தன்னம்பிக்கை
Published:Updated:

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகிகள் கைமணம்!

அள்ளி சுவைக்கத் தூண்டுதே... அமர்க்களமான புட்டு!ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200

தக்காளி புட்டு

வாசகிகள் கைமணம்!

தேவையானவை: ரவை - ஒரு கப், நன்கு பழுத்த தக்காளி - 3, தேங்காய்த் துருவல் - கால் கப், சர்க்கரை - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 6 (துண்டுகளாக நறுக்கி வறுக்கவும்), உப்பு - ஒரு சிட்டிகை. 

செய்முறை: ரவையை நெய் விட்டு சிவக்க வறுக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடாக்கி, கொதிக்கும்போது தக்காளியை காம்புப் பகுதி கீழே இருக்கும்படி வைத்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை நிறுத்தவும். ஆறியதும் தக்காளியின் தோலை நீக்கி மிக்ஸியில் மசித்துக்கொள்ளவும். ரவையுடன் ஒரு சிட்டிகை உப்பு, தக்காளி கூழ், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து இட்லித் தட்டில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து உதிர்த்துக்கொள்ளவும். (சிறு சிறு கட்டிகள் இருந்தால் ஆறிய பின் மிக்ஸியில் ஒரு சுற்று ஓடவிட்டால் உதிரி உதிரியாகிவிடும்). சர்க்கரையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இளம்பாகு தயார் செய்து, ரவைக் கலவையுடன் சேர்க்கவும். இதனுடன் முந்திரி, ஏலக்காய்த்தூள்  தேங்காய்த் துருவல் சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி

மல்டி மாவு இனிப்பு அடை!

வாசகிகள் கைமணம்!

தேவையானவை: கம்பு மாவு, கோதுமை மாவு - தலா ஒரு கப், மாவு ரவை (ரவையை சலித்த பிறகு கீழே வரும் மாவு)  - அரை கப், தேங்காய்த் துருவல் - அரை கப், பொடித்த வெல்லம் - 2 கப், ஏலக்காய்த்தூள், பொடித்த முந்திரி - சிறிதளவு, எண்ணெய் - சுட்டெடுக்க தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டவும். மற்ற பொருட்கள் அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) வெல்ல நீரில் சேர்த்துப் பிசையவும். தோசைக் கல்லை காயவைத்து, எண்ணெய் விட்டு, மாவை அடைகளாகத் தட்டிப் போட்டு, இருபுறமும் வேகவிட்டு  எடுக்கவும்.

- தாரா மணிவண்ணன், கோவை

பொரித்த கார்ன் கொழுக்கட்டை

வாசகிகள் கைமணம்!

தேவையானவை: பேபி கார்ன் - 3, உருளைக்கிழங்கு - கால் கிலோ, நறுக்கிய வெங்காயம் - அரை கப், நறுக்கிய பச்சை மிளகாய், தனி மிளகாய்த்தூள், பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், சோள மாவு - ஒன்றரை டீஸ்பூன், ரஸ்க்தூள் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொதி நீரில் பேபிகார்னை போட்டு 2 நிமிடம் மூடி வைத்து இறக்கி எடுத்து, நீளவாக்கில் பாதியாக நறுக்கவும். மிளகாய்த்தூள், பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, கொஞ்சம் உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து பேபிகார்னில் தடவி, வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுக்கவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து துருவி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு, சோள மாவு சேர்த்துப் பிசையவும். பிசைந்த கலவையியில் கொஞ்சம் எடுத்து சொப்பு போல செய்து, வறுத்த கார்னை நடுவில் வைத்து, கொழுக்கட்டை போல் மூடவும். கொழுக்கட்டையை ரஸ்க் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

- செ.கலைவாணி, மேட்டூர் அணை

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்