
சத்துமாவு கஞ்சிக்கு அடுப்பில் கொதிக்க வைக்கும் போது சில சமயம் கட்டி தட்டிவிடும். இதைத் தவிர்க்க, முதலில் தண்ணீரில் மாவைப் போட்டு நன்றாகக் கரைத்து அதன் பின் அடுப்பில் வைத்து காய்ச்சினால்... கட்டிதட்டாது.
- பி.சந்திரகலா, பெரம்பூர்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால், தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமல் தடுக்கும்.
- ம.நிவேதா, நாகப்பட்டினம்

ஒரு பங்கு புழுங்கலரிசி, கால் பங்கு பச்சரிசி, கால் பங்கு ஜவ்வரிசி மூன்றையும் ஊறவைத்து, ஒரு பிடி பழைய சாதம், கொஞ்சம் தேங்காய்ப்பால் சேர்த்து தளர அரைத்து ஆப்பம் செய்தால்... சுவை அள்ளும் (உளுந்து தேவையில்லை).
- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

வீட்டில் வாழைப்பழம், மாதுளை, ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு என நிறைய சேர்ந்து விட்டால், கவலையே வேண்டாம். எல்லா பழங்களையும் நறுக்கி அதனுடன் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, கல்கண்டு, தேன், சர்க்கரை சேர்த்து ஃப்ரூட் மிக்ஸ் செய்யலாம். இதை குட்டீஸ் மிகவும் விரும்புவார்கள்.
- ஆர்.ஹேமமாலினி, மணப்பாறை

தக்காளிப்பழ சாற்றுடன், தயிர் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடத்துக்குப் பிறகு முகம் கழுவிவந்தால்... முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறையும்.
- அ.மணிமேகலை, மதுரை

பாயசம் சற்று நீர்த்துப் போய்விட்டால், கவலை வேண்டாம். அதில் ஒரு வாழைப்பழத்தைப் பிசைந்து போட்டு, கொஞ்சம் தேன் அல்லது மில்க்மெய்ட் சேர்த்துக் கலந்தால்... சுவை மிகுந்த பாயசம் ‘ஹாய்’ சொல்லும்.
- எஸ்.மதிமலர், சூளைமேட

கோடை முடியும் வரை, கேழ்வரகு கூழை தினமும் ஒருவேளை குடித்தால், கோடை உபாதைகள் பெரும்பாலானவற்றைத் தவிர்த்துவிடலாம்.
- நா.பாப்பா நாராயணன், பாளையங்கோட்டை

கோடையில் வேர்க்குரு பெண்களைப் பாடாய்ப்படுத்தும். வேப்பிலை, மஞ்சள் மற்றும் சந்தனத்தை மையாக அரைத்துப் பூசினால், வேர்க்குரு உதிர்ந்துவிடும்.
- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு

அரிவாள்மனை, தேங்காய்த் துருவி போன்றவற்றில் துரு ஏறினால், அவற்றின் மீது வெங்காயத்தைத் தேய்த்தால், துரு மறைந்துவிடும்.
- லெட்சுமி மணிவண்ணன், சிக்கல்