
என் சமையலறையில்...

கொரோனா லாக் டெளனால் காய்கறிகள் மற்றும் மளிகைச் சாமான்கள் போதிய அளவுக்குக் கிடைக்கவில்லையா? கவலையை விடுங்கள்... இருப்பதை வைத்து விதவிதமாகச் சமைப்பது எப்படி என்பது குறித்த மெனுராணி செல்லத்தின் சூப்பர் ஆலோசனைகள் உங்களுக்காக...

வெள்ளைக் கொண்டைக் கடலை நிறைய ஸ்டாக் இருக்கிறதா? அதை ஊறவைத்து வத்தக் குழம்பு அல்லது காரக்குழம்பில் சேருங்கள். அத்தனை ருசியாக இருக்கும்.

சாதம் மீந்துவிட்டதா? அந்த சாதத்தை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் வெந்நீர் ஊற்றி மைய அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் ஊறவைத்த அரிசியை மைய அரைத்து அதனுடன் கொஞ்சம் வறுத்த ரவை மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதை அரைத்து வைத்திருக்கும் சாதத்துடன் நன்கு கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.

எண்ணெய் குறைவாக இருக்கிறதே என்று கவலைப்பட வேண்டாம். எப்போதும் வாழைக் காய் ரோஸ்ட், உருளைக்கிழங்கு ரோஸ்ட்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வாழைக்காய் பொடிமாஸ், உருளைக்கிழங்கு பொடிமாஸ் போன்ற எண்ணெய் அதிகம் தேவைப்படாத தொடுகறி களைச் செய்யலாமே.

மோர் புளித்துவிட்டதா?
மோர்க்கூழ், மோர்க் களி, மோர்க்குழம்பு என்று விதவிதமாகச் செய்யலாம்.

ரசப்பொடி இல்லையே என்ற கவலை வேண்டாம். எலுமிச்சை ரசம், சீரக ரசம், வேப்பம்பூ ரசம் என்று ரசப்பொடி இல்லாமலேயே ரசம் செய்யலாம். பருப்பு போடாமல், ரசப்பொடி இல்லாமல் சீரக ரசம் செய்யலாம். புளியே இல்லாமல் எலுமிச்சை ரசம் செய்யலாம் அல்லது அவ்வப்போது வறுத்துப் பொடித்து ரசம் செய்யலாம்.
சாம்பார் பொடி தீர்ந்துவிட்டதா? கவலையை விடுங்கள். மிளகாய்த் தூள் இருந்தால் போதும். அதை வைத்துக் காரக்குழம்பு செய்து விடுங்கள்.

காய்கறிகள் வைத்து ரோஸ்ட் செய்யும்போது மிளகாய்ப் பொடிக்குப் பதிலாக ரசப்பொடியை மேலே தூவினால் வாசனையாக இருக்கும். ரசப்பொடியில் தனியா, மிளகு, சீரகம் எல்லாம் இருப்பதால் காரமும் வாசனையும் நன்றாக இருக்கும்.
பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்தும் ரோஸ்ட் செய்யலாம்.

ஒரு வாரத்துக்கு மொத்தமாகக் காய் வாங்கு கிறீர்களா? சேனை, சேப்பங் கிழங்கு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை வாரத்தின் கடைசி இரண்டு மூன்று நாள்களுக்கு முன்பும், கோவைக்காய், வாழைக்காய் ஆகியவை எளிதில் பழுத்து விடும் என்பதால் முதலிலும் சமைக்கலாம். அடுத்து பீன்ஸ், கேரட் போன்றவற்றை சமைக்கலாம்.
எப்போது காய்கறிகள் வாங்கினாலும், நிறைய இஞ்சி, பச்சை மிளகாய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சட்னி, உப்புமா போன்றவை செய்ய மிகவும் கைகொடுக்கும்.

தக்காளி கிலோ பத்து ரூபாய் வரைக்கும் கிடைக்கிறது. எனவே நிறையத் தக்காளியை வாங்கி தொக்கு செய்து வைத்துக் கொண்டால், தக்காளி சாஸ் இல்லையே என்ற கவலை இல்லாமல் சாண்ட்விச், இட்லி, தோசை, தயிர் சாதம் போன்ற எல்லாவற்றுக்கும் தொட்டுச் சாப்பிடலாம்.

பிரெட்டை வைத்து சாண்ட்விச் மட்டுமே செய்ய முடியும் என்பதில்லை.
பிரெட்டை துண்டுகளாக நறுக்கி அதில் மைதா, உப்பு, தயிர், சோடா மாவு சேர்த்துப் பிசைந்து பட்டூரா செய்யலாம்.
கால் கிலோ பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, ஒரு கைப்பிடி காய்ந்த மிளகாய் போன்றவற்றுடன் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் வினிகர், சோயா சாஸ் போன்றவற்றைக் கலந்து வைத்துக்கொண்டால் சில்லி சாஸ் மற்றும் தக்காளி சாஸுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.

சாம்பார், குழம்பு என்றுதான் சமையல் இருக்க வேண்டுமா?
வாரம் ஒருநாள் கறிவேப்பிலைத் துவையல், கொத்தமல்லித் துவையல், பீர்க்கங்காய்த் துவையல் என்று ஏதேனும் ஒரு துவையலை செய்யுங்கள். சாதத்துடன் இதைப் பிசைந்து துவையல் சாதமாக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

ஊறுகாய் இல்லையே என்ற கவலை வேண்டாம். பச்சை மிளகாய், இஞ்சியை நீளமாக நறுக்கிக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயம், வெந்தயம் போன்றவற்றை தாளித்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அதில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின்னர் அத்துடன் புளிக்கரைசல் மற்றும் தேவையான உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கி அதில் சிறிது வெல்லம் சேர்த்தால் டேஸ்ட்டி ஊறுகாய் ரெடி.
இதை இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

கடையிலிருந்து வாங்கி வைத்த பாகற்காயை அப்படியே வைத்தால், அவை சீக்கிரம் பழுத்துவிடும்.
பாகற்காயை இரண்டு மூன்றாக வெட்டி ஒரு கவரில் போட்டுவைத்தால் சீக்கிரம் பழுக்காது.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு புரதம் மிக அவசியம். பருப்பு சாதம், தால் என்று அவர் களுக்குச் செய்து கொடுத்து போர் அடிக்கிறதா? கவலை வேண்டாம். முளைகட்டிய காராமணி, பச்சைப்பயிறு போன்றவற்றை சுண்டல் செய்து கொடுக்கலாம். அவற்றை கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவும் கொடுக்கலாம்.