Published:Updated:

சேச்சி சொன்ன மேஜிக் விழுது ரகசியம் | விருந்தோம்பல் | My Vikatan

மணிமுத்தாறு அருவி

`இந்த மேஜிக் விழுதை புடலங்காய் பொரியலில் மட்டுமல்ல; கேரட் பொரியல், கோஸ் பொரியல், நூல்கோல் பொரியல் என எதற்கு வேண்டுமானாலும் சேர்க்கலாம்’ என்றார் சேச்சி. பிறகு அருகில் இருந்த அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று தோட்டத்தை சுற்றிக் காண்பித்தார்.

சேச்சி சொன்ன மேஜிக் விழுது ரகசியம் | விருந்தோம்பல் | My Vikatan

`இந்த மேஜிக் விழுதை புடலங்காய் பொரியலில் மட்டுமல்ல; கேரட் பொரியல், கோஸ் பொரியல், நூல்கோல் பொரியல் என எதற்கு வேண்டுமானாலும் சேர்க்கலாம்’ என்றார் சேச்சி. பிறகு அருகில் இருந்த அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று தோட்டத்தை சுற்றிக் காண்பித்தார்.

Published:Updated:
மணிமுத்தாறு அருவி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

குடும்பத்தில் ஒவ்வொருவரும் அவரின் பணி சார்ந்து வெவ்வேறு ஊர்களில் புலம் பெயர்ந்துவிட்டோம். என்றாலும்கூட, திருநெல்வேலியில் உள்ள சொந்தபந்தங்களைத் தேடி அடிக்கடி அங்கு சென்று வருவது வழக்கம். அதற்கேற்றவாறு குடும்பத்திலும் அவ்வப்போது விசேஷங்கள் வந்துகொண்டே இருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்படி ஒரு விழாவுக்குச் சென்றிருந்தோம்.

குடும்பத்தில் அனைவரும் கூடியிருந்ததால் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. அப்போது அரையாண்டு தேர்வு விடுமுறை நாள்களாக இருந்ததால் அனைத்து சிறுவர்களும் வந்திருந்தனர். இப்படி சொந்தங்கள் சூழ அனைவரும் பேசி மகிழ்ந்துகொண்டிருக்கும்போது, `ஒரு சின்ன 'ஒன் டே டிரிப்' பிளான் போடலாமா’ என்று யோசனை செய்தோம். இந்தத் தலைமுறை சிறுவர்கள் அடிக்கடி கூறும் வார்த்தை `போர் அடிக்கிறது.' சரி அவர்களுக்கு ஏற்றவாறு `போர் அடிக்காமலும்' பயனுள்ளதாகவும் பயணம் இருக்க வேண்டுமே என்பதற்காக சில சுவாரஸ்யமான இடங்களைத் தேர்வு செய்தோம்.

சேச்சி சொன்ன மேஜிக் விழுது ரகசியம் | விருந்தோம்பல் | My Vikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மறுநாள் காலை ஒரு நாள் பயணமாக பாபநாசம், அகஸ்தியர் அருவி, காரையார் அணை மற்றும் மணிமுத்தாறு புறப்பட்டோம். பெரும்பாலும் பத்து வயதுக்குக் கீழே உள்ள வாண்டுகள். வேன் கிளம்புவதற்குள், `சித்தப்பா எனக்கு பொட்டோட்டோ சிப்ஸ்' என்று ஒருவன் சொல்ல, இன்னொருவன் தனக்கு `கேரமல் பாப்கார்ன்' வேணும் என்றான். அனைவரையும் சமாதானப்படுத்தி வேனில் உட்கார வைப்பதே பெரிய காரியமாக இருந்தது. அவர்கள் முகத்தை `உர்' என்று வைத்துக்கொண்டு வந்தால் பயணம் நன்றாக இருக்காது அல்லவா? அதனால் நாங்கள் வாண்டுகளோடு பேச்சு கொடுத்துக்கொண்டே சென்றோம். ஒவ்வொருவரையும் தங்களை மகாபாரதத்தில் வரும் பாத்திரங்களாக கற்பனை செய்து கொள்ளும்படி கூறினோம். பயணம் ஆரம்பித்தது முதல் ஒவ்வொருவரும் `நான்தான் அர்ஜுனன்' , `நான்தான் பீமன்' என்று கற்பனை செய்துகொண்டும், வீர வசனங்களை பேசிக்கொண்டும், நடுவே சின்ன சண்டைகளைப் போட்டுக்கொண்டும் வந்தார்கள். தினம் தினம் பரபரப்பாகப் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு இது போல பேசுவதற்கும் விளையாடுவதற்கும் இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லையே...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பாபநாசம் சென்றோம். பாபநாசம் (தாமிரபரணி) ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் படித்துறையில் நின்று வேடிக்கை பார்த்தோம். பாண தீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தமென்று முக்கிய தீர்த்தங்களைக் கடந்து, பாபநாசம் வழியாகத் தாமிரபரணி ஆறு செல்கிறது.

சேச்சி சொன்ன மேஜிக் விழுது ரகசியம் | விருந்தோம்பல் | My Vikatan

அடுத்து அகஸ்தியர் அருவிக்குச் சென்றோம். வேனில் இருந்து இறங்கி அருவிக்குச் செல்லத் தயாராவதற்குள், ஒரு வாண்டு அங்கிருந்த குரங்குக்கு தனக்கு கொடுத்த சிப்ஸை ஊட்டி விட ஆரம்பித்துவிட்டான். அவனை செல்லமாக சில்வண்டு என்று கூப்பிடுவோம். வண்டு நான்ஸ்டாப்பாக ரீங்காரம் செய்வது
போலவே அவன் செல்லும் இடங்களில் எல்லாம் தனது சில்லென்ற குரலால் ஆயிரம் கேள்விகள், சந்தேகங்களை நான்ஸ்டாப்பாகக் கேட்பான்! அவனை சமாதானம் செய்து மெதுவாக அங்கிருந்து கூட்டி வருவதே பெரிய காரியமாகிவிட்டது. நடந்து போகும் பாதையில் சிறுவர்கள் தரையில் படர்ந்து கிடக்கும் தொட்டாற்சிணுங்கி செடிகளைக் கைகளால் தொட்டுப் பார்த்து விளையாடிக்கொண்டே வந்தார்கள். பின் அருவியில் நல்ல ஆட்டம் போட்டு குளித்தார்கள். சிறுவர்கள் அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி. இப்படி குழந்தைகளோடு செல்லும்போதுதான் நமக்குள்ளே இருக்கும் குழந்தைத்தனமும் வெளியே வருவதை உணர முடியும்!

ஒரு வாண்டு அங்கிருந்த குரங்குக்கு தனக்கு கொடுத்த சிப்ஸை ஊட்டி விட ஆரம்பித்துவிட்டான். அவனை செல்லமாக சில்வண்டு என்று கூப்பிடுவோம். வண்டு நான்ஸ்டாப்பாக ரீங்காரம் செய்வது
போலவே அவன் செல்லும் இடங்களில் எல்லாம் தனது சில்லென்ற குரலால் ஆயிரம் கேள்விகள், சந்தேகங்களை நான்ஸ்டாப்பாகக் கேட்பான்!

பின் காரையாறு அணைக்கு கிளம்பினோம். அந்த வருடம் வடகிழக்கு பருவமழை சீஸனில் பலத்த மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. அதனால் அப்போது படகுச் சவாரிக்குத் தடைவிதித்திருந்தனர். பிறகு, அணையின் மேலே நடந்துகொண்டே வேடிக்கை பார்த்தோம். சிறுவர்களுக்கு அணையைப் பார்த்ததும் ஒரே மகிழ்ச்சி. அணை தண்ணீரின் மேலே மலைகள் மற்றும் மரங்களின் நிழல் ஏதோ கண்ணாடியின் மேலே விழுவது போல காட்சி அளித்தது.

வழக்கம் போல சில்வண்டு சித்தப்பாவிடம், `அணை எதற்கு, ஏன்’ என்று ஆரம்பித்தான். அவனிடம் மின் உற்பத்திக்காகவும், பாசனத்துக்கான நீர் தேவைக்காகவும் அணை கட்டப்பட்டது என்று கூறியபடி நடந்து வந்தோம்.

Karaiyar Dam
Karaiyar Dam

சிறுவர்களுக்கு பசி எடுத்ததும் கொஞ்சம் பேட்டரி டவுன் ஆகிவிட்டது. காரையார் அணைக்கு அருகே அமைந்துள்ள `அஜோய்' உணவகத்துக்குச் சென்றோம். உள்ளே சென்ற பிறகுதான் அது அசைவ ஸ்பெஷல் உணவகம் என்று தெரிந்தது. நேரம் ஆகிவிட்டது. அங்குதான் சாப்பிட்டாக வேண்டும்.

உணவகத்தில் உள்ள சேச்சியிடம், `சைவம் ஏதும் இல்லையா’ என்று கேட்டோம். சேச்சி அதற்கு `சாம்பார் இருக்கு. ஒரு பத்து நிமிடங்கள் காத்திருங்கள். பொரியல் செய்து தருகிறேன்’ என்றார். சேச்சி வேகமாக இரண்டு புடலங்காயை எடுத்து மெலிதாக நறுக்கிக்கொண்டார். பிறகு தாளித்து, புடலங்காயை வதக்கி, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து பத்தே நிமிடத்தில் சுவையான புடலங்காய் பொரியலை செய்ததோடு, அப்பளத்தையும் பொரித்தார்.

எங்கள் எல்லோரையும் அமரும்படி கூறி, எல்லோருக்கும் பரிமாறினார். புடலங்காய் பொரியல் அழகிய இளம் பச்சை நிறத்தில் மிகவும் ருசியாக இருந்தது. பின்னர் சமையல் குறிப்பு கேட்டதும் சேச்சிக்கு ஒரே மகிழ்ச்சி. அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் வீட்டில் பாபநாசம் ஸ்டைல் புடலங்காய் பொரியல்தான்.

அவர் சேர்த்த அந்தத் தேங்காய் விழுதில்தான் அந்த டேஸ்டி மேஜிக் மறைந்திருந்தது. `தேங்காய்ப்பூ, பச்சை மிளகாய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வெந்த புடலங்காயோடு கலந்து பிரட்டி இறக்கினால் சுவையான புடலங்காய் பொரியல் தயார். புடலங்காயை சரியாக சமைக்காவிட்டால் ருசிக்காது’ என்றார் சேச்சி. இப்படி செய்தால் புடலங்காயை வெறுப்பவர்களும் சாப்பிடுவார்கள் என்றார் அவர்.

இந்த மேஜிக் விழுதைப் புடலங்காய் பொரியலில் மட்டுமல்ல; கேரட் பொரியல், கோஸ் பொரியல், நூல்கோல் பொரியல் என எதற்கு வேண்டுமானாலும் சேர்க்கலாம்’ என்றார் சேச்சி. பிறகு அருகில் இருந்த அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று தோட்டத்தை சுற்றிக் காண்பித்தார். கிளம்பும்போது சிறுவர்கள் எல்லோருக்கும் தேன் மிட்டாய் கொடுத்தார்கள்.

சேச்சி சொன்ன மேஜிக் விழுது ரகசியம் | விருந்தோம்பல் | My Vikatan

பிறகு அங்கிருந்து மணிமுத்தாறு அணைக்குச் சென்றோம். அணையைப் பார்ப்பதற்கு முக்கால்வாசி தூரம் மேலே ஏறியதுமே குழந்தைகளின் கால்கள் சோர்ந்துவிட்டன. மூச்சு விடவே முடியவில்லை என்று குழந்தைகள் முணுமுணுப்பு ஆரம்பித்து விட்டது. `மேலே பார்க்காதீங்க... அப்படியே திரும்பி கீழே பாருங்க... எவ்வளவு தூரம் வந்தாச்சு! நாம் செல்ல வேண்டியது இன்னும் கொஞ்சம் தூரம்தான்’ என்று சமாதானம் செய்து மேலே அழைத்துச் சென்றோம். அங்கே அந்த அழகைப் பார்த்து ரசித்ததும் குழந்தைகள் வலியை மறந்துவிட்டார்கள். பின் பூங்காவில் சிறிது நேரம் கழித்துவிட்டு ஊருக்குக் கிளம்பினோம்.


இது போன்ற குட்டி சுற்றுலாக்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்லும்போது, அவர்கள் நம்மோடு உரையாடி மகிழும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைப்பது உறுதி. தெரியாத இடங்களில் எப்படி அணுகுவது, சக மனிதர்களிடம் எப்படி உதவி கேட்பது போன்ற பழக்கவழக்கங்களை குழந்தைகள் கற்றுக்கொள்ளவும் சுற்றுலாக்களே வாய்ப்பு தரும். குழந்தைகளின் விடுமுறை நாள்களில் செல்போன் திரைக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்ளாமல், நம் ஊரைச் சுற்றியிருக்கும் இயற்கை அதிசயங்களை ரசிக்கச் செய்ய வேண்டும். இந்த நினைவுகளே அவர்களின் மனதில் என்றும் அழியாத கோலங்களாக வரையப்படும்.

சேச்சி கற்றுத் தந்த புடலங்காய் பொரியல் செய்முறையைப் பார்ப்போமா!

பாபநாசம் புடலங்காய் பொரியல்

தேவையான பொருள்கள்:
புடலங்காய் - 2
தேங்காய்த் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
பூண்டுப் பற்கள் - 3
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை


ஸ்டெப் 1
புடலங்காயைக் கழுவிய பின் பாதியாக நறுக்கி நடுவில் உள்ள சதைப் பற்றுள்ள பகுதியை நீக்கிவிட வேண்டும். பிறகு, மெலிதாக பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஸ்டெப் 2
தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3
வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள புடலங்காயை சேர்த்து வதக்கவும்.

ஸ்டெப் 4
புடலங்காய் சிறிது நேரம் வதங்கியதும் சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து மிதமான சூட்டில் வேகவைக்கவும். நடுவே திறந்து கிளறி விடவும்.

ஸ்டெப் 5
புடலங்காய் வெந்ததும் தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்து நன்றாகப் பிரட்டி, சீரகத்தின் பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

My Vikatan -இல் இதுவரை வெளியான விருந்தோம்பல் சிறப்பு ரெசிப்பி வீடியோக்களை இங்கே https://bit.ly/3Op3QQ2 காணலாம்.

இந்த புடலங்காய் பொரியலை நீங்கள் அப்படியே சாலட் போலவும் சாப்பிடலாம். அந்த அளவுக்கு அதிக சுவையாக இருக்கும். நீங்களும் இதேபோல செய்து ருசித்து பாருங்கள். அடுத்து மற்றும் ஒர் அறுசுவை அனுபவ உணவோடு சந்திப்போம்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism