குழந்தைக்கு தாய்ப்பால் போல வேறு எந்த பாலும் எப்படி ஈடாகாதோ, அதுபோல் மதுரையில் கிடைக்கும் பருத்திப்பால் போல வேறு எந்த ஊரிலும் சுவையாகக் கிடைக்காது என்கிறார்கள் மதுரைக்காரர்கள்.

இது மிகையில்லை, வெரைட்டியான உணவு தேடி ஊர் சுற்றும் சுவைப்பிரியர்களுக்கு இது நன்கு தெரியும்.
தமிழகத்தில் பல ஊர்களில் பருத்திப்பால் கிடைக்கிறது. ஆனால், பருத்திப்பாலை மட்டும் பிரதான தொழிலாகக் கொண்டு ரெண்டு, மூன்று தலைமுறையாக கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள் இங்கு அதிகம்.
நேரத்துக்கு ஏற்றார்போல் சுவையாக உண்பதில் மதுரை மக்களுக்கு ஈடில்லை. சூடாக அருந்த டீ, காபி, சுக்குமல்லி காபி, மசாலாப்பால், சூப் வகைகள் ஒருபக்கமென்றால், குளிர்ச்சியாக சாப்பிட கூழ், சர்பத், ஜிகர்தண்டா, இளநீர் சர்பத், நுங்கு சர்பத், தர்ப்பூசணி ஜூஸ் என ஏகப்பட்டதை உருவாக்கி வைத்துள்ளார்கள்.

இவை இரண்டிலும் சேராத தனி அயிட்டமாக பருத்திப்பால் உள்ளது. நல்ல வெயிலானாலும் பெரு மழையானாலும் அதற்கு ஏற்ற பானமாகவும், மருந்தாகவும் விருந்தாகவும் பலன் தரக்கூடியது பருத்திப்பால்.
எந்த உணவானாலும் அதை அனுபவித்து ஆத்மார்த்தமாக ரசனையோடு செய்வதில் மதுரைக்காரர்களை அடித்துக்கொள்ள முடியாது.
அதனால்தான் மற்ற ஊர்களிலும் கிடைக்கும் சைவ, அசைவ உணவுகளை பல விஷயங்களைச் சேர்த்து கூடுதல் சுவையாக்கி விடுகிறார்கள்.
காளவாசல், பழங்காநத்தம், வில்லாபுரம், செல்லூர், கோரிப்பாளையம், முனிச்சாலை பகுதிகளில் காலையிலயே பருத்திப்பால் கடைகள் பட்டய கிளப்ப ஆரம்பித்து விடுகின்றன. கடைக்கு வர சிரமப்படுபவர்களுக்கு தள்ளுவண்டி மூலம் சூடான சுவையான பருத்திப்பால் வந்துவிடுகிறது. பருத்திப்பால் கடைகளில் எப்போதும் மக்கள் மொய்க்கிறார்கள்.

அதிலும், தொழிலாளர்கள் நிறைந்த முனிச்சாலை சந்திப்பில் உள்ள திருமலை மடைகருப்பு சாமி பருத்திப்பால் கடை ரொம்ப பேமஸ். சுக்கு, திப்பிலி, ஏலக்காயுடன் சேர்ந்த கருப்பட்டி வாசம் அந்தப் பக்கம் செல்வோரை இழுத்து கடைக்கு வரவழைக்கும்.
90 வருடங்களாக இதே இடத்தில் பருத்திப்பால் விற்பனை செய்து வருவது ஆச்சரியமான விஷயம். செய்யும் தொழிலின் மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் கால மாற்றத்தில் வேறு தொழிலுக்கு மாறாமல் பாரம்பரியமான முறையில் பருத்திப்பாலை விற்பனை செய்து வருகிறார்கள்.
கடையில் பயன்படுத்தும் பித்தளை, செம்பு பாத்திரங்களே பருத்திப்பாலின் சுவையை கூட்டி விடுகின்றன. இவ்வளவு விலைவாசி ஏற்றத்திலும் ஒரு பருத்திப்பாலின் விலை 15 முதல் 20 ரூபாய்க்கு இங்கு கிடைக்கிறது.
"இது உணவு மட்டுமல்லீங்க. மருந்தும் கூட. உடல் சோர்வை நீக்குற உற்சாக பானம். எங்க அப்பா காலத்துல ஆரம்பிச்ச தொழில். இப்ப என்ன தொடர்ந்து மகனும் வந்துட்டாப்ல.

இந்தத் தொழிலை விடாமல் அவ்வளவு ஆசையா விரும்பி செய்யுறோம். அன்னைக்கி சின்ன புள்ளையா இருக்கும்போது பருத்திப் பால் குடிச்ச ஆளுங்க இப்ப 60, 70 வயசாகியும் எங்கள தேடி வராங்க. அதுதான் எங்களோட பெருமை. காரணம், இந்தத் தொழிலை அவ்வளவு சரியா செய்யுறோம். கருப்பட்டி விலை ஏறுனாலும், சீனியை சேர்த்ததில்லை. விலையும் கூட்டினதில்லை. அதுபோல பருத்திப்பால்ல போடுற எந்தப் பொருளையும் குறைக்கிறதில்லை. மலிவா கிடைக்கிற சில பொருள்களோட எசென்ஸ் சேர்த்து சிலர் பருத்திப்பால் விக்கிறாங்க. அப்படியெல்லாம் நாங்க பண்றதே இல்லை.
நயமான பருத்தி விதை வாங்கி, அதில் பக்குவமா பாலெடுத்து, அதில் கொஞ்சம் பச்சரிசியை அரைச்சு சேர்த்து கலப்படமில்லாத பனங்கருப்பட்டியும் கலந்து தேங்காய் துருவலும் போட்டு ஏலக்காயும், சுக்கும், திப்பிலியும் பொடி பண்ணி கலந்து கொடுப்போம். கொதிக்க கொதிக்க பருத்திப்பாலை ஊதி ஊதி குடிக்கிறதுலதான் அவ்வளவு ருசி. நல்ல பொருளை கொடுக்குறோம்கிற சந்தோசம் எங்களுக்கு" என்கிறார் கடை உரிமையாளர் பெரியவர் சந்தானம்.

இதேபோன்று ஆத்மார்த்தமாக பருத்திப்பால் தயாரித்து விற்பவர்கள் மதுரையில் அதிகம் உள்ளார்கள்.
பருத்தி மில்லுக்கு வேண்டுமானால் கோவை பேமஸாக இருக்கலாம். ருசியான பருத்திப்பாலுக்கு மதுரைதாம்ப்பு!