Published:Updated:

`சிங்கிள்ஸ்-க்குத் தனி ஏரியா; சிங்கிள் சீட்!' - கலக்கும் மயிலாடுதுறை ஹோட்டல்

ஹரீஷ் ம
பா.பிரசன்ன வெங்கடேஷ்

`சிங்கிள் பசங்களுக்கு எங்கேயும் இடம் இல்லையா..?' என்று புலம்பும் மொரட்டு சிங்கிள்ஸ்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது மயிலாடுதுறையில் ஒரு ஹோட்டல்.

மயிலாடுதுறை ஹோட்டல்
மயிலாடுதுறை ஹோட்டல்

"பொண்ண பார்த்தா மண்ண பாக்கும் சிங்கிள் பசங்க, கண்ண பார்த்தா ஸ்டன் ஆவாத சிங்கிள் பசங்க"ன்னு வெளியே மொரட்டு சிங்கிள்ஸ்களா கெத்து காட்டும் பசங்கள்ல நிறைய பேருக்கு நம்மளும் நம்மாளுகூட ஒரே கூல்ட்ரீங்க்ஸ்ல இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிக்க மாட்டமோனு ஏக்கம் இருக்கத்தான் செய்யும். பார்க், பீச் எனப் பல இடங்களிலும் புறக்கணிக்கப்படும் `சிங்கிள் பசங்களுக்கு எங்கேயும் இடம் இல்லையா..?' என்று புலம்பும் மொரட்டு சிங்கிள்ஸ்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது மயிலாடுதுறையில் ஒரு ஹோட்டல்.

ஹோட்டல்
ஹோட்டல்

சிங்கிள்ஸ்களுக்காகவே தனி ஏரியாவை ஒதுக்கி மகிழ்வித்திருக்கிறது மயிலாடுதுறையில் உள்ள நவாப் ரெஸ்டாரன்ட். மயிலாடுதுறை கால் டாக்ஸ் பகுதியில் இயங்கி வரும் நவாப் ரெஸ்டாரன்ட்தான் அங்குள்ள சிங்கிள்ஸ்களுக்கு சொர்க்க வாசல். அப்படி இந்த உணவகத்தில் மட்டும் என்ன ஸ்பெஷல்..?

பெரும்பாலான உணவகங்களில் நான்கு பேர் அமர்ந்து சாப்பிடும் டேபிள் இருக்கும். குடும்பமாகச் சேர்ந்து சாப்பிடும் அளவுக்கு 15 இருக்கைகள் கொண்ட ஃபேமிலி டேபிள் இருக்கும். ஆனால், இன்று காதல் ஜோடிகள் அமர்ந்து சாப்பிட இரண்டு இருக்கைகள் கொண்ட கப்புல்ஸ் டேபிள்ன்னு உணவகங்கள் காதல் ஜோடிகளைக் கவரத் தொடங்கிவிட்டன. இந்த யுக்தியை சற்று எதிர் கோணத்தில் கையாளத் தொடங்கி இருக்கிறது நவாப் ரெஸ்டாரன்ட். இந்த உணவகத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக தடை செய்யப்பட்டு `ஒன்லி என்ட்ரி பார் மொரட்டு சிங்கிள்ஸ்' என்ற அறிவிப்புப் பலகையுடன் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சிங்கிள் சீட்
சிங்கிள் சீட்

அந்தப் பகுதியில் ஒருவர் மட்டும் அமர்ந்து சாப்பிட ஒரு டேபிள், சேர் கிடக்கிறது. கம்பனிக்கு யாருமின்றி கவலையோடு உணவகத்துக்கு வருபவர்கள், அந்த சிங்கிள் சீட்டைப் பார்த்த உடன் உற்சாகமாகிவிடுகின்றனர். `சிங்கிள் சீட்டுகாகவே நிறைய சிங்கிள்ஸ் இந்த டேபிள்ல சாப்பிடுவாங்க' என்கிறார், இந்த ஐடியாவை தன் உணவகத்தில் வைத்த நவாப் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் முகமது அஸ்லான். அதன் பின்னணி குறித்துப் பேசிய அவர், ``எனக்கு வயசு 15 இருக்கும். ஸ்கூல்ல பத்தாவது படிச்சிட்டிருந்தேன் அப்போ நான் சிங்கிள்.

இப்போ எனக்கு வயசு 30. இப்போவும் நான் சிங்கிள்தான்னு புலம்பும் 90'ஸ் கிட்ஸ் ஒரு பக்கம், தமிழ் பாரம்பர்ய விளையாட்டுகள் அந்தக் காலத்து வாழ்க்கை முறைன்னு ஒண்ணுமே தெரியாம ஸ்மார்ட்போன் கலாசாரத்தில் வளரும் 2k கிட்ஸ் ஒரு பக்கம்ன்னு இருக்கும் ஜெனரேஷன் இது. அதான் என் உணவகத்தில் ஒரு பக்கம் சிங்கிள்ஸ்களுக்கான ஸ்பெஷல் டேபிள் ரெடி பண்ணி `ஒன்லி என்ட்ரி ஃபார் மொரட்டு சிங்கிள்' என்று தனி ஏரியாவை ஒதுக்கியாச்சு. அதேநேரம், உணவகத்தோட மறுபக்கம் ஃபேமிலி டேபிள். சுற்றி 90'ஸ் கிட்ஸ் வளர்ந்த விதம், அந்தக் காலத்து விளையாட்டுகள்ன்னு எல்லாத்தையும் சுவரில் படமா வரைஞ்சிருக்கேன்" என்றார்.

`ஒன்லி என்ட்ரி ஃபார் மொரட்டு சிங்கிள்ன்னு போட்டிருக்கே, வரும் வாடிக்கையாளர் சிங்கிளா, இல்லையான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க'ன்னு கேட்ட்டா, ```சிங்கிள் பசங்க நிறைய பேர் சாப்பிடுவாங்க, பொண்ணுங்ககூட நாங்களும் சிங்கிள்தான், நாங்களும் சாப்பிடுறோம்ன்னு சொல்லுவாங்க. ஆனா, ஒரு முறை ஒரு டாக்டர் வந்து சிங்கிள்ன்னு சொல்லி சாப்பிட உக்காந்து ஆர்டர் செஞ்சாங்க. சாப்பாடு வரதுக்குள்ள `நான் சிங்கிள் இல்ல, இங்க உக்காந்து சாப்பிட மனசு உறுத்துது. டேபிள் மாறிக்கிறேன்'னு சொல்லிட்டாங்க. சிங்கிள்ஸ் மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்பதற்கல்ல இந்த கான்செப்ட். சிங்கிளா வரவங்ககூட ஹாப்பியா சாப்பிடணும்ன்னுதான் இந்த கான்செப்ட்'' என்றார் அஸ்லான்.