Published:Updated:

`இல்லாதவர்களுக்கு இலவச 'இட்லி'; உதவிக்கரம் நீட்டிய ஹிந்துஸ்தான்’ - யார் இந்த ராணிப்பாட்டி?

புகைக்கு நடுவே இட்லி அவித்து, வடை சுட்டு வாழ்ந்துவரும்போதும் உணவுக்கு வழியின்றி வருவோருக்கு இலவசமாக இட்லியைக் கொடுத்து வரும் ராணி பாட்டியின் சேவையை அறிந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், தமது உதவிக்கரங்களை நீட்டியுள்ளது.

grandmother rani
grandmother rani

இல்லாதோருக்கு இலவசமாக இட்லி கொடுத்து உதவும் ராணி பாட்டிக்கு, கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு உள்ளிட்டவற்றை இலவசமாகக் கொடுத்து உதவியிருக்கிறது, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம்.

grandmother rani
grandmother rani

ராமேஸ்வரம் அகஸ்தியர் தீர்த்தம் பகுதியைச் சேர்ந்தவர், ராணி. 70 வயதாகும் இவரது பூர்வீகம் தனுஷ்கோடி. 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால், தனுஷ்கோடியிலிருந்து இடம்பெயர்ந்த ராணி, அகஸ்தியர் தீர்த்தம் பகுதியில், அரசு நிலத்தில் குடியிருந்து வருகிறார். அன்றிலிருந்து வாழ்வாதாரத்திற்காக அக்னிதீர்த்த கடற்கரை எதிரில் இட்லி வியாபாரம் செய்துவருகிறார்.

பத்துக்குப் பத்து அளவுள்ள சிறிய இடத்தில் தார்பாய் கட்டி, அதன் நிழலில் இட்லி, வடை சுட்டு விற்பனை செய்துவருகிறார். இவரது கடையில் யாத்ரீகர்கள், அப்பகுதியில் கூலி வேலை செய்து வருபவர்கள் எனப் பலரும், குறைந்த விலையில் இட்லி சாப்பிட்டு செல்கின்றனர். இவற்றுடன் அப்பகுதியில் உணவுக்கு வழியின்றி சுற்றித்திரியும் ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இட்லியை இலவசமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

grandmother rani
grandmother rani

வறுமையான வாழ்க்கை சூழலில் சிறு விறகு அடுப்பில் இருந்து வெளியேறும் புகைக்கு நடுவே இட்லி அவித்து, வடை சுட்டு வாழ்ந்து வரும் போதும் உணவுக்கு வழியின்றி வருவோருக்கு இலவசமாக இட்லியை உணவாக அளித்து வரும் ராணி பாட்டியின் சேவையை அறிந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தனது உதவி கரத்தை நீட்டியுள்ளது.

உணவுக்கு வழியின்றி வருவோருக்கு தனது ஏழ்மையை கருதாமல் இலவசமாக அளிக்கும் ராணி பாட்டிக்கு தெற்கு மண்டல ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் சார்பில் இலவசமாக கேஸ் சிலிண்டர்கள், அடுப்பு, புதிய இட்லி சட்டி, லைட்டர் என அனைத்தையும் வழங்கியுள்ளது. ராமநாதபுரம் எம்.எம்.என்.டி ஹிந்துஸ்தான் பெட்ரோலிய முகவர் மூலம்இவற்றை ராணி பாட்டியிடம் வழங்கி பெருமைபடுத்தியுள்ளது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம்.

grandmother rani's idley shop
grandmother rani's idley shop

சிலிண்டர் உள்ளிட்டவை இலவசமாக கிடைத்ததன் மூலம் எரியும் புகைக்கு நடுவே தரையில் அமர்ந்தபடி இட்லி அவிக்கும் ராணி பாட்டிக்கு புகையில் இருந்து விடிவு கிடைத்திருக்கிறது. இந்த உதவியானது மேலும் பலருக்கு இலவசமாக உணவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் ஏற்படுத்தியிருப்பதாக கூறி நெகிழ்கிறார் ராணி பாட்டி.