வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் `சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன்

நெல்லிக்காய் சாதம்
தேவையானவை: உதிர் உதிராக வடித்த பச்சரிசி சாதம் - ஒரு கப், பெரிய நெல்லிக்காய் - 10, வெங்காயத்தாள் - 8, பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்முறை: வெங்காயத்தாள், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், நெல்லிக்காய் சேர்த்து வதக்கி... உப்பு, வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
- வே.ந.யாழினி, வேலூர்
மிளகு காராசேவு
தேவையானவை: பச்சரிசி - அரை கிலோ, கடலைப்பருப்பு - அரை கிலோ, மிளகு - 50 கிராம், சீரகம் - 50 கிராம், சமையல் சோடா - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியையும் கடலைப்பருப்பையும் மாவாக அரைத்து வைத்துக்கொள்ளவும். மிளகைப் பொடித்து அதனுடன் சீரகம், உப்பு, சமையல் சோடா, அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, தண்ணீர்விட்டு பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, பிசைந்த மாவை, காராசேவு தட்டு பயன்படுத்தி, கார சேவுகளாகப் பிழிந்து, வேகவிட்டு எடுக்கவும்.
- க.நாகமுத்து, திண்டுக்கல்
பனீர் ஸ்டஃப்டு வீட் போண்டா
தேவையானவை: கோதுமை மாவு - ஒன்றரை கப், அரிசி மாவு - அரை கப், ஒரு இன்ச் அளவிலான பனீர் க்யூப்கள் - ஒரு கப், உருளைக்கிழங்கு - அரை கிலோ, இஞ்சி - பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, கட்டியில்லாமல் நன்றாக மசித்து, அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மாவு வகைகளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். பனீர் துண்டுகளை வெந்நீரில் போட்டு எடுத்து நீரைப் பிழிந்துவிட்டு, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தீயைக் குறைக்கவும். உருளைக்கிழங்கு மசாலாவில் எலுமிச்சை அளவு எடுத்து, ஒரு துண்டு பனீர் வைத்து உருட்டி, கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போடவும். பொன்னிறமாகச் சிவந்து மொறுமொறுப்பாக ஆனதும் எடுக்கவும்.
- இந்திராணி பொன்னுசாமி, சென்னை - 32
எக்ஸ்பெர்ட் கமென்ட்ஸ்:
நெல்லிக்காய் சாதம்: இஞ்சி துருவி சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
மிளகு காராசேவு: சமையல் சோடாவுக்குப் பதில் வெண்ணெய் சேர்த்துக்கொள்வது நல்லது.
பனீர் ஸ்டஃப்டு வீட் போண்டா: உருளைக்கிழங்குடன் கொத்தமல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய் இவற்றை அரைத்துச் சேர்த்துச் செய்யலாம்.