Published:Updated:

வாசகிகள் கைமணம்!

முப்பால் அல்வா... அப்பப்பா என்ன சுவை!ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200

பிரீமியம் ஸ்டோரி
வாசகிகள் கைமணம்!

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

தினை - பனீர் ஒப்பட்டு

தேவையானவை: பனீர் துருவல், தினை மாவு - தலா 2 கப், பொடித்த கருப்பட்டி - 3 கப், தேங்காய்த்துருவல் - ஒரு கப், முந்திரி (சீவியது) - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, எண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை: தினை மாவுடன் கொஞ்சம் உப்பு, எண்ணெய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு தளர பிசைந்து அப்படியே வைக்கவும். கருப்பட்டியை சுத்தம் செய்து, பாகு காய்ச்சவும். அதனுடன் பனீர் துருவல் சேர்த்துக் கிளறவும். கெட்டியாக வரும்போது தேங்காய்த் துருவல், முந்திரி சேர்த்துக் கிளறவும். கடைசியில் ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்கு கிளறி எடுத்தால்... பூரணம் தயார்.

பிசைந்து வைத்திருக்கும் மாவில் இருந்து கொஞ்சம் எடுத்து சின்ன கிண்ணமாக செய்து அதனுள் பூரணத்தை வைத்து மூடி, மெல்லிய போளியாக வாழை இலையில் தட்டவும். தவாவில் சிறிதளவு நெய் விட்டு போளியைப் போடவும். சுற்றிலும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

- ஆர்.ராஜிவி, மேட்டுப்பாளையம்

முப்பால் கருப்பட்டி அல்வ

வாசகிகள் கைமணம்!

தேவையானவை:  ராகி, கோதுமை, கம்பு - தலா ஒரு கப், தூளாக்கிய கருப்பட்டி - 2 கப், நெய் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: ராகி, கோதுமை, கம்பு மூன்றை யும் தனித்தனியாக தண்ணீரில் ஊறவைக்கவும். கருப்பட்டியை நீரில் கரைத்து வடிகட்டி கம்பிப்பாகாக காய்ச்சி ஏலக் காய்த்தூள் சேர்த்து வைக்க வும். ஊறிய தானியங்களில் இருந்து நீரை வடித்து எடுத்து நைஸாக அரைத்து வடிகட்டி, பால் எடுக்கவும் (அரைக்கும்போது புது நீரை சேர்த்து அரைக்கவும்). நெய்யை உருக்கவும்.

தானியங்களின் பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றிக் கிளறவும். கெட்டியானதும், கருப்பட்டிப் பாகைச் சேர்த்துக் கிளறி, உருக்கிய நெய் சேர்த்து நன்கு கிளறவும். அல்வா பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.

இந்த அல்வாவை துண்டுகளாக கட் செய்து, மேலே முந்திரி பதித்து பரிமாறலாம்.

- தாரா மணிவண்ணன், கோவை

குயிக் கொத்சு

வாசகிகள் கைமணம்!

தேவையானவை: கத்திரிக்காய் - 5, சாம்பார் வெங்காயம் - 10 அல்லது 15, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கோஸ் - சிறிதளவு, கெட்டியான புளிக்கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கோஸ் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கி, உப்பு... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், புளிக்கரைசல் சேர்க்கவும். இதை குக்கரில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு... 5 அல்லது 6 விசில் வந்ததும் இறக்கவும். பின்பு கரண்டியால் நன்கு மசிக்கவும். எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்துக் கலந்து உபயோகப்படுத்தவும்.

இது இட்லிக்கு சூப்பர் காம்பினேஷன்!

- மேகலா, தேனாம்பேட்டை

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு