Published:Updated:

கண்களுக்கு கவர்ச்சி, உடலுக்கு குளிர்ச்சி; 'குலுக்கி' சர்பத்ல என்ன ஸ்பெஷல்?

’குலுக்கி’ சர்பத்
News
’குலுக்கி’ சர்பத்

``பாட்டிலில் இருந்து சீறிய சோடா, கண்ணாடி டம்ளருக்குள் இருந்த மிளகாய், இஞ்சி பேஸ்ட், சப்ஜா விதைகள், எலுமிச்சை சாரம், சர்க்கரை நீர். என அனைத்தையும் ஒரு குலுக்கு குலுக்கி ஒன்றாக கலக்கச் செய்தது. சீறும் சோடாவை ஆயுதமாகப் பயன்படுத்தி குளிர்பானத்தில் பெளதிக மாற்றத்தை நிகழ்த்தினார்."

கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து செங்கோட்டை நோக்கிச் செல்லும் எழில் கவ்விய சாலை அது. சாலையோரத்தில் ஓர் அரச மரத்தடியில் மண்பானைகளும், கண்ணாடி டம்ளர்களும் நிறைந்த குளிர்பான கடைகள் பல வரிசையாய் காட்சியளித்தன. தாகத்தைத் தணித்துக்கொள்ள ஒரு கடையைத் தேர்ந்தெடுத்து, ``என்ன வகையான குளிர்பானங்கள் இருக்கின்றன?" என விசாரித்தோம்.

பல ரகங்களை அந்தக் கடையின் பெண்மணி எங்களுக்கு விவரித்தாலும், அவர் சொன்ன `குலுக்கி சர்பத்’ எனும் குளிர்பான ரகத்தையே சட்டென மனம் தேடியது. `நன்னாரி சர்பத், எலுமிச்சை சர்பத் கேள்விப்பட்டிருக்கிறோம், இது என்னடா `குலுக்கி சர்பத்’ என ஆச்சர்யம் எங்களுக்குள் உருவானது. குலுக்கி சர்பத்தின் தயாரிப்பு முறைகளை கவனிக்கலானோம்.

’குலுக்கி’ சர்பத்
’குலுக்கி’ சர்பத்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தயாரிக்கும் முறை:

ஒரு டம்ளரில் அரை எலுமிச்சையை சாறு பிழிந்து எலுமிச்சையையும் அதில் போட்டு, கொஞ்சம் காந்தாரி மிளகாய்த் துண்டை சேர்த்து, இரண்டு ஸ்பூன் இஞ்சி பேஸ்டைக் கலந்து, இரண்டு தேக்கரண்டி பஞ்சசாரா நீர் (சர்க்கரை நீர்) சேர்த்துக்கொண்டார் அந்தப் பெண். பிறகு கொஞ்சம் பச்சை சப்ஜா விதைகள் டம்ளருக்குள் அடைக்கலமாயின. பிஸ்தா, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, மேங்கோ என சுவைக்கு ஏற்ப வகை வகையாக அவர் வைத்திருக்கும் சாரங்களை, வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப கலந்துகொள்கிறார். அடுத்து நடக்கவிருந்த சம்பவம்தான் குலுக்கி சர்பத் எனும் பெயர் உருவானதற்கான காரணத்தை விளக்கியது.

குலுக்கி சர்பத்:

அமைதியாக வீற்றிருந்தன பல சோடா பாட்டில்கள்! ஒரு சோடா பாட்டிலை அலேக்காக கையில் எடுத்து, கீழே பதியப்பட்டிருக்கும் சிறிய ஆணியில் நங்கென அடித்தார் அந்தப் பெண். பாட்டிலின் மூடியில் ஆணி ஏற்படுத்திய சிறிய ஓட்டையிலிருந்து சீறிக்கொண்டு பாய்ந்தது சோடா. சீறும் சோடாவை கொஞ்சம் கண்ணாடி டம்ளருக்குள்ளும், கொஞ்சம் வானத்திற்கும் பறக்கவிட்டார் அந்த ஸ்டைலிஷ் பெண். பார்ப்பதற்கே வியப்பாக இருந்தது. என்ன ஒரு நயம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பாட்டிலில் இருந்து சீறிய சோடா, கண்ணாடி டம்ளருக்குள் இருந்த மிளகாய், இஞ்சி பேஸ்ட், சப்ஜா விதைகள், எலுமிச்சை சாரம், சர்க்கரை நீர். என அனைத்தையும் ஒரு குலுக்கு குலுக்கி ஒன்றாக கலக்கச் செய்தது. சீறும் சோடாவை ஆயுதமாகப் பயன்படுத்தி குளிர்பானத்தில் பெளதிக மாற்றத்தை நிகழ்த்தினார்.

பெரிய கண்ணாடி டம்ளர் நிறைய குலுக்கி சர்பத் எங்கள் கைகளில் அடைக்கலமானது. ஒவ்வொரு ரகத்தையும் கொஞ்சம் ருசித்துப் பார்த்தோம். குலுக்கி சர்பத்தின் சுவை நாவில் படர்ந்த போது ஒரு பேரானந்த நிலை! உணவு ரகங்களும் பேரானந்த நிலையைக் கொடுக்கும் என்பதற்கு குலுக்கி சர்பத் ஒரு சான்று. இனிப்பு, புளிப்பு, கார்ப்பு என அனைத்துச் சுவைகளும் நா மொட்டுகளின் கதவைத் தட்டி உள் நுழைந்தன.

’குலுக்கி’ சர்பத்
’குலுக்கி’ சர்பத்

மருத்துவ குணங்கள்:

காந்தாரி மிளகாய் மற்றும் இஞ்சியின் காரம், எலுமிச்சையின் புளிப்பு, பஞ்சசாரம் மற்றும் சப்ஜா விதைகளின் இனிப்பு என புதுமையான கலவைச் சுவை, நாவுக்கும் உடலுக்கும் மகிழ்ச்சியை ஊட்டின. காந்தாரி மிளகாய் மற்றும் இஞ்சிக்கு செரிமான சுரப்புகளை அதிகரிக்கும் சக்தி இருக்கிறது. இஞ்சியில் உள்ள எதிர்-ஆக்ஸிகரணிப் பொருள்கள் ஆரம்பகட்ட நோய் முதல் புற்றுநோய் வரை தடுக்கும் தன்மை உடையவை.

எலுமிச்சையின் மூலம் கிடைக்கும் வைட்டமின்–சி, நோய் எதிர்க்கும் கட்டமைப்பை மேம்படுத்தக்கூடியது. உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கும் வன்மை எலுமிச்சைக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து, வாந்தி உண்டாகும் உணர்வைக் குறைக்கக்கூடியவை சப்ஜா விதைகள்! சர்க்கரைக்கு பதிலாக பனைவெல்ல நீர் சேர்த்துக்கொண்டால், குலுக்கி சர்பத்தின் மருத்துவ குணங்கள் மேலும் அதிகரிக்கும். கலக்கப்படும் பழச்சாரங்களிலும் இயற்கைத்தன்மை இருந்தால் குலுக்கி சர்பத் இன்னும் சிறப்பாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறைந்த விலையில் நிறைவான பானம்:

இதற்கு முன்பு வெவ்வேறு இடங்களில் புதுமையான உணவு ரகங்களில் மெய்மறந்திருந்தாலும், குலுக்கி சர்பத் உண்டாக்கிய தாக்கம் மிகவும் புதுமையானது. இவ்வளவு சிறப்புகள் நிறைந்த குலுக்கி சர்பத்தின் விலை என்ன தெரியுமா? வெறும் 30 ரூபாய் மட்டுமே. இதுவே ஒரு பெரிய கடை என்றால் இதன் விலை 150 ரூபாய்க்கு குறையாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை!

சித்த மருத்துவர் விக்ரம்குமார்
சித்த மருத்துவர் விக்ரம்குமார்

எங்களோடு நன்றாக பழகிய அந்தப் பெண்மணி, குலுக்கி சர்பத்தை தயாரிக்கும் நயத்தை விளக்கியதோடு, குலுக்கி சர்பத்தின் தயாரிப்பை ஒரு முறை முயன்றும் பார்க்கச் சொன்னார். அவ்விடத்திலேயே குலுக்கி சர்பத்தை தயாரிக்க முயன்றேன். எல்லாம் கலக்கியாகிவிட்டது. ஆனால் சோடா பாட்டிலை உடைத்து சீறச் செய்யும் அந்த நுணுக்கம் மட்டும் இப்போது வேண்டாம் என்றார் அவர். சரியாக உடைக்காமல் போனால் பாட்டில் வெடித்து விடும் வாய்ப்பு இருப்பதால், அந்தப் பொறுப்பை மட்டும் அவரே எடுத்துக்கொண்டார். சாலையோரக் கடையில் குலுக்கி சர்பத்தினை தயாரித்த அனுபவம் புதுமையானது!

குலுக்கி சர்பத் கடையை கிட்டத்தட்ட 20 வருடங்களாக அதே இடத்தில் நடத்தி வருகிறாராம் அவர். ``குலுக்கி சர்பத் கொடுத்த வியாபாரத்தை வைத்து, தேவைக்கேற்ப வீடு, மகளுக்கு திருமணம் முடித்தாகிவிட்டது. வாழ்வாதாரமும் சமநிலை அடைந்துவிட்டது" என கொஞ்சும் மலையாளத்தில் பெருமிதத்துடன் எங்களோடு பகிர்ந்துகொண்டார் குலுக்கி சர்பத் நாயகி!

பயணங்கள் செல்லும்போது, அந்தந்தப் பகுதிகளிலுள்ள பாரம்பர்ய மற்றும் வித்தியாசமான உணவு ரகங்களை தவறாமல் சுவைத்துப் பாருங்கள். புதுமையான உணர்வு உங்கள் பசி உணர்வை அதிகரிக்கும். செரிமானத்தை தூண்டச் செய்யும். மூளைக்கும் புத்துணர்வு அளிக்கும். இயற்கை மணம் கமழ நாவிற்கு புதுச்சுவை வழங்கி, வயிற்றுக்கு இம்மியும் கெடுதல் தராமல் குளுமைப்படுத்தும் ஆரோக்கிய பானமான குலுக்கி சர்பத், விரும்புபவர்களின் உள்ளத்தை வஞ்சனை இல்லாமல் ஒட்டுமொத்தமாக கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

குலுக்கி சர்பத்… கலக்கலான அனுபவம்!...