்கடையைப் போலவே பல இடங்களிலும் பன் பரோட்டா கிடைக்கிறது.

"தரமான மைதா மாவு, சுத்தமான கடலை எண்ணெய், முட்டை, பசும்பால் கலந்து சுகாதாரமாக பன் பரோட்டா தயார் செய்கிறோம். இங்கு தயாரிக்கப்படும் கிரேவி, குழம்புகளில் செயற்கையான சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதில்லை. வீட்டுச் சமையல் முறையிலே தயாரிக்கிறோம். மற்ற பரோட்டாக்களை விட பன் பரோட்டோ எளிதில் ஜீரணமாகும்" என்கின்றனர் கடை நிர்வாகிகள்.

வாருங்கள் புதிய பரோட்டா சுவையை அனுபவிக்கலாம்!