Published:Updated:

மதுர ருசி: தயிர்சாதம் - பெப்பர் சிக்கன், குஸ்கா - காடை கிரேவி... இது மேலூர் கூரைக்கடை ஸ்பெஷல்!

மேலூர் கூரைக்கடை
News
மேலூர் கூரைக்கடை

தயிர்சாதம் - பெப்பர் சிக்கன், குஸ்கா - காடை கிரேவி, முட்டை லாப்பா- மட்டன் சுக்கா! - வித்தியாசமான ரெசிபியில் அசத்தும் மேலூர் கூரைக்கடை!

Published:Updated:

மதுர ருசி: தயிர்சாதம் - பெப்பர் சிக்கன், குஸ்கா - காடை கிரேவி... இது மேலூர் கூரைக்கடை ஸ்பெஷல்!

தயிர்சாதம் - பெப்பர் சிக்கன், குஸ்கா - காடை கிரேவி, முட்டை லாப்பா- மட்டன் சுக்கா! - வித்தியாசமான ரெசிபியில் அசத்தும் மேலூர் கூரைக்கடை!

மேலூர் கூரைக்கடை
News
மேலூர் கூரைக்கடை

மணமணக்கும் உணவுகள் மதுரை மாநகருக்குள் மட்டும்தான் கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். மதுரையை சுற்றியுள்ள உசிலம்பட்டி, திருமங்கலம், வடக்கம்பட்டி, கல்லுப்பட்டி, பேரையூர், மேலூர் என அனைத்து வட்டாரங்களிலும் அசத்துவார்கள்.

கூரைக்கடை ஸ்பெஷல்
கூரைக்கடை ஸ்பெஷல்

கலப்பைக்குப் பெயர் பெற்ற மேலூரில் இரைப்பைக்கு இதமாக ருசியான உணவளிக்கும் சைவ-அசைவ உணவகங்கள் பல உள்ளன.

அதில், உள்ளூர், வெளியூர் மக்கள் தேடி வந்து சாப்பிடும் அளவுக்கு வித்தியாசமான காம்பினேஷனில் உணவுகளை சுவையுடன் கொடுத்து வருகிறது 'கூரைக்கடை!'

கக்கன்ஜி சிலையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றால் 'கூரைக்கடை'யை அடைந்துவிடலாம்.

தென்னங்கீற்று வேய்ந்த கூரையுடன் கல்யாண வீட்டு பந்திப் பந்தல் போல காட்சி தரும் கூரைக்கடை, காலையில் தொடங்கி மதியத்தில் களைகட்ட ஆரம்பிக்கிறது.

கூரைக்கடை ஸ்பெஷல் சிக்கன்
கூரைக்கடை ஸ்பெஷல் சிக்கன்

சோறு - குழம்புடன் சாப்பாட்டையோ, இட்லி, தோசை போன்ற சிற்றுண்டியையோ எதிர்பார்த்து இங்கு வரக்கூடாது. அதைவிட அமிர்தமான சுவையுடன் தயிர் சாதம், பரோட்டா, குஸ்கா, முட்டை குஸ்கா, முட்டை லாப்பா, கலக்கி, காடை கிரேவி, மட்டன் சுக்கா, பெப்பர் சிக்கன், தலைக்கறி, ஆட்டுக்கால் பாயா என்று அதகளம் பண்ணுகிறார்கள்.

அதிலும் இவர்களின் தயிர் சாதம் ரொம்ப விசேஷம். தயிர்சாதம் வாங்க வரும் கூட்டத்தால் உடனே காலியாகிவிடுகிறது. தயிர் சாதத்துக்குத் தொட்டுக்க தக்காளி தொக்கு கொடுக்கிறார்கள். அதன் ருசிக்கு இணையே இல்லை. அது மட்டுமல்லாமல், தயிர் சாதத்தை, பெப்பர் சிக்கனோடு சாப்பிட பெரும் கூட்டமே இங்கு வருகிறது.

ப்ளைன் பிரியாணி போன்ற சுவையுடன் குஸ்கா உள்ளது. அதையே முட்டையுடன் சில சேர்மானாங்களைக் கலந்து முட்டை குஸ்காவாக சுவைக்கூட்டி ஸ்பெஷலாக வழங்குகிறார்கள்.

மேலூர் கூரைக்கடை
மேலூர் கூரைக்கடை

சாப்பிட வருகிறவர்களை வீட்டு விருந்தாளி போல விழுந்து விழுந்து கவனிப்பது இந்த உணவகத்தின் சிறப்பு.

சைட் டிஷ்களை ஃப்ரை பண்ண ஒரு மாஸ்டர், பரோட்டாவுக்கு ஒரு மாஸ்டர் என ஒருபக்கம் கால்பந்து விளையாட்டு வீரர்கள் போல ஊழியர்கள் ஓடியாடி வருகிறவர்களைக் கவனிக்கிறார்கள்.

இக்கடையின் சுவை, கவனிப்பு தெரிந்து வெளியூர் மக்கள் கார்களில் வருகிறார்கள். இப்பகுதி மக்களும் குடும்பதுடன் வருகிறார்கள். இப்பகுதிக்கு சினிமா சூட்டிங் வருகிறவர்களுக்கு பிடித்தமான கடையாக இது உள்ளது.

காடை கிரேவி
காடை கிரேவி

கடை உரிமையாளர் மைதீன் பேசுகையில், "மேலூர் பஸ் ஸ்டான்டுல இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துல இருந்தாலும் இம்புட்டு கூட்டம் தேடி வருவது சந்தோஷமா இருக்குது.

எந்தவித பாக்கெட் மசாலாக்கள் போடாமலும், வீட்டுப் பக்குவத்துல நியாயமான விலையில், வருகிற மக்களுக்கு சுவையான உணவுகளை மன நிறைவோடு வழங்குகிறோம்.

இறைவனுக்குப் பயந்து இத்தொழிலை செய்றோம். வயித்துக்கு திருப்தியான உணவு அளிக்கும் தொழிலும் ஒரு சேவைதான்.

கூரைக்கடை
கூரைக்கடை

இங்க சாப்பிட வருகிற கஸ்டமர்கள் எல்லா தரப்பிலும் இருக்காங்க. எல்லோரையும் ஒரே மாதிரிதான் பார்ப்போம். சினிமாக்காரங்க வந்தாலும் வரிசைப்படிதான் சாப்பிட வரணும்.

அதனாலதான் மக்கள் தேடி வராங்க. அது மட்டுமில்லாமல் அதிகபட்சம் 120 ரூபாய் இருந்தா போதும், நம்ம கடையில திருப்தியா சாப்பிட்டுப் போகலாம்.

கூரைக்கடை டீம்
கூரைக்கடை டீம்
மைதீன்
மைதீன்

எல்லா ஹோட்டல்லயும் பத்தோடு ஒண்ணா இருக்குற தயிர்சாதம், எங்க கடையில ஸ்பெஷல் அயிட்டமா இருக்குறது ரொம்ப பெருமையா இருக்கு. அதுபோல சின்ன குழந்தைகளும் சாப்பிடுற வகையில ரொம்ப மிருதுவா பரோட்டா போடுறோம்.

குடும்பத்தோடு வந்து சாப்பிட ஏற்ற கடையா மாறியிருக்கு. பெரிய ஹோட்டல்ல ஆயிரம் ரூபாய் ஆகிற செலவை எங்க கடையில ஐநூறுக்குள் முடிச்சிக்கலாம்" என மனநிறைவுடன் முடிக்கிறார் சம்சுதீன்.

மேலூர் சென்றால் இந்தக் கடை மெனுவை ஒரு பிடி பிடித்துவிட்டு வாருங்கள் மக்களே!