வெள்ளை பூசணிக்காயை துருவி கொஞ்சம் உப்பு சேர்த்து, தேவையான அளவு இஞ்சி, பச்சை

மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து... கறிவேப்பிலை, கடுகு தாளித்து தயிரில் கலந்து, தயிர்ப்பச்சடியாக செய்து சாப்பிட்டால், மிகவும் ருசியாக இருக்கும். இது ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், தலைசுற்றலை கட்டுப்படுத்தும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- அ.சித்ரா, காஞ்சிபுரம்

கறிவேப்பிலை காய்ந்து போய் மிகுதியாக இருந்தால், அதை தூக்கிப்போடாமல், சீயக்காய் அரைக்கும்போது சேர்த்து அரைத்துப் பயன்படுத் தினால், தலை முடி கருகருவென இருக்கும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி

நேரம் கெட்ட நேரத்தில் கொட்டாவி வந்தாலோ, சோர்வாக உணர்ந்தாலோ... சில பேரீச்சம்பழங்களைச் சாப்பிட்டால், புத்துணர்ச்சி ஏற்படும்.
- பிரபா டாக்கர், ஹைதராபாத்

பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி அதில் பால் சிறிதளவு விட்டு அரைத்து, தேன் கலந்து சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொண்டால் சுவையாக இருக்கும்.
- வி.இராமலக்ஷ்மி, திருநெல்வேலி

காய்ச்சாத பாலில் கடலை மாவைக் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவி வந்தால், நல்ல பளபளப்பு கிடைக்கும்.
- அய்யனம்மை பரமசிவன், புளியங்குடி

கொய்யா இலைகளை மை போல் அரைத்து தீக்காயங்களினால் ஏற்படும் தழும்புகள் மீது பூசி வந்தால், நாளடைவில் தழும்புகள் மறைந்துவிடும்.
- அனிதா ராமச்சந்திரன், பெங்களூரு

சமையல் செய்யும்போது, கொதிக்கும் எண்ணெய் பட்டால், தாமதம் செய்யாமல் அந்தப் பகுதியில், அரிசி மாவு அல்லது வேறுதானிய மாவை தடவியோ, பூசியோ விட்டால்... தீக்காயம் நீர் கோத்துப் புண்ணாகாமல், அமுங்கிவிடும்; எரிச்சல் ஏற்படாது.
- அ.மணிமேகலை, மதுரை

கேரட், பீட்ரூட் வாடிப் போனால், நறுக்குவது சிரமமாக இருக்கும். அவற்றை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால், ஃப்ரெஷ் ஆகிவிடும்; நறுக்கவும் எளிதாக இருக்கும்.

- கீதா ஹரிஹரன், கேரளா
கோவைக்காய் இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி, அடிபட்ட வீக்கம் மற்றும் மூட்டில் ஏற்படும் வீக்கம் உள்ள இடத்தில் வைத்துக் கட்டினால், வீக்கங்கள் குறைந்துவிடும்.

- சோபியா மனோ, தேவகோட்டை
வாழைப்பூவைப் பொடிப் பொடியாக நறுக்கி, அத்துடன் முருங்கைக் கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால், குடற்புண் குணமாகும்.
- சீதாலக்ஷ்மி, கேரளா
கத்தியைச் சூடாக்கி பிரெட்டை வெட்டினால்... பிசிறு இல்லாமல், விரும்பியபடி வெட்டலாம்.

- ஜே.பானு, கடலூர்