Published:Updated:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தரிசனமும் மறக்க முடியாத மதிய உணவும்! | விருந்தோம்பல்

ஸ்ரீரங்கம் பரங்கிக்காய் புளிக்குழம்பு

ரசமும் மோரும் சாப்பிட்டதும் கை கழுவிவிட்டு, நேரே சமையற்கட்டுக்கு அருகே சென்று பரங்கிக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று கேட்டேன். அவர் முகத்தில் வெளிப்பட்ட சந்தோஷத்தை என்னால் விவரிக்க முடியவில்லை...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தரிசனமும் மறக்க முடியாத மதிய உணவும்! | விருந்தோம்பல்

ரசமும் மோரும் சாப்பிட்டதும் கை கழுவிவிட்டு, நேரே சமையற்கட்டுக்கு அருகே சென்று பரங்கிக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று கேட்டேன். அவர் முகத்தில் வெளிப்பட்ட சந்தோஷத்தை என்னால் விவரிக்க முடியவில்லை...

Published:Updated:
ஸ்ரீரங்கம் பரங்கிக்காய் புளிக்குழம்பு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையிலிருந்து அதிகாலையிலேயே கிளம்பி 108 வைணவ தேசத்தின் முதன்மைத் தலமான திருவரங்கத்துக்குச் சென்றோம். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அச்சிறுப்பாக்கம் கணேஷ் பவன் நாற்பது வருடங்களுக்கு மேலாக இயங்கும் உணவகம். அங்கே காலை உணவுக்காக நிறுத்தினோம். அன்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனாலும், அங்கு வரும் ஒவ்வொருவரையும் வரவேற்று இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்கும்படி வேண்டி, பின் உணவு பரிமாறினார்கள். இந்த உணவகத்தில் இட்லி, பொங்கல், பூரி, வடை, ஆப்பம், ரவா கிச்சடி என அனைத்தும் அசாதாரண சுவை. பின்பு, திருச்சியை நோக்கிப் பயணமானோம். நெடுஞ்சாலையில் செல்லும்போது தூரத்தில் பார்க்கும்போது அகண்ட காவிரிக்கரையில் பசுமையான தென்னை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ராஜகோபுரத்தைக் காண்பது வெகு அழகு!

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

திருவரங்கம் சென்றதும் கிழக்கு கோபுரம் `வெள்ளைக் கோபுரம்' என்று அழைக்கப்படுகிறது. அங்கே காரை நிறுத்திவிட்டு அரங்க நாதரை தரிசனம் செய்யச் சென்றோம். கோவிலுக்குச் செல்லும்போது நேரம் நண்பகல் 12 மணியைத் தாண்டிவிட்டது. உள்ளே வரும்போது கல்வெட்டுகள் முன்பு படங்கள் எடுத்துவிட்டு, அரங்க நாதர் சந்நிதி முன்பு சென்றோம். அன்று மார்கழி மாதம் மற்றும் விடுமுறை நாள் என்பதால், கூட்டம் அதிகமாகவே இருந்தது. நாங்கள் வரிசையில் நிற்கச் சென்றபோது 12.30 மணி முதல் 3.00 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்கிற அறிவிப்பு வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனே, அதே வழியில் வெளியே வந்து வெள்ளைக் கோபுரம் அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடலாம் என்று நடந்தோம். அங்கு ஒரு சிறிய கடையாக இருந்த சித்ரா ஹோட்டலுக்குள் நுழைந்தோம். உள்ளே சென்றதும் அவர்கள், `அளவுச் சாப்பாடு மட்டும்தான்... விலை `30 ரூபாய். மற்றபடி டிபன், ஃப்ரைடு ரைஸ் போன்ற உணவு வகைகள் ஏதும் இங்கு கிடையாது’ என்றார்கள். என் மகனுக்கு எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் மதிய சாப்பாடு மட்டும் சாப்பிட முனங்குவான்.

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

பின்னர், இரண்டு சாப்பாடு ஆர்டர் செய்ததும் வாழை இலையைப் போட்டார்கள். அதில் பீன்ஸ் பொரியல் மற்றும் அப்பளம் வைத்ததும் சுடச்சுட சாதத்தை வைத்தார்கள். முதலில் சாம்பார் பரிமாறினார்கள். அடுத்து கடை முதலாளி வந்து மணக்க மணக்க பரங்கிக்காய் புளிக்குழம்பைப் பரிமாறினார். இதற்கு முன்பு இந்தக் குழம்பை நாங்கள் சுவைத்ததும் இல்லை; கேள்விப் பட்டதும் இல்லை. அவர் எங்களுக்கு பரிமாறும்போது சின்ன பையன் சாப்பிடாமல் இருக்கிறானே என்று, அவனுக்கு ஒரு தனி இலையைப் போட்டு `தம்பி மோர் சாதம் மட்டுமாவது சாப்பிடு' என்று சொல்லி சாப்பிட வைத்தார். கடை முதலாளியும் அங்கு பரிமாறுபவர்களும் தங்கள் வீட்டுக்கு வந்த விருந்தினரைப் போலவே அனைவரையும் உபசரிக்கும் குணத்தைப் பார்த்து வியப்பாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

(இனிய முகத்தோடு விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.)


இந்தக் குறளின் பொருளை அங்கு முழுமையாக உணர்ந்துகொண்டோம்.

எங்கள் இருவருக்கும் அன்று பரங்கிக்காயின் புளிக்குழம்பின் சுவை மிகவும் பிடித்திருந்தது. பின் ரசமும் மோரும் சாப்பிட்டதும் கை கழுவிவிட்டு, நேரே சமையற்கட்டுக்கு அருகே சென்று பரங்கிக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று கேட்டேன். அவர் முகத்தில் வெளிப்பட்ட சந்தோஷத்தை என்னால் விவரிக்க முடியவில்லை. பிறகு, அந்தச் சமையல் குறிப்பை எனக்கு விளக்கிக் கூறினார்.

பிரமாண்டமான கட்டமைப்பு ஏதும் இல்லாத ஒரு சிறிய கடையில் அற்புதமான உணவைத் தயாரித்து அன்போடு உபசரிப்பது இந்தக் காலத்தில் அபூர்வமே.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

பின்னர், கோயிலுக்கு வந்து அரங்கனை தரிசனம் செய்தோம். அடுத்து திருவரங்கம் பிரசாதமான ஸ்பெஷல் மிளகு வடையையும் புளியோதரையையும் சாப்பிட்டுவிட்டு, வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்வாமிகளைத் தரிசனம் செய்து கிளம்பினோம். பின் வெள்ளைக் கோபுரம் வாசலில் இருந்து ராஜ கோபுரம் வாசலுக்கு வந்தோம். பரபரப்பான ராஜ கோபுரத்துக்கு எதிரே அமைந்துள்ள முரளி காபி ஷாப்பில் ஃபில்டர் காபியை ருசித்ததும், ஒரு தனி புத்துணர்ச்சி ஏற்பட்டது.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர்கள் தரும் ஃபில்டர் காபியின் சுவை ஒரு துளியும் மாறவில்லை. அந்தச் சுவையை வேறெங்கும் காண முடியவில்லை.

இப்போதெல்லாம் பயணம் என்றாலே இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு பல ஏற்பாடுகள் செய்வது வழக்கமாகிவிட்டது. எனினும், எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் இதுபோல செய்யப்படும் திடீர் பிரயாணமும் சில நேரங்களில் நன்றாகத்தான் உள்ளது. எதிர்பாரா சுவாரஸ்யங்களும் காணக் கிடைக்கின்றன.

பின் மறுநாள் மதிய உணவுக்கு அவர் கூறிய செய்முறையின்படி பரங்கிக்காய் புளிக்குழம்பை செய்து பார்த்தேன். குழம்பு அதே சுவையில் இருந்ததில் மிக மகிழ்ச்சி. இந்தக் குழம்பை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடும்போது காரம், புளிப்போடு பரங்கிக்காயில் உள்ள லேசான இனிப்பும் சேரும்போது சுவையோ சுவை. தொட்டுக்கொள்ள கூட்டு, பொரியல் எதுவுமே தேவையில்லை. அப்பளம் மட்டுமே போதும்.

அன்று மாலை `சபாபதி’ படத்தைப் பார்த்தபோது, அதில் திருவரங்கம் வெள்ளைக் கோபுரம் வாசலில் அமைந்துள்ள அதே சித்ரா ஹோட்டலில் படம் பிடித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தது இன்னொரு சர்ப்ரைஸ்.

`விருந்தோம்பல்’ பகுதியில் வெளியான `வெஜிடபிள் மோமோஸ்’ ரெசிபியை அன்று மாலையே செய்து பார்த்தோம் என்று ஃபேஸ்புக் பக்கத்தில் கமென்ட்ஸ் அனுப்பியிருந்தார்கள். பதிவைப் பார்த்தது அமெரிக்காவிலுள்ள நண்பர்கள் அனுப்பியிருந்த மின் அஞ்சல்களைப் படிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.

இப்போது நாம் பரங்கிக்காய் புளிக்குழம்பு செய்முறையைப் பார்ப்போம்.

பரங்கிக்காய் புளிக்குழம்பு

தேவையான பொருள்கள்
சின்ன வெங்காயம் - 20
பூண்டு பற்கள் - 10
தக்காளி - ஒன்று
புளி - நடுத்தர எலுமிச்சை அளவு
பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் - அரை கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
தனியா தூள் - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கடுகு & உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
கட்டி பெருங்காயம் - சிறிய துண்டு
வெல்லம் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஸ்டெப் 1
புளியை சூடான நீரில் ஊறவைத்து 2 கப் தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.

ஸ்டெப் 2
கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், அதில் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

ஸ்டெப் 3
பின் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதோடு, பொடியாக நறுக்கிய பரங்கிக்காயைச் சேர்த்து கைவிடாமல் வதக்கவும். பரங்கிக்காய் பாதி வெந்ததும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைச்சலை சேர்த்து, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் தனியா தூள் சேர்த்துக் கலந்து, மூடி வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

ஸ்டெப் 4
குழம்பு கொதி வர ஆரம்பித்ததும் வெல்லம் மற்றும் கட்டிப் பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும். குழம்பு மேலே எண்ணெய் மிதக்கும் வரை கொதித்ததும் இறக்கவும்.

பரங்கிக்காய் புளிக்குழம்பு
பரங்கிக்காய் புளிக்குழம்பு

ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் பரங்கிக்காய் புளிக் குழம்பு ரெசிபியை விருந்தோம்பல் வீடியோவில் காணலாம். (விருந்தோம்பல் லிங்க்: https://www.youtube.com/c/Virundhombal)

Muthulakshmi
Muthulakshmi

சித்ரா ஹோட்டல் சமையல் கலைஞர் கூறிய குட்டி டிப்ஸ்!
* பரங்கிக்காயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஏனென்றால், அவற்றை வதக்கும்போதே பாதி வெந்துவிட வேண்டும். பரங்கிக்காயையும் சிறிதளவு சேர்த்தால் போதும்.
* குழம்பு ரொம்ப திக்காக இருக்கக் கூடாது.
* பரங்கிக்காய்க்குப் பதிலாக வெண்டைக்காய் அல்லது மணத்தக்காளி வத்தல் வைத்தும் செய்யலாம். புளி சேர்த்து செய்வதால் ஒரே ஒரு தக்காளிப்பழம் போதும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism