Published:Updated:

பெங்களூரில் ஆதரவற்றோரைத் தேடிப்பிடித்து உணவு தரும் ஐ.டி தம்பதி!

`பாட்டியை எல்லாரும் வேடிக்கைதான் பார்த்தாங்க. பாட்டிக்கு என்னாச்சுன்னு நின்னுகூட பார்க்கலை. நான் ஓடிப்போய், முகத்தில தண்ணீரைத் தெளிச்சு எழுப்பினேன். மெல்ல எழுந்திருச்ச பாட்டி, சாப்பிட்டு ரெண்டு நாளாச்சுன்னாங்க.’

வாரந்தோறும் பணிக்குச் செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று ஓய்வெடுக்க விரும்புவார்கள். ஆனால், பெங்களூருவில் வேலைபார்க்கும் தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ்-மோனிஷா தம்பதி, ஞாயிற்றுக்கிழமையானால் பெங்களூரு நகரின் வீதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு, ஆதரவற்ற நிலையில் தவிக்கும் மக்களைத் தேடியலைகிறார்கள். தங்கள் வீட்டிலேயே உணவு சமைத்து பொட்டலங்களாக்கி டூவிலரில் சென்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கும் உணவு படைத்து வருகிறார்கள்.

தயாராகும் சாப்பாடு
தயாராகும் சாப்பாடு

சுரேஷிடம் பேசினோம். ``சிங்கம்புணரிதான் எனக்குச் சொந்த ஊரு. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில கல்லூரி படிப்பை முடிச்சேன். படிப்பு முடிஞ்ச கையோட, சென்னையில ஒரு ஐ.டி நிறுவனத்துல வேலை கிடைச்சுச்சு. நல்ல சம்பளம்தான் ஆனாலும், மிஷின் மாதிரி வாழ்க்கை இருந்துச்சு. அப்பத்தான், வேளச்சேரியில இருக்கிற தீபம் டிரஸ்ட் பத்தி எனக்கு தெரியவந்துச்சு. ஆதரவற்றோர்களை அரவணைச்சு, அவங்களுக்கு சாப்பாடு போடுறதுதான் அவங்க வேலை.

அந்த டிரஸ்ட்ல சேர்ந்து என்னால முடிஞ்ச வேலைகளைச் செஞ்சேன். 10 வருஷம் வரைக்கும் தன்னார்வலராக வேலைபார்த்தேன். அங்க இருந்த நாள்கள் மனசுக்கு ரொம்பவே நிம்மதியான நாள்கள். ஜீவகாருண்யம் பற்றியும் அதோட அவசியம் பற்றி அங்கதான் தெரிஞ்சிக்கிட்டேன். அப்புறம் பெங்களூருல வேலை கிடைச்சது. ஐ.டி வேலைதான். நம்மால யாருக்கும் உதவ முடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கும். ஒருநாள் ஆபீஸ் போயிட்டு வர்ற வழியில, சாலை ஓரத்தில பாட்டி ஒருத்தவங்க மயங்கிக் கிடந்தாங்க.

உணவுப் பொட்டலங்கள்
உணவுப் பொட்டலங்கள்

பாட்டியை எல்லாரும் வேடிக்கைதான் பார்த்தாங்க. பாட்டிக்கு என்னாச்சுன்னு நின்னுகூட பார்க்கலை. நான் ஓடிப்போய், முகத்தில தண்ணீரைத் தெளிச்சு எழுப்பினேன். மெல்ல எழுந்திருச்ச பாட்டி, சாப்பிட்டு ரெண்டு நாளாச்சுன்னாங்க. அவரோட பையன் சாலையில் போட்டுட்டு போயிருக்கார். `தமிழ்நாட்டில் வள்ளலார் காப்பகம் இருக்கு. உங்களைக் கொண்டு போய் விடுறேன்... என்னோட வாங்க' ன்னு கூப்பிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனா, பாட்டி வரலைன்னு சொல்லிட்டாங்க. `என் பிள்ளை என்னை எப்படியும் வந்து கூட்டிட்டுப் போயிடுவான்'னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. இதுமாதிரி இருக்கவங்களுக்கு தினமும் முடியலைன்னாலும், வாரத்துக்கு ஒருநாளாவது சாப்பாடு கொடுக்கணும்னு முடிவு பண்ணேன். மூணு வருஷமாச்சு. அந்தப் பணி தொடர்ந்துக்கிட்டு இருக்கு.

ஆதரவற்றவர்கள்.
ஆதரவற்றவர்கள்.

பெங்களூருவைப் பொறுத்தவரை ஆதரவற்ற நிலையில் கிடக்குற பலர் தமிழ் பேசுறவங்கதான். சனிக்கிழமை சாயங்காலம் ஆபீஸ் விட்டு வரும்போது அரிசி, காய்கறி எல்லாம் வாங்கிட்டு வந்திடுவேன். அதிகாலையில் எழுந்திருச்சி நானும், மனைவியும் சமைப்போம். வெஜிடபுள் பிரியாணி, தக்காளி சாதம் செஞ்சு எடுத்துக்கிட்டு டூவிலர்ல கிளம்பிடுவோம். பத்து, பதினைந்து கிலோ மீட்டர் சுற்றி ஆதரவற்றவர்களைத் தேடிப்பிடிச்சு கொடுத்திடுவோம்.

ஆரம்பத்துல 25 பொட்டலங்கள்... இன்னைக்கு நண்பர்கள் உதவியோட சுமார் 90 பொட்டலங்களா மாறியிருக்கு. சாப்பாட்டை வாங்கின உடனே அவங்க முகத்துல ஒரு மலர்ச்சி வரும். அந்த முகமலர்ச்சியைப் பார்த்தாலே போதும்... நமக்கிருக்கும் சோர்வெல்லாம் ஓடிடும்.

சாப்பாடு வழங்கும் தம்பதி.
சாப்பாடு வழங்கும் தம்பதி.

இதற்காக, ஒரு வாட்ஸ்அப் குழு வச்சிருக்கேன். அதுல நண்பர்கள், உறவினர்கள்னு நிறைய பேரு இருக்காங்க. அவங்கல்லாம் எனக்குப் பக்கபலமாக இருக்காங்க. அவங்களால முடிஞ்ச பண உதவிகளைச் செய்றாங்க. ஆதரவற்றவங்களுக்கு தினமும் சாப்பாடு போடணும். அதுதான் எங்க நீண்ட நாள் ஆசை. கூடிய விரைவில் நடக்கும்னு நம்புறோம்" என்கிறார்கள் சுரேஷும் மோனிஷாவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு