கிறங்க வைக்கும் கீரை புலாவ்

பாலக்கீரை புலாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தேவையானவை: பாசுமதி அரிசி சாதம் - 2 கப், வேகவைத்த கேரட், பட்டாணி, மக்காச்சோளம் (சேர்த்து) ஒரு கப், நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப், மிளகாய்த்தூள் - சிறிதளவு, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பூண்டு - 8 பற்கள், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), உடைத்த முந்திரி, சீரகம், நெய் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு... முந்திரியை வறுத்து, சீரகம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கீரையைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், பட்டாணி, மக்காச்சோளம், கேரட் சேர்த்து வதக்கி, சாதத்தை சேர்த்து முள்கரண்டியால் கிளறவும். கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.
- எஸ்.நளினி சுந்தரராஜன், பள்ளிக்கரணை

சாக்லேட் மேக்ரோனி
தேவையானவை: மேக்ரோனி - 100 கிராம் (வேகவைக்கவும்), மில்க்மெய்ட் - 50 கிராம், நெய்யில் பொரித்த பிரெட் துண்டுகள் - அரை கப், சாக்லேட் துருவல் அல்லது சாஸ் - 4 டீஸ்பூன், வறுத்த முந்திரி - திராட்சை - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வேகவைத்த மேக்ரோனியை வடிகட்டி கிண்ணத்தில் போடவும். அதனுடன் மில்க்மெய்ட் சேர்த்துக் கிளறவும். அதன் மேல் நெய்யில் பொரித்த பிரெட் துண்டுகள் மற்றும் வறுத்த முந்திரி - திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மேலே சாக்லேட் துருவல் (அ) சாஸை சீராக சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால் நறுக்கிய பழ வகைகள், டூட்டி ஃப்ரூட்டியும் சேர்க்கலாம்.
- அமிர்த சுதா, சென்னை-24