சுண்டல் செய்யும்போது, பயறு வகைகளை அதிக நேரம் ஊற வைக்காதீர்கள். தண்ணீர் கொழகொழப்பாக மாறுவதுடன், பயறும் சரியாக வேகாது. காலையில் சுண்டல் செய்வதாக இருந்தால், முதல் நாள் இரவும், மாலையில் செய்வதாக இருந்தால், காலையிலும் ஊற வைத்தால் போதும்.
- இந்திரா சந்திரன், திருச்சி
சமையல் செய்யும்போது, பாக்கெட் வைத்த ஏப்ரன் அணிந்து கொள்வது மிகவும் சௌகரியம். கை துடைத்துக் கொள்ள ஒரு கைக்குட்டை, மறந்த விஷயங்கள் நினைவுக்கு வரும்போது எழுத பேப்பர்-பென்சில், மொபைல் போன் இதையெல்லாம் கண்ட இடத்தில் வைத்துவிட்டு தேடாமலிருக்கலாம்!
- எம்.காந்திமதி கிருஷ்ணன், சென்னை-49
கோதுமை, மைதா மாவுகளில் சிப்ஸ் தயாரிப்பீர்கள்தானே! சிப்சுக்கான மசாலாக்கள் போட்டு மாவைத் தயாரித்து, சப்பாத்திக் கல்லில் தேய்த்துவிட்டு, அப்படியே கீறி கீறி துண்டுகளாக்குவதுதானே வழக்கம். இப்படிச் செய்தால், அது கல்லில் ஒட்டிக் கொண்டு, அடம் பிடித்து பிய்ந்து போகும். அதற்கு பதிலாக, ஒரு தட்டின் மேல் சிறிது மாவைத் தடவுங்கள். சப்பாத்தியை இந்தத் தட்டுக்கு மாற்றி பின்னர் துண்டுகள் போட்டால் சுலபமாக எடுத்துப் பொரிக்கலாம்.
எஸ்.லக்ஷ்மி, சென்னை-17
வாசகிகள் அனுப்பிய டிப்ஸ்களை தேர்ந்தெடுத்து, செய்து பார்த்து,
தொகுத்து வழங்கியவர்
விஜயலட்சுமி ராமாமிர்தம்
|